விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார்? – துப்பறிவாளன் பின்னணி ரிப்போர்ட்!

சினிமா ஒரு கருணையற்ற போர்க்களம். இங்கே எந்தவித சலுகையையும் எதிர்பார்க்க கூடாது. படைப்பின் இறுதி வடிவம் பார்வையாளரை திருப்திபடுத்தியதா இல்லையா என்பது மட்டும்தான் கவனிக்கப்படும். அதன் பின்னால் இருந்த உழைப்பும் சிரமங்களும் அதன் பின்னர் தான் அங்கீகரிக்கப்படும். இதோ நாளை ரிலீஸாகப் போகும் துப்பறிவாளன் தொடங்கிய பின்னர் தான் விஷாலுக்கு நிறைய பொறுப்புகள் வந்தன. தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்று தலைவராகவும் ஆனார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகி ரஜினி கால்ஷீட், விஜய் கால்ஷீட் வாங்கி கல்லா நிரப்பியவர்கள் மத்தியில் சொந்தப்படத்திற்கு நேரம் கொடுக்க முடியாத அளவுக்கு பொறுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

இன்னும் சில மணி நேரங்களில் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்ற சூழலில் அன்று காலை தான் ஏதாவது முக்கிய பிரச்னைக்கு பேச அழைப்பார்கள். ‘ஷூட்டிங்கை கேன்சல் பண்ணுங்க…’ என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. சுமார் 20 நாட்கள் நடந்தன. ஒவ்வொரு நாளும் சுமார் 10லிருந்து 15 லட்சம் வீணாகும். ஜிஎஸ்டி பிரச்னை, ஸ்ட்ரைக் அறிவிப்புகள், பேச்சுவார்த்தைகள் என்று இடையிடையே விஷால் பிய்த்து பிய்த்து கொடுத்த நேரத்தில் தான் மிஷ்கின் படப்பிடிப்பு நடத்த முடிந்தது. அப்போதும்கூட ஸ்பாட்டுக்கே நடிகர் சங்க நிர்வாகமும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகமும் வந்துவிடும். கேரவனுக்குள் நடக்கும் மீட்டிங்குகளிலிருந்து விஷாலை வெளியே கொண்டு வருவதற்குள் உதவி இயக்குநர்களுக்கு நாக்கு தள்ளிவிடும். விஷாலின் மனதுக்குள் எந்நேரமும் சங்கம் பற்றிய நினைவுதான் இருக்கும். அதன் விளைவுகள் தான் ஐசியூவில் இருந்த தமிழ் சினிமா மெல்ல மெல்ல வெண்டிலேட்டர் இல்லாமலேயே மூச்சுவிட தொடங்கியுள்ளது. துப்பறி வாளனுக்கு வருவோம்… பொங்கலுக்கே வந்திருக்க வேண்டிய துப்பறிவாளன் தள்ளிப்போய் நாளை ரிலீஸாக இருக்கிறது.

துப்பறிவாளனை முழுப்படமாக பார்த்த போது அத்தனை காத்திருப்புகளுக்கும் சிரமங்களுக்கும் பலன் கிடைத்துவிட்டதாகவே உணர்ந்தேன். இரண்டு விஷயங்களுக்கு உறுதி தர முடியும். படம் எந்த இடத்திலும் உங்கள் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை நினைவுபடுத்தாது. படம் பார்த்து முடித்தபிறகு அதன் தாக்கம் சில மணி நேரங்களாவது நிச்சயம் இருக்கும்.

அத்தனை பரபரப்புகளுக்கிடையே நடந்த படப்பிடிப்பில் விஷால் எப்படி கணியன் பூங்குன்றனாகவே மாறினார் என்பது மிஷ்கினுக்கே வெளிச்சம். விஷால் மட்டுமல்ல வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ், அனு இம்மனுவேல், ஜான்விஜய் என்று எல்லா கேரக்டர்களுமே ஏதாவது ஒரு இடத்திலாவது உங்களை ஆச்சர்யப்படுத்தும். பட்டியலில் அரோல் கரோலியின் இசையும் கார்த்திக்கின் கேமராவும் உண்டு. எல்லா பெருமையும் மிஷ்கினுக்கு தான். விஷாலுக்கு காயம், தோல் அலர்ஜி ஏற்பட்ட சமயத்திலும், க்ளைமாக்ஸை மட்டும் 26 நாட்கள் எடுத்தபோதும் மிஷ்கினை மனதுக்குள்ளேயே திட்டியிருக்கிறேன். ஆனால் அத்தனைக்கும் நியாயம் செய்து மனதுக்குள்ளேயே மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார். ஒரு புதிய அனுபவத்துக்கு தயாராகுங்கள். இரண்டரை மணி நேரம் நெகிழ்ந்து, உருகி, அதிர்ந்து, சிரித்து கணியன் பூங்குன்றன் உடன் வாழ்ந்துவிட்டு வரலாம்…

 

ராஜீவ் காந்தி.