கவண் ஒரு பாதி கவர்கிறது!

கவண்
கதை – சுரேஷ் பாலா
இயக்கம் – கே வீ ஆனந்த்
விஜய் சேதுபதி, டி.ஆர்,மடோனா செபாஸ்டியன்

சின்னத்திரையின் உள்ளடி வேலைகள், செய்தியை தரும் ஊடகங்கள் டி ஆர் பி க்காக விளையடும் வில்லங்க விளையாட்டுக்கள். மக்களிடம் உண்மையை சொல்வதை விட சுவராஸ்யத்தை கூட்டி கார்பேரேட்டுக்கும், அரசியல்வாதிக்கும் சொம்பு தூக்குவது என தற்கால ஊடக தீவிரவாதம் தான் கதை.

இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காகவும், அதை சமரசமின்றி சொன்னதற்கும் பாராட்டுக்கள்.செய்தியை பிரேக்கிங்காக எப்படி மாற்றுகிறார்கள், டாக் ஷோவில் அரசியல் வாதிக்கு எப்படி பாலிஷாக சொம்படிக்கிறார்கள், மியூசிக் புரோக்ராமில் எப்படி திறமையான வர்களை விட்டுவிட்டு வியாபரத்தை முன்னுறுத்துகிறார்கள் என்பது மிக விரிவாக முன் பாதியில் வருகிறது. அத்தனையும் மக்களிடம் சேர்க்க வேண்டிய விஷயம் தான். அட்டகாசம்.

திரைக்கதையாக படம் முதல் பாதியில் பரபரவென இருக்கிறது இரண்டாம் பாதி ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு படத்தில் எந்த சுவாரஸ்யங்களும் இல்லை.

விஜய் சேதுபதி மிக நல்ல நடிகர் தான் ஆனால் இந்தப்படத்தின் பாத்திரத்திற்கு அவர் சுத்தமாக செட் ஆகவில்லை. கல்லூரி படிக்கிறார். வேலை தேடிப் போகிறார் 40 வயது உடம்பை வைத்துக்கொண்டு இளம் வாலிபனாக காட்ட முயற்சித்திருக்கிறார்கள். விஜய் சேதுபதிக்கு ஒட்டவே இல்லை.

மடோனாவை சொந்தக்குரலில் பேச வைத்து சோதனை செய்கிறார்கள். ஊர்வசி அக்கா கல்பானாவின் குரல் அழியாமல் மடோனாவிடம் இருக்கிறது. படம் முழுதும் வருகிறார். முதல் காட்சி தவிர எங்கும் நடிப்பதற்கான இடம் இல்லை. டி ஆர் அவர் பாணியும் இல்லாமல் கே வி ஆனந்த் பாணியும் இல்லாமல் ஒரு புது பாணியில் சாதரணமாக வருகிறார். அவருக்கான தேவை படத்தில் சுத்தமாக இல்லை. அயன் வில்லன் குண்டு தொப்பையுடன், டி வி அதிபராக வருகிறார் முக பாவனைகள் சகிக்கவில்லை. போஸ் வெங்கட் வழுக்கைத் தலை வில்லன் பாத்திரம். அவரும் கடைசி வரை எந்த வில்லத்தனமும் செய்யவே இல்லை.

சின்ன சின்ன ஐடியாக்கள், புன்னகை டயலாக்குகள், சமூக அக்கறை விஷயங்கள் எல்லாம் ஓகே. ஆனால் கே வி ஆனந்தின் படங்களில் இருக்கும் பரபர சுவாரஸ்யங்கள் இந்தப்படத்தில் சுத்தமாக இல்லை. இடைவேளைக்கு பிறகு படம் ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது.திரைக்கதையை மெருகேற்றியிருந்தால் மீண்டும் ஒரு கோ வாக இந்தப்படம் மிளிர்ந்திருக்கும்.

ஹிப் ஹாப் தமிழா பப் இசையை படம் முழுதும் ஓடவிட்டிருக்கிறார். எந்தப்படத்திலும் மாறாத இசை. பின்னனி இசை அய்யோ ரகம். ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி. மொத்தமாக  கோ வகா ஆகியிருக்க வேண்டிய படம் பாதியில் நொண்டியடிக்கிறது.

கவண் ஒரு பாதி கவர்கிறது.

கதிரவன்