நாய் சேகர் காமெடியில் அசத்துகிறதா ?

இயக்கம் – கிஷோர் ராஜசேகர்
நடிகர்கள் – சதீஷ், பவித்ரா லட்சுமி

கதை – ஐடி இளைஞன் ஒருவனை நாய் கடிக்க அவனது டிஎன்ஏ நாய்க்கும், நாயின் டிஎன்ஏ அவனுக்கும் மாற அவனுக்கு நாயின் குணம் வருகிறது அதனால் வரும் பிரச்சனைகளை அவன் எப்படி சமாளிக்கிறான் எப்படி அதிலிருந்து வெளிவருகிறான் என்பதே கதை.

ஐடியில் வேலையை விட்டு எப்போது தூக்குவார்கள் என கலக்கத்துடன் வேலை பார்த்து வருகிறார் சதீஷ். எல்லொரிடமும் எரிந்து விழுபவர் ஆபிஸில் பவித் ரா லட்சுமியை காதலிக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஷை கடித்து விடுகிறது.

நாய் கடித்த நொடியில்
நாயின் டிஎன்ஏ அவருக்குள் பரவி நாயின் குணாதிசயங்கள் சதிஷுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. தன் பிரச்சனைகளை சமாளித்தாரா? நாயின் குணத்திலிருந்து வெளிவந்தாரா சதீஷ் எனபதே மொத்தப்படம்


காமெடியனாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் சதீஷ் முதல்முறையாக கதை நாயகனாக நடித்திருக்கும் படம். கொஞ்சம் தப்பித்திருக்கிறார் என்றே சொல்லலாம். காமெடியன் என்பதால் படத்தில் பெரிதாக ஹீரோ வேலையெல்லாம் இல்லை. காமெடி செய்யும் போது என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையே தான் இதிலும் செய்திருக்கிறார். கூடவே கொஞ்சம் காதலும் டான்ஸும் செய்திருக்கிறார்.

நாயின் குணாதிசயங்கள் அவருக்குள் வந்தவுடன் நாயைப் போல் செய்வது, பின்னர் அதை உணர்ந்து வருந்துவது என கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

பவித்ரா லட்சுமி நாயகி பாத்திரம் அழகு பொம்மையாக வந்திருக்கிறார். நாயின் குரலாக மிர்ச்சி சிவா பல இடங்களில் கவர்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார்கள்.

இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையானதை செய்திருக்கின்றன.

படத்தின் முதல் முக்கால் மணி நேரம் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. படத்தின் கதையே இடைவேளையில் தான் ஆரம்பமாகிறது. க்ளைமாக்ஸ்க்கு முந்தைய 1/2 மணி நேரம் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் பல காட்சிகளில் எரிச்சலே மிஞ்சுகிறது.

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். ஐடியா பிடித்தவர் கொஞ்சம் காட்சிகளில் உருவாக்கத்திலும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறும்பட இயக்குநர் என்பது படத்தின் பல இடங்களில் தெரிகிறது. மருந்தே தயாரான பிறகும் சதீஷ் போட்டுக்கொள்ளாமல் சுற்றுகிறார். படம் முழுக்க இப்படி லாஜிக்கில் கோட்டை விட்டுள்ளார்கள்.

கடைசி அரைமணி நேரத்திற்காக மொத்த படத்தையும் பார்க்க வேண்டியதாகிறது.

ஒரு நல்ல ஐடியா ஆனால் ஒரு நல்ல காமெடி திரைப்படமாக மாறவில்லை.