சைக்கோ :இயக்குநர் மிஷ்கின் என்னை ஏமாற்றிட்டார்– புதுமுக நடிகர் மைத்ரேயா புகார்!.

பிரபல இயக்குநரான மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.  இந் நிலையில், புதுமுக நடிகரான மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப் பட்ட கதை என்றும், இயக்குநர் மிஷ்கின் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும்கூறி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “என்னுடைய தந்தை என்னை ஹீரோவாக வைத்து படமெடுக்க இயக்குநர் மிஷ்கினுடன் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதியன்று ஒரு ஒப்பந்தம் செய்தார். இதற்காக எங்கப்பா மிஷ்கினுக்கு ஒரு மிகப் பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்தார். எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தனை பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுக்கவே மாட்டாங்க. ஆனால் எங்கப்பா மிஷ்கினை நம்பிக் கொடுத்தார்.

ஒப்பந்தம் கையெழுத்தான பின்னாடி மிஷ்கின் என்னிடம் ‘இனிமேல் நான்தான் உனக்கு அம்மா, அப்பா, காட்பாதர் எல்லாமே’ என்றார். அதுக்கப்புறம் எங்கப்பாகிட்ட அவர் பேசும்போது, ‘நான் இப்போ சவரக்கத்தி படத்துல நடிக்கப் போறேன். அதை மூணு மாசத்துல முடிச்சிட்டு அதுக்கப்புறம் 2015 நவம்பர்ல உங்க படத்தைத் துவங்குறேன்’னு சொன்னார்.

ஆனால் அந்தப் படம் குறித்த நேரத்தில் முடியாமல் போச்சு. 2016 மார்ச்சுல நாங்க மிஷ்கின் ஸார்கிட்ட பேசும்போது, ‘இப்போ சாட்டிலைட் ரைட்ஸெல்லாம் ரொம்ப குறைவா போகுது. நம்ம படம் ஹெடெக் மிகப் பெரிய பட்ஜெட் படம். அதோட எனக்கு இப்போ விஷால் டேட் கொடுத்திருக்கார். இன்னும் ஒரு ஆறு மாசம் டைம் கொடுங்க. நான் அந்தப் படத்தை முடிச்சிட்டு வந்தர்றேன்…’னு சொன்னார்.

ஒப்பந்தப்படி எங்களுக்குத்தான் அடுத்தப் படம் செய்யணும். அப்படித்தான் கையெழுத்தாகியிருக்கு. இதைச் சுட்டிக் காட்டி அவர்கிட்ட பேசும்போது, ‘ஒரு தகப்பன்கிட்ட பிள்ளை கேக்குற உதவியா நினைச்சு இதை எனக்கு செஞ்சு கொடுங்க. இப்போ விஷால்கூட ‘துப்பறிவாளனை’ முடிச்சிட்டு அடுத்த படம் சத்தியமா உனக்குத்தான் செய்வேன். நீதான் எனது அடுத்தப் படத்தின் ஹீரோ. இது என் கலைத்தாயின் மீது சத்தியம்’ன்னு சொன்னார்.

அந்தத் ‘துப்பறிவாளன்’ படம் 2017 வரையிலும் இழுத்திருச்சு. அதுக்கப்புறம் ஒரு நாள் மிஷ்கினின் மேனேஜர்கிட்ட நான் பேசினேன். ‘எனக்கு மிஷ்கின் எப்போ படம் பண்ணித் தருவாரு’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘ஸார் இப்போ படத்துல நடிச்சிட்டிருக்காரு. இயக்கிக்கிட்டும் இருக்காரு. வேற பல தயாரிப்பாளர்களும் அவரை அப்ரோச் செய்றாங்க. ஆனாலும் ஸார் இப்போ உங்க படத்தோட டிஸ்கஷன்ல்தான் இருக்காரு. இந்தப் படம் முடிஞ்சதும் நம்ம படம்தான் செய்யப் போறாரு’ன்னு சொன்னார்.

அதுக்கப்புறம் திடீர்ன்னு ‘சைக்கோ’ என்ற படத்தை மிஷ்கின் ஸார் இயக்கப் போறதா கேள்விப்பட்டேன். அப்போ அவரை போய் பார்த்து பேசினபோது, ‘நான் ‘சைக்கோ’ படத்தை செய்யப் போறேன். உங்களுக்குப் படம் செய்ய மாட்டேன். உங்களிடம் வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தர மாட்டேன்’னு சொன்னார்.

இந்த ‘சைக்கோ’ படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை. இந்தக் கதைக்காக எங்கப்பா மிஷ்கினுக்கு மிகப் பெரிய தொகையை அட்வான்ஸா கொடுத்திருக்கார். இந்த ‘சைக்கோ’ படத்தின்கதைகூட எனக்குத் தெரியும். படத்தின் துவக்கக் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக மிஷ்கின் ஸாருடன் நான் டிஸ்கஷன் செய்திருக்கிறேன்.

இந்த ‘சைக்கோ’ படத்தின் கேரக்டருக்காக சில முன்னேற்பாடுகளை செய்யச் சொன்னார். அதையும் நான் செஞ்சிட்டிருந்தேன். உடற்பயிற்சி மற்றும் சில பயிற்சிகளை ‘சைக்கோ’ படத்தின் கேரக்டருக்காக நான் செய்து பழகினேன். இந்தப் படத்துக்கு போட்டோ ஷூட்கூட எடுத்தார். அவரே நேரில் வந்து டெஸ்ட் ஷூட்டும் எடுத்தார். அதை எடுத்துப் பார்த்திட்டு எங்கப்பாவுக்கு வாட்ஸ்அப்ல மெஸேஜ் அடிச்சு ‘நான் நல்லா நடிச்சிருக்கேன்’னு சொல்லி பாராட்டியிருந்தார்.

இப்போ மிஷ்கின் ஸார் இந்தப் படத்தை வேறொரு ஹீரோவ வைச்சு செய்றாரு. நான் இந்தக் கேரக்டருக்கா மூணு வருஷம் மிஷ்கின் ஸார் சொன்னபடியெல்லாம் டிரெயினிங் எடுத்து வைச்சிருக்கேன். இடையில என்னை நடிக்க வைக்க 5, 6 இயக்குநர்கள் வந்தார்கள். அவர்களிடத்தில் ‘நான் மிஷ்கின் ஸாரோட அடுத்தப் படத்துல நடிக்கணும்ன்னு ஒப்பந்தம் செய்திருக்கேன். அதுனால அதை முடிச்சிட்டுத்தான் அடுத்தப் படம் செய்வேன்’னு சொல்லியனுப்பிட்டேன்.

இப்போ அவங்க எல்லாருமே வேறொருத்தங்களுக்கு படத்தை எடுத்து முடிச்சு ரிலீஸே பண்ணிட்டாங்க. மிஷ்கின் ஸார் என்கிட்ட ‘என்னுடைய படம்தான் உனக்கு முதல் படமா இருக்கணும்’ன்னு சொன்னார். அதுக்காகத்தான் நானும் மூணு வருஷமா காத்திருந்தேன்.

எங்கப்பா மிஷ்கின் ஸாருக்குக் கொடுத்த அட்வான்ஸ் பணத்தைவிடவும் அதிகமாகவே அன்பையும், பாசத்தையும் அவர்கிட்ட காட்டினாரு. இப்போ இந்தப் படம் எடுக்க முடியாதுன்னு அவர் சொன்னப்புறம் எங்கப்பா அனுபவிச்ச வலிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாதுங்க.

எல்லாரும் ‘உங்ககிட்டதான் அக்ரிமெண்ட் இருக்கே. கோர்ட்டுக்கு போங்க’ன்னு சொல்றாங்க. மிஷ்கின் ஸாருக்கே தெரியும். நாங்க அந்தப் படத்துக்காக எத்தனை நாள் டிஸ்கஸ் செஞ்சிருக்கோம்..? எப்படி படம் எடுக்கணும்ன்னு எத்தனை நாள் பேசியிருக்கோம்ன்னு…?

நாங்க கோர்ட்டுக்குப் போறது பெரிய விஷயமில்லை. ஆனால் இதுல உச்சக்கட்ட நீதிமன்றம்கிறது மிஷ்கின் ஸாரோட மனசாட்சிதான். நான் அந்த மனசாட்சிக்குத்தான் இத்தனையையும் சொல்லியிருக்கேன்..” என்கிறார் பெரும் வருத்தத்துடன்..!

நடிகர் மைத்ரேயாவின் வீடியோ பேச்சு இது :

இது குறித்து விளக்கம் கேட்க இயக்குநர் மிஷ்கினை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அவரிடம் நேரடியாகப் பேச இயலவில்லை. ஆனாலும் அவருக்கு நெருங்கிய வட்டாரத்திடம்  இது குறித்துப் பேசியபோது சில தகவல்கள் கிடைத்தன.

மிஷ்கினுக்கும் நடிகர் மைத்ரேயாவின் தந்தையின் நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். அந்த பிராஜெக்ட் தள்ளித் தள்ளிப் போய் ‘துப்பறிவாளனுக்கு’ அடுத்து அவர் ‘சைக்கோ’ பிராஜெக்ட்டை மைத்ரேயனுக்காக செய்யவிருந்ததும் உண்மைதான்.

myskkin-1

மிஷ்கின் பொதுவாகவே புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் மிகவும் ஆர்வமுள்ளவர். ‘சைக்கோ’ படத்தையும் மைத்ரேயா போன்ற முற்றிலும் புதுமுகங்களை வைத்துதான் இயக்கத் துடித்துக் கொண்டிருந்தார் மிஷ்கின். மைத்ரேயாவுக்கு இந்தப் பெயரை சினிமாவுக்காக சூட்டியதுகூட மிஷ்கின்தான்.

ஆனால் பிளான்படி 2015-ல் செய்ய முடியாமல் போய் 2017 கடைசியில் படத்தைத் துவக்க இருந்த நிலையில் படத்தின் பட்ஜெட் கொஞ்சம் அதிகமானது. அதேபோல் இயக்குநர் மிஷ்கினின் சம்பளமும் கூடுதலாக அமைந்தது. இது இரண்டுமே அந்த நிறுவனத்திற்கு ஏற்புடையதாக இல்லை.

இதனால்தான் பெரிய பட்ஜெட்டைக் களமாகக் கொண்ட ‘சைக்கோ’ படத்தை வேறு யாராவது பெரும் பொருட்செலவில் தயாரிக்க முன் வருபவருக்கு செய்யலாம் என்று முடிவெடுத்தார் மிஷ்கின். அதோடு இந்தப் பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில்கூட மிஷ்கின் தான் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்கவும் சம்மதித்துவிட்டார். அதையும் 3 அல்லது 4 தவணைகளில்தான் தன்னால் திருப்பித் தர இயலும் என்று தனது பொருளாதார சூழலை அவர்களிடத்தில் விளக்கியும் சொல்லிவிட்டார்.

இந்த ‘சைக்கோ’ படம் துவங்கிய நேரத்தில் அவர்கள் தரப்பில் இருந்து மிஷ்கினுக்கும், உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸுக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதற்கு சரியான விளக்கத்தை மிஷ்கினும், உதயநிதியும் சொல்லிவிட்டார்கள். மேலும் அவர்கள் நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடுத்த வழக்குக்கூட தள்ளுபடியாகிவிட்டது.

இரு தரப்பினரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இயக்குநர் மிஷ்கின் மைத்ரேயா தரப்பினருக்கு படம் செய்து தர வேண்டும் என்றுதான் இருக்கிறதே தவிர, ‘சைக்கோ’ படத்தை மைத்ரேயாவை வைத்துதான் எடுக்க வேண்டும் என்றில்லை என்பதால் நீதிமன்றத்திலும் இந்த வழக்கு செல்லுபடியாகவில்லை.

இப்போது கடந்துபோன கசப்பான சம்பவங்களால் மிஷ்கின் மிகவும் மனம் வருந்தி வாங்கிய பணத்தை மைத்ரேயா தரப்பினரிடம் திருப்பித் தர சம்மதித்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர தயாராக இருக்கிறார். ஆனால் மைத்ரேயா தரப்பினர் இதற்கு தயாராக இல்லாததால்தான் பிரச்சினை இப்படி பொதுவெளிக்கு வந்திருக்கிறது…” என்றனர்.