எஸ்.ஏ.சந்திரசேகரனின் பள்ளி பருவ ரியல் காதல் – ஆடியோ விழாவில் சுவாரஸ்யம்!

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் கதாநாயகனாக அறிமுகமாகும் பள்ளி பருவத்திலே இசை வெளீயீடு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது….”பள்ளி பருவத்திலே படத்தின் பாடலை பார்த்தேன். பருவ சிட்டுகளின் அரும்பும் காதலை யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர். படத்தின் நாயகன் நந்தன் ராம் – வெண்பா இருவரையும் பார்த்து கொண்டே இருக்கலாம் போலா இருக்கு. அவர்கள் பெரிய அழகா என்றால் அதுவல்ல , எல்லாரையும் வசப்படுத்தும் ஒரு ஈர்ப்பு உள்ளது. கண்டிப்பாக சிற்பியின் மகன் நந்தன் ராம் பெரிய நடிகராக வலம் வருவார்.

எனக்கும் பள்ளி பருவத்தில் காதல் வந்தது. அந்த காதல் சுவாரஸ்யத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . பரமக்குடியில், காமன்கோட்டை கிராமத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் போது தேவதையாக தெரிந்த அவளுக்கு காதல் கடிதம் எழுதினேன். அவளும் எனக்கு காதல் கடிதம் தந்தாள். காதல் கனிரசம் சொட்ட எங்கள் காதல் வளரும் போது எனது காதலியை டிரில் மாஸ்டர் சைட் அடித்தார். நானும் எனது நண்பர்களும் டிரில் மாஸ்டரை உருட்டு கட்டையால் விரட்டி விரட்டி அடித்தோம். பிரச்சனை பெரிதாகி பஞ்சாயத்தாகி விட்டது. பஞ்சாயத்து தீர்ப்பில் என்னையும் என் பெற்றோரையும் ஊரை விட்டு வெளியேற சொன்னார்கள் . நான் துணிச்சலுடன் நான் காதலித்த பெண்ணை கூப்பிடுங்கள், அவள் காதலிக்கவில்லை என்றால் இரவே குடும்பத்தோடு காலி செய்து விடுகிறேன் என்றேன். பஞ்சாயத்துக்கு கூட்டி வரப்பட்ட அந்த பெண் என்னை யாரென்று தெரியாது என்று சொல்ல எனக்கும் என் நண்பர்களுக்கும் பேரதிர்ச்சி.

இப்படி பள்ளியில் படிக்கும் போது பெரும்பாலோர் காதலிப்பது உண்டு. அந்த காதலுக்காக எதையும் செய்யும் பலமும் துணிவும் அப்போதுதான் வரும். இப்படி மாணவர்களின் யதார்த்த காதலை தான் வாசுதேவ் பாஸ்கரும் படமாக்கியிருக்கிறார். நிச்சயம் காதலிப்பவருக்கும், காதலிக்கப்போகிறவர்களுக்கும், பள்ளி பருவத்திலே படம் பிடிக்கும். படத்தின் பாடல்கள் மெலோடியாகவும், அழகாகவும் இருக்கிறது”என பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

நாசர் பேசும் போது, “இப்போதெல்லாம் படம் எடுப்பது பெரிய விஷயம். அதை விட படத்தை வெளியிடுவது என்பது பாத்து பிரசவ வலிக்கு அதிகமானது. இதையெல்லாம் மீறி இளைய சமுதாயம் வெற்றி பெற போராடுகிறார்கள். தயாரிப்பாளர் வேலுவை பாராட்டுகிறேன்.பள்ளி பருவத்திலே இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர், கதாநாயகன் நந்தன் ராம், கதாநாயகி வெண்பா , தம்பி ராமையா, ஆர்.கே. சுரேஷ் , பொன்வண்ணன், கே.எஸ்.ரவிக்குமார், ஊர்வசி,அனைவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த இளைய கலைஞர்கள் ஜெயிப்பார்கள்” என்றார்

பள்ளி பருவத்திலே ஆடியோவை நாசர்-தேவயானி வெளியிட எஸ்.ஏ.சந்திரசேகரன், ஆர்.பி.சௌத்திரி பெற்று கொண்டனர். அபிராமி ராமநாதன், கஸ்தூரி ராஜா, மனோபாலா, பாண்டிராஜ், பிரபுசாலமன்,மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள். தயாரிப்பாளர் &இயக்குனர் பி.டி.செல்வக்குமார் வரவேற்புரையாற்ற, படத்தின் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கஸ்தூரி தொகுத்து வழங்கினார்.