இயக்கம்: முருகன்
நடிப்பு: வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு ப்ரியா
இசை: விவேக் சரோ
தயாரிப்பு: லதா முருகன்
வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் முக்கிய பாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ள படம் பகலறியான்.
சின்ன பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஒரு இரவுக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை கோர்த்து ஒரு திரில்லரை தந்திருக்கிறார்கள்.
காதலியை ஒர் இரவில் கடத்திக்கொண்டு திருமணம் செய்ய போகிறார் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்ற குற்றவாளி வெற்றி. இன்னொரு புறம் தன் தங்கையை காணவில்லை என சென்னையில் பிரபல ரௌடி தேட ஆரம்பிக்கிறான். வெற்றியையும், ரௌடியையும் கொலை செய்யும் நோக்கத்தில் சில குழுக்கள் அலைகின்றனர், இந்த கதைகளின் தொடர்பு என்ன ? இறுதியில் நடக்கிறது என்பது தான் படம்.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றிக்கு வழக்கமான கதாப்பாத்திரம் அதை தன் பாணியில் சிறப்பாக செய்துள்ளார். வெற்றி நாயகன் என்றாலும், அவர் நல்லவரா?, கெட்டவரா? என்ற கேள்வியோடு ரசிகர்கள் படம் பார்க்க வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனையின் பேரிலேயே அவரது கதாபாத்திரம் இறுக்கமாக பயணித்திருக்கிறது. அதனால் தான் வெற்றியும் இறுக்கமாகவே நடித்திருக்கிறார்.
சைலண்ட் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுவதும் வசனம் பேசாமல் நடித்திருக்கும் மற்றொரு நாயகன் இயக்குநர் முருகன், நாயகன் வெற்றிக்கு இணையாக தன் பாத்திரத்தை செதுக்கி, அதை சிறப்பாக செய்து சபாஸ் பெற்று விட்டார். கிளைமாக்ஸ் காட்சியில் தங்கை செண்டிமெண்ட் மூலம் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அக்ஷயா கந்தமுதன், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் வினு பிரியா திரைக்கதை திருப்பத்திற்கு உதவியுள்ளார்.
காமெடி வேடங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு முதல் முறையாக அதிரடியான வேடத்தில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவர் உடம்பு தான் அதிகமாக அதிர்கிறது. போலீஸாக நடித்திருக்கும் தீனாவின் கதாபாத்திரத்திம் திரைக்கதைக்கு தொடர்பில்லாமல் பயணித்தாலும், காட்சிகளின் இறுக்கத்தில் இருந்து ரசிகர்களை காப்பாற்றுவதற்கு உதவியிருக்கிறது.
படத்தின் கதை ஆரம்பத்தில் புரிந்துவிடக்கூடாது என நினைத்திருக்கிறது படக்குழு ஆனால் அது தான் படத்தின் பெரிய மைனஸ், நமக்கு நடப்பது எதுவுமே புரிவதில்லை. ஒரு கட்டத்தில் என்ன நடந்தால் நமக்கென்ன என்ற மனநிலை வந்து விடுகிறது.
க்ளைமாக்ஸ் நெருங்கும் போது தான் படத்தின் கதை புரிந்து கொஞ்சம் சுவாரஸ்யம் வருகறது
படம் முழுவதும் இரவு நேரத்தில் நடக்கிறது. ஆனால், அந்த உணர்வே ரசிகர்களிடம் ஏற்படாத வகையில் ஒளிப்பதிவாளர் அபிலாஷின் கேமரா அசத்தியிருக்கிறது. விவேக் சரோவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது .
உருவாக்கத்தில் கதையை கொண்டு சென்ற விதத்தில் பாஸ் மார்க் வாங்கிவிட்டார் முருகன்.
அதீத வன்முறையை கொஞ்சம் குறைத்திருக்கலாம், அதே போல் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி க்ளைமாக்ஸை செதுக்கியிருந்தால் இன்னும் நல்ல திரில்லராக அமைந்திருக்கும்.
ஆனாலும் திரில்லர் விரும்பிகள் ரசிக்கலாம்.
மொத்தத்தில், இந்த ‘பகலறியான்’ படத்தை தாராளமாக பார்க்கலாம்.