சங்கமித்ரா-வில் இருந்து விலகியது ஏன்? – ஸ்ருதி தரப்பு விளக்கம்!

0
278

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சங்கமித்ரா என்ற பிரம்மாண்ட படம் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகிவருகிறது . இந்த படத்தில் ஜெயம்ரவி, ஆர்யா உள்ளிட்டோருடன் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனிடையே இப்படத்தின் கதை என்ன என்பது குறித்து படக்குழு தெரிவித்துள்ளது. சங்கமித்ரா 8ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. சங்மித்ரா ஒரு பேரழகி. அவள் தன் ராஜ்ஜியத்தை காக்க போராடும் போது சந்திக்கும் இன்னல்களும், துயரங்களும் தான் படத்தின் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், உறவுகள் குறித்து இப்படம் பேசவுள்ளதாகவும். திரைப்பட மகுடத்தில் சங்கமித்ரா ஒரு ரத்தினமாக ஜொலிக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.இது கற்பனை கதை என்றும். தொன்மையான தமிழ் மொழிக்கு இந்தப்படம் சமர்ப்பணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இப்படி தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படமான ‘சங்கமித்ரா’. கான் திரைப்பட விழாவில் இப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றனர். ஆனால் இப்படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் திடீரென விலகியுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தற்போது விலகலுக்கான காரணம் குறித்து ஸ்ருதிஹாசன் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், “ துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், ‘சங்கமித்ரா’ படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம். ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ‘சபாஷ் நாயுடு’ படத்துக்காக தயாராகிவருகிறார்” என்று தெரிவித்துள்ளார்கள்.

இதனிடையே தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது விரைவில் அறிவிப்போம் என்று படக்குழு சார்பில் தெரிவித்துள்ள நிலையில்.ஹன்சிகா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது