பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முத்தையாவின் படங்களும் முக்கியமானவை. ‘கொடி வீரன்’ அதற்கு விதிவிலக்கல்ல. மைக்ரோ செகண்ட் கூட / ஒரு ப்ரேமில் கூட சைவ / வைணவ / சாக்த கடவுள்கள் எட்டிப்பார்க்கவில்லை. அது போலவே பூணல் அணிந்தவர்களும். மண் சார்ந்த தெய்வங்களை, வழிபாடுகளை, சடங்குகளை இப்படத்தில் முத்தையா ஆவணப்படுத்தி இருக்கிறார்.
முதல் படத்திலிருந்தே பெண் கதாபாத்திரங்களுக்கு முத்தையா அழுத்தம் கொடுத்து வருகிறார். பெரும் ஆய்வுக் கட்டுரைக்கான புதையலின் வழியை எல்லா படங்களிலும் தூவி வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் 3 பெண்கள். மூவருமே அண்ணன் பாசமும், காதல் நேசமும் ஒருங்கே கொண்டவர்கள். என்றாலும் ஒருவருக்கொருவர் வேறுபடும் புள்ளிகள் தெளிவாக பதிவாகி உள்ளன.
1950, 60, 70களின் தென் தமிழக கிராமங்களை பாரதிராஜா டாக்குமெண்ட் + ரொமான்டிஸைஸ் செய்தார் என்றால் – 1980, 90, 2000ம் வருடங்களின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை முத்தையா ‘ரா’ ஆக பதிவு செய்து வருகிறார். தென் மாவட்டங்களில் நடைபெற்ற / நடைபெறும் சாதிக் கலவரங்களில் கூட்டு மனநிலை எப்படி செயல்படுகிறது என்பதை முத்தையாவின் படங்கள் உணர வைக்கின்றன.
முகநூலில் தீவிரமாக இயங்காத காலத்து ‘காட்சிப்பிழை’ குழுவினர், வெகுஜன பண்பாட்டு அசைவுகளை கச்சிதமாக கட்டுரையாக்கினார்கள். உதாரணம், ‘குட்டிப்புலி’ குறித்த ராஜன் குறையின் பதிவு. இப்போது அக்குழுவினரை ஃபேஸ்புக் இயக்குவதால் முந்தையதை போன்ற மக்கள் உளவியல் சார்ந்த கட்டுரைகளை அச்சில் மட்டுமல்ல இணையத்திலும் எதிர்பார்க்க முடியாது. வேறு தளத்திலிருந்து யாராவது முயற்சித்தால்தான் உண்டு.
கன்வர்டட் காஸ்மோபொலிடன் மக்களுக்கும், முகநூல் உலகப்பட தாசர்களுக்கும், ‘நாகரீக’ வாழ்க்கைமுறையை பின்பற்றுவதாக நம்புபவர்களுக்கும் இப்படம் பிடிக்காது. செங்கல்பட்டை தாண்டி படம் கல்லா கட்டும்.
பார்த்த மாதிரியான காட்சிகள் பார்க்கும்படி இருப்பது இப்படத்தின் ப்ளஸ். தென் மாவட்ட மக்கள் என்பது முத்தையா ஆவணப்படுத்தும் சமூகத்தையும் உள்ளடக்கியதுதான்.
‘கொடி வீரன்’ மறைந்திருக்கும் B & C சென்டர்களை திரையுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.
சக்திவேல்