நடிகர் சந்தானம் நிஜமாகவே ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார்! – ஆர்யா ஹேப்பி

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “சக்க போடு போடு ராஜா”. நடிகர் சிலம்பரசன் முதல் முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக ஆர்யா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

விழாவில் விவேக் பேசிய போது, “ இங்கே சிம்பு மற்றும் சந்தானம் ரசிகர்கள் நிறைய பேர் வந்துள்ளனர்.அவர்கள் சிம்பு, சந்தானம் பெயரை சொல்லும் போது மட்டும் கைதட்டுவதோடு மட்டுமில்லாமல் ஒரு விழாவென்று வந்துவிட்டால்,யாருடைய பெயர் சொன்னாலும் கைதட்ட வேண்டும். அதுவே நல்ல ரசிகனுக்கான பண்பு.

சினிமா எடுப்பதை போல் ரிலீஸ் செய்வதும் கஷ்டமாக உள்ளது. படம் வெளியாகும் சமயத்தில் தலைப்பு பிரச்சினை வருகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை மணப்பெண் ரெடியாக இருந்தாலும், மண்டபம் கிடைப்பதில்லை.அதுபோல், படம் ரெடியாகிவிட்டாலும் தியேட்டர் கிடைப்ப தில்லை.கிடைத்தாலும் நல்ல காட்சிகள் கிடைப்பதில்லை. அடை மழை வரக்கூடாது. வானிலை நன்றாக இருக்க வேண்டும். திருட்டு விசிடி வரக்கூடாது.இப்படி பல பிரச்சினைகள் உள்ளது.

ஒரு ஸ்டார் சிம்பு இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது சந்தோஷம்.அவரைப் பற்றி சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. எனவே ஒன்றை அவருக்கு சொல்கிறேன்.சிம்பு நல்ல திறமைசாலியானவர்.அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் உள்ளது.அவர் தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சினிமாவில் தன் கவனத்தை செலுத்த வேண்டும்.” என பேசினார் விவேக்.

விழாவில் சந்தானம் பேசும்போது…”ஆர்யா என் நண்பர். அவர் சைக்கிளிங் செய்வதற்கு ஒதுக்கும் நேரத்தை சினிமாவுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு நேரம் தினமும் சைக்கிளிங் செய்கிறார். அதை விட்டால் இந்தியளவில் அவர் பெரிய நடிகராக வருவார்.

விடிவி கணேஷ் ஹீரோவை ரிலாக்ஸ் ஆக வைத்திருப்பார். அவர் ஒரு நல்ல தயாரிப்பாளர். மாஸ் நடிகருக்குதான் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால் தமாசு நடிகரான எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.அவர்கள்தான் என் மேல் நம்பிக்கை வைத்து ஹீரோவாக நடிக்கச் சொன்னார்கள்.” என்று பேசினார் சந்தானம்.

மேலும் அவர் பேசிய போது , “சிம்பு தான் தனக்கு குருநாதர். அவரது வழிநடத்தலாலேயே தான் இந்த இடத்திற்கு வரமுடிந்தது. இந்த படத்திற்காக இசையமைக்க அவரிடம் அணுகிய போது, முதலில் யோசித்தார், பின்னர் சம்மதம் தெரிவித்து தற்போது பாடல்களுக்கு அருமையாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அவரது பிசியான நேரத்திலும் தனது படத்திற்கு சிறந்த இசையமைத்த சிம்பு, படத்தின் டிரைலருக்காகவும் இரவு, பகல் பார்க்காமல் உழைத்தார்.

அது மட்டுமில்லாமல்  படத்தில் மாஸான சில பஞ்ச் வசங்களையும் தனக்காக எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் 5 இசையமைப்பார்கள் பாடல்களை பாடியுள்ளனர் என்பது படத்திற்கு சிறப்பு. யுவன் இசையில் சிம்பு பாடுவதை கேட்டிருப்போம். சிம்பு இசையில் யுவன் பாடுவதை விரைவில் கேட்போம். நடிகர் ஆர்யா, இயக்குநர் ராஜேஷ் தனது நெருங்கிய நண்பர்கள். இருவருமே தனக்கு நிறைய அறிவுரைகள் வழங்குவார்கள்” என்று சொன்னார்

அடிசினல் ரிப்போர்ட்:

முன்னதாக நடிகர் சந்தானம். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ட்ரக்‌ஷ்ன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக 3 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காத நிலையில், சந்தானத்திடம் வாங்கிய 3 கோடியில் சில லட்சங்களை பாக்கி வைத்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி கொடுத்துள்ளார்.இந்நிலையில், மீதி பணத்தை கேட்க சண்முக சுந்தரத்தை பார்க்க சந்தானம் சென்றுள்ளார்.அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது மோதலாக மாறியது அப்போது நடுத்தெருவில் பிரேம் ஆனந்தை சந்தானம் அடிக்க அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது.

இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் சந்தானத்தை தேடிவந்தனர். இதை தொடர்ந்து நடிகர் சந்தானம் முன் ஜாமீன் பெற்று உள்ளார்.இந்த நிலையில்தான் இன்று சக்க போடு போடு ராஜா சினிமா விழாவில் நடிகர் சந்தானம் மற்றும் ஆர்யா ஆகியோர் கல்ந்து கொண்டனர் அப்போது பேசிய நடிகர் ஆர்யா, “ நடிகர் சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக எப்படி நடிப்பார் என்று யோசித்தேன். நடிகர் சந்தானத்தின் நிஜ சண்டை அதை நிரூபித்துள்ளது. நடிகர் சந்தானம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டார். நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சந்தானம் ஹீரோ தான். சமீபத்தில் அவர் செய்த ஆக்‌ஷனே போதும். அடிச்ச கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா, அடி வாங்குனவன் நிலைமை? அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் அடிவாங்கிய நபருக்கு என்னவாகியிருக்கும்” என கிண்டல் செய்து பேசிய போது அப்ளாஸ் அள்ளியது.