ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம்! – தரமணி வசந்த் ரவி

புரொடியூசர்கள் மற்றும் ஃபெப்சி தொழிலாளரகள் மோதல் போக்கால் படு சூடாகி உள்ள கோலிவுட்டை மேலும் சூடாக்குவது போல் ஆகஸ்ட் 11-ம் தேதி ‘தரமணி’ வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. அதிலும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனை மையமாக வைத்தே படக்குழு தொடர்ச்சியாக போஸ்டர்கள் மற்றும் டீஸர் வழியாக சாடியுள்ளது. இதனிடையே இப்படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநர் ராம் விளக்கிய போது, “இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள், காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்பதால், மதுகுடிப்பவராக இருக்கும்போது அதைக் காட்டியுள்ளேன்.

தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் தராவிட்டாலும் கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் 13 வயது நிரம்பாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இளைஞர்களுக்கான படம். அவர்கள் பார்த்தால் போதும்.தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தற்கான காரணத்தைத் தான் கண்டித்தேன். ஆண்கள் குடிக்கும் காட்சிகள் இருந்தால் ‘யு/ஏ’, பெண்கள் குடிக்கும் காட்சிகள் இருந்தால் ‘ஏ’ என்றார்கள். குடிப் பழக்கம் கெட்டது தான். அதில் ஆண், பெண் பேதமை ஏன் என்பது தான் என்னுடைய கேள்வி. 14 கட் கொடுத்து அதை கட் செய்தால் ‘யு/ஏ’ தருகிறோம் என்றார்கள். நீங்கள் ‘ஏ’ கொடுங்கள் என்று கேட்டு வாங்கியிருக்கிறோம்” என்று ராம் தெரிவித்திருந்தார்.

இதனிடையே எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை . அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது சராசரியே. அந்த வகையில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குனர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகு நான் இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் , எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார். ஒரு call centre ஊழியராக ‘தரமணி’யில் நடித்துள்ளேன்.

ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதிற்கு அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப் படுத்திக்கொள்ள முடிவதனால் மட்டுமே. படம் முழுக்கவே இவ்வாறான காட்சிகளும் வசனங்களும் இருக்கும். ‘தரமணி’ படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குனர் ராம் சார் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்துவைப்பதாலும் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இப்படத்தின் மேல் பெரும் நம்பிக்கை வைத்து தயாரித்து, ஒரு பெரிய ஸ்டார் படம் போல் விளம்பர யுக்திகளை கையாண்டு வருவத்திற்காக தயாரிப்பாளர் JSK சதிஷ் குமாருக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்” என உற்சாகமாக கூறினார் வசந்த் ரவி.