வேலையில்லா பட்டதாரி 3 வரும் – அப்பப் பாருங்க! – தனுஷ் பேட்டி!

கலைப்புலி எஸ் தாணு-வின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2. வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும் விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும்  கலந்து கொண்டார்.

இதில் நடிகர் விவேக் பேசும் போது, “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து வருகின்ற கதா நாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்து  உள்ளது. மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. வைர முத்து ஒரு பாடலில் சொன்னது போல் “சிங்கத்தின் பாலாக இருந்தால் அதை தங்க கிண்ணத்தில் வைத்து கொடுக்க வேண்டும்”, அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால், தாணு  ஒரு தங்கக் கிண்ணம்.” என்று கூறினார். மேலும் பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றி  அடைந்துள்ளது. தாணு சாருக்கு நன்றி, என்னை மகள் போல் பார்த்துக்கொண்டார். பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும் அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னது எனக்கு நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாக்த்தையும் இயக்குவேன். “என்றார்

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, “இந்த நாளிது, இனிய நாளிது. வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வி.ஐ.பி-2 படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார்.வி.ஐ.பி-2 தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்று அவர் கூறினார். பின் வெளிநாட்டிலும், தமிழ் நாட்டிலும் (மாவட்ட வாரியாக) வி.ஐ.பி படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்  கொண்டார்.

பின்னர் இச்சந்திப்பில் பேசிய தனுஷ்,“’வேலையில்லா பட்டதாரி 2′ கதையை முழுமையாக முடித்து செளந்தர்யாவிடம் கொடுக்கும் போதே, இப்படத்தின் வெற்றி முதல் பாகம் அளவுக்கு அல்ல, ஆனால் நன்றாக இருக்கும் என்று முதல் நாளிலேயே கூறித்தான் பணிகளைத் தொடங்கினோம். முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.

இப்படத்துக்கு என ஒரு வெற்றியை வைத்திருந்தோம். ஆனால், அதைத் தாண்டி படம் வெற்றி அடைந்ததில் சந்தோஷம். நல்ல விஷயங்கள் சொல்கிறோம், இப்படத்தின் மூலம் நேர்மறையான விஷயங்களை எடுத்துரைக்கிறோம் என நினைத்தேன். ஒரு சிலர் திறக்குறளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திறக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கப் போகிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே. அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள். இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் வைத்திருந்த நம்பிக்கை மட்டுமே. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது. அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

எப்போதும் அன்பு மட்டுமே இந்த உலகத்திற்கு தர வேண்டும். அது மட்டுமே நிரந்தரம். ஒருவரைப் பிடித்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், பிடிக்கவில்லை என்றால் எதுவுமே பேசாமல் இருக்கலாம். பிடிக்கவில்லை என்பதற்காக வெறுப்பை விரும்ப வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக அன்பு செலுத்துங்கள், அது மட்டுமே இந்த உலகிற்கு அதிகம் தேவை. உலகம் நிறைய எதிர்மறையான விஷயங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெரிய பிரச்சினை களைத் தாண்டி மற்றவர்களிடம் அன்பைச் செலுத்தினாலே, இயற்கை நம்மீது அன்பு செலுத்தும். ‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை. இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன் தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்” என்று தனுஷ் தெரிவித்தார்.