எனது இளமையின் ரகசியம் என்ன தெரியுமா? – சிவகுமார் ஓப்பன் டாக்!

என்றும் மாறா இளமையான தோற்றதுக்குச் சொந்தக்காரர் பன்முகக் கலைஞர், நடிகர் சிவகுமார். 75 வயதை நிறைவு செய்திருக்கும் அவரிடம் ‘உங்கள் இளமையின் ரகசியத்தைப் பகிர முடியுமா’ என்றதும் உற்சாகத்துடன் கொட்ட ஆரம்பித்துவிட்டார். “கோவை மாவட்டத்தில் மிகச் சிறிய குக்கிராமத்தில் பிறந்தேன். நான் பிறந்த பத்தாவது மாதத்தில் என் அப்பா இறந்துவிட்டார். அப்பா விட்டுச் சென்றிருந்த 8 ஏக்கர் மானாவாரி நிலத்தில் பாடுபடுவதற்காக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் அக்காவைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார் அம்மா. ஒரு பவுன் 12 ரூபாய்க்கு விற்ற அந்தக் காலத்தில், கழனியில் அரும்பாடுபட்டு உழைத்துக் கிடைத்த பணத்தில் என் அம்மா என்னைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்து ஆளாக்கிச் சென்னைக்கு அனுப்பினார். சென்னை வந்து நான் ஓவியனாகவும் பின்னர் திரையுலகில் ஒழுக்கமும் கடமையும் தவறாத நடிகனாக உயர முடிந்தது என்றால் அதில் என் தாய், சகோதரியின் தியாகத்துக்கு எந்த அளவு பங்கிருக்கிறதோ, அதே அளவுக்கு என் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் யோகக் கலைக்கும் பெரிய பங்கிருக்கிறது.

16 வயது 38 ஆசனங்கள்

சென்னையில் ஓவியனாக இருந்தபோது எனக்கு யோகா குரு கிடையாது. குமுதம் பத்திரிகையில் யோகக் கலை பற்றி வாராவாரம் படத்துடன் கட்டுரை வெளியிடுவார்கள். அவற்றைத் தேதி வாரியாக எடுத்துக் கோத்து ஒரே புத்தகமாக பைண்ட் செய்து கன்னிமாரா நூலகத்தில் வைத்தி ருந்தார்கள். அங்கே உறுப்பினராகச் சேர்ந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். அதைப் பார்த்துத்தான் ஒவ்வொரு ஆசனமாக யோகா பழக ஆரம்பித்தேன். நான் குரு இல்லாமல் செய்யத் தொடங்கிய சில மாதங்களில் பலன் கிடைப்பதை உணர்ந்தேன். பிறகு குருவின் வழி காட்டுதலுடன் கற்றுக்கொண்டபோது எனது உடலும் மனமும் மேலும் வலிமை பெற்றன.

பல புகழ்பெற்ற கோயில்களுக்கு நடந்தே சென்று 5 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை ஒரே இடத்தில் தண்ணீர்கூடக் குடிக்காமல் அமர்ந்து ஒரே மூச்சில் கோயில் ஓவியங்களை வரைந்து முடித்திருக்கிறேன். அதற்கான வலிமையை எனக்குக் கொடுத்தது யோகாதான். அதிகாலை 4 மணிக்கு எழுந்து 16 வயதில் 38 ஆசனங்களைச் செய்வேன்.

இதுதான் எனது இளமையின் ரகசியம். எனது நாக்கில் காபி, டீ, பட்டு 58 வருடங்கள் ஆகின்றன. தினசரி 8 தம்ளர் தண்ணீர், 7 மணி நேரக் கட்டாயத் தூக்கம் ஒவ்வொருவருக்கும் அவசியம். யோகா செய்தால் தன்னிச்சையாக 8 என்ன 10 தம்ளர் தண்ணீர்கூடக் குடிக்கலாம். குறைந்த நேரம் தூங்கினால்கூட ஆழ்ந்த தூக்கத்தை யோகா தரும். இதை நான் 58 ஆண்டுகளாக உணர்ந்து வந்திருக்கிறேன்.

சிறந்த அணிகலன்

யோகா என்றாலே அது ஆண்களுக்கான உடல், மனவளக் கலை என்ற எண்ணம் இருக்கிறது. இது மிகத் தவறான பார்வை. யோகம் என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் பொதுவான கலை.

பெரும்பாலான குடும்பங்களுக்குத் தலைவர் ஆண்களாக இருக்கலாம். ஆனால், குடும்பத்தை நிர்வகிப்பது பெண். அந்தப் பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அன்றாட வாழ்க்கை அமைதியாக, மகிழ்ச்சியாக, உற்சாகமாக நகரும். ஒரு பெண் யோகாவை முழுமையாகக் கற்றுக்கொண்டால் அது அவளது குடும்பத்தின் மூன்று தலைமுறைக்கு நன்மையைக் கொண்டுவந்து சேர்க்கும்.

ஆண்களுக்குத் தனி ஆசனங்கள், பெண்களுக்குத் தனி ஆசனங்கள் என்று கிடையாது. எல்லா ஆசனங்களும் இருபாலாருக்கும் பொதுவானவைதான். மாதவிலக்கு வெளிப்படும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் பெண்கள் யோகா செய்வதைத் தவிர்த்துவிட்டால் போதும். இன்றைய உணவுமுறை, நவீன மருத்துவமுறை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறை என்று வேலைக்குச் செல்லும் பெண்ணுக்கும் வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்கும் பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன.

பெண் திருமணம் முடிந்து கணவனையும் குழந்தைகளையும் கணவன் வீட்டாரையும் கவனித்து கொண்டு, வேலைக்குச் சென்று பணமும் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவள் கர்ப்பமாகும்போது இன்று பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பகால சர்க்கரை நோய் வருகிறது. குழந்தை பிறந்ததும் அது உடலை விட்டுப் போக மறுக்கிறது. கணையம் சரிவர இன்சுலினைச் சுரக்காததால்தான் இந்தப் பிரச்சினை, கணையத்தைச் சரியாக வேலை செய்ய வைப்பது மட்டுமல்ல, இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல் தைராய்டு சுரப்பி, குடல், சிறுநீரகம் என உடலின் முக்கிய உள் உறுப்புகளை முழுமையாக வேலை செய்யத் தூண்டி அவற்றை முழுமையாக இயங்க வைக்கிறது இந்தத் தெய்வீகக் கலை.

இன்றைய தாய்மார்கள் எதிர்கொள்ளும் இன்னொரு பிரச்சினை பிறந்தது முதலே பெரும்பாலான பிள்ளைகள் உடல்பருமன் பிரச்சினையால் பெற்றோருக்குப் பெரும் மன உளைச்சலை உருவாக்கு கிறார்கள். குடும்பத்தின் தூணாக இருக்கும் பெண் யோகப் பயிற்சியைக் கற்றுக்கொண்டால் அதைத் தன் பிள்ளைகளுடன் காலையில் இணைந்து செய்ய முடியும். அம்மா செய்கிறாளே என்று ஆர்வமாகப் பிள்ளைகளும் செய்து பழகுவார்கள். ஆக, பெண்ணுக்குச் சிறந்த அணிகலன் என்றால் அது பொன்நகை அல்ல, யோகக் கலை என்பதை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

அதேபோல் யோகாசனம் கர்ப்ப காலத்தின் கொடை என்றே சொல்லுவேன். பெண்கள் கர்ப்ப காலத்தின் மூன்றாம் மாதம் தொடங்கி செய்ய வேண்டிய ஆசனங்கள் பல இருக்கின்றன. ஆறு மாதத்துக்குப் பிறகு செய்யக் கூடாத ஆசனங்கள் சில இருக்கின்றன. சுய பிரசவத்துக்கான ஆசனங்கள் இருக்கின்றன. பிரசவசத்துக்குப் பிறகு செய்யக் கூடாத ஆசனங்களும் இருக்கின்றன.

என்ன வேறுபாடு?

திருமணத்துக்குப் பிறகு என் மனைவிக்கு நானே யோகா பயிற்றுவித்தேன். என் பிள்ளைகள் சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவரும் மூன்று வயதிலிருந்தே யோகா கற்றுக்கொள்ள வழிசெய்தேன். முதலில் உடற்பயிற்சிக்கும் யோகப் பயிற்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். உடற்ப யிற்சியைப் பொறுத்தவரை வியர்வை வெளிப்பட்டால்தான் பலன். ஆனால், யோகப் பயிற்சியைப் பொறுத்தவரை வியர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. யோகப் பயிற்சி என்பதே மூச்சுப் பயிற்சியுடன் இணைந்த ஒன்று. உடலின் உள்ளேயிருக்கும் கழிவுகள் வியர்வை, சிறுநீர், மனிதக் கழிவு வழியே வெளியேறுகின்றன. அதேபோல் நமது மூச்சின் வழியான கார்பன் டை ஆக்ஸைடு வாயு வழியாகவும் கழிவு வெளியேறுகிறது. ஆனால், இதில் மிக உன்னதமானது, உடலுக்கு அதிக பலனை அளிக்கக்கூடியது நமது மூச்சு வழியே வெளியேறும் கழிவுதான்.

மூச்சுப் பயிற்சியே முழுமை

ஏற்கெனவே மூச்சு நம் உள்ளே போய் வந்து கொண்டுதானே இருக்கிறது; இதில் என்ன தனியாக மூச்சுப் பயிற்சி என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். நமது மூச்சை நெறிப்படுத்துவதுதான் பிராணா யாமம். உடல் உறுப்புகள் தங்கள் பணிகளைச் சரிவர செய்வதற்கு வலது மூக்கு வழியாகக் காற்று தங்கு தடையின்றிச் சென்று வரவேண்டும். மனம் நன்றாக இயங்கவும் நினைவாற்றல் ஸ்திரமாக இருக்கவும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கவும் இடது மூக்குவழியாகக் காற்று சரிவரப் போய் வர வேண்டும். இடது மூக்குவழியாகக் காற்று ஒழுங்காகப் போய்வந்தால் அதுதான் ‘சீக்ரெட் ஆஃப் மெமரி’ என்கிறார்கள்.

உங்கள் நுரையீரலுக்கு எவ்வளவு ‘ப்ரீத்திங் கெப்பாசிட்டி’ இருக்கிறதோ அதுதான் உங்கள் உடலின் ஸ்டாமினா. நமது நுரையீரலில் லட்சக் கணக்கான மெல்லிய காற்றுப் பைகள் இருக்கின்றன. அதை நாம் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அவை சுருங்கிச் சுருங்கி நமக்குச் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

காலையில் எழுந்து முகம் கைகால் கழுவிவிட்டு அமருங்கள், நீளமாக மூச்சை இழுத்து நுரையீரல் முழுவதும் நிரப்புங்கள். பத்து விநாடிகள் மட்டும் இழுத்த மூச்சை தம் கட்டுங்கள். பிறகு மெல்ல வெளியேற்றுங்கள். இடது மூக்கு வழியாக இழுத்து இடது மூக்கு வழியாகவே வெளியே விடுவது, வலது மூக்கின் வழியாக இழுத்து வலது மூக்கு வழியாகவே விடுவது, அதேபோல் இடது மூக்கு வழியாக இழுத்து வலது மூக்கு வழியாகவும் வலது மூக்கு வழியாக இழுத்து இடது மூக்கு வழியாகவும் வெளியே விடுவதையும் 10 முதல் 50 முறை முறைகூடச் செய்யலாம். இது உடலுக்கு பேட்டரி சார்ஜ் செய்வதுபோலத்தான். இப்படிச் செய்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடிக்கொண்டே இருக்கும். மூச்சுப் பயிற்சியின் வழியாக 90 சதவீத ஆக்ஸிஜன் மூளைக்குச் செல்கிறது.

உங்கள் வயதைப் பொறுத்தும், உங்கள் உடலில் பிரச்சினை இருந்தால் அதற்கு ஏற்ற ஆசனங்க ளையும் மட்டும் தேர்ந்தெடுத்து தினசரி ஒரு மணிநேரம் செய்தால் போதும். ஆனால், மூச்சுப் பயிற்சியும் செய்தால்தான் யோகா முழுமை பெறும் என்பதை மறக்காதீர்கள். இன்று இலவசமாக உங்கள் வீட்டின் அருகில்கூட யோகா சொல்லித்தரப் பல தன்னார்வலர்கள் முன்வருகிறார்கள். அதுபோன்ற வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொண்டு முதலில் ஒரு குருவழியே கற்றுக்கொண்டு பின் வாழ்க்கை முழுவதும் தொடருங்கள்.

(யோகா குரு ‘யோகா’ கிருஷ்ணமூர்த்தியிடம் உறுதிசெய்துகொண்ட பின் யோகா குறித்து இங்கே இடம்பெற்றிருக்கும் சில அடிப்படையான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சிவகுமார்)