ஆனந்தம் விளையாடும் வீடு – வீட்டில் ஆனந்தமில்லை !

0
220

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கதில் சேரன், கௌதம் கார்த்தி, சரவணன் உட்பட கணக்கிலடங்கா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு.

ஒரு குடும்ப காவியம் என விளம்பரம் செய்யப்பட்டது, ஒன்றாக இருக்கும் சேரன் மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பங்காளி குடும்பம், அவர்களை பிரிக்க நினைக்கும் வில்லன், இரு குடும்பம் ஒன்று சேர்ந்து கட்டும் பிரமாண்ட வீடு, அதில் சேரனின் தம்பிகளால் வரும் குளறுபடி அதனால் பிரியும் குடும்பம், சேர்ந்ததா? பாதியில் நின்ற வீடு முடிக்கப்பட்டதா என்பதே கதை.

குடும்ப உறவுகள் அதனுள் இருக்கும் உணர்வுகள் அவற்றை பற்றிய படங்கள், தமிழ் சினிமாவில் குடும்ப படங்கள் வருவது குறைந்து விட்டது. ஆனால் தமிழகமெங்கும் எல்லா திரையரங்குகளிலும் கூட்டத்தை வர வைக்கும் சக்தி குடும்ப படங்களுக்கு உண்டு. ஆனால் தமிழ் சினிமா ஏனோ அதை கண்டு கொள்வதில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த ஏக்கத்தை போக்க எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் படம் தான் ஆனந்தம் விளையாடும் வீடு. ஆனால் படத்தின் கதையிலும் அதை உருவாக்கிய வித்ததிலும் இருக்கும் அமெச்சூர் தனம் படத்தை பார்க்கவே முடியாமல் செய்கிறது.

சேரனுக்கும், சரவணனுக்கும் உள்ள பங்காளி உறவு அவர்கள் குடும்பத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைதான் கதை, படம் ஆரம்பிக்கும் போது, ஒரு பாடல் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக காட்டுகிறார்கள் அது முடிந்தவுடன் ஆரம்பிக்கும் சோக கீதம் படம் முடியும் வரைக்கும் முடியவில்லை.

குடும்பக்கதைக்கு உறவுகளுக்குள் இருக்கும் சின்ன சின்ன அழகான தருணங்களும் அவர்களுக்குள் இருக்கும் ஈகோ எப்படி பிரச்சனைகளை இழுத்து வரும் பெண்களின் சின்ன சின்ன குணங்கள் எப்படி பிரச்சனையை தரும் அவர்களின் அன்பு எப்படி ஒன்று சேர்க்கும் என்பதில் தான் இருக்கிறது ஆனால் இது எதுவுமே படத்தில் இல்லை.

படத்தில் சேரன், சரவணன் இருவரை தவிர படத்தில் யாருடயை பாத்திரமும் சரியாக எழுதப்படவே இல்லை. கௌதம் கார்த்திக் பாத்திரம் உட்பட வேறு எந்த பாத்திரமும் தெளிவே இல்லை. கௌதம் கார்த்திக் காதலிக்கிறார் அது கதைக்கு எந்த விதத்தில் உதவுகிறது என்றே தெரியவில்லை. ஷ்வத்மிகா இப்படத்தில் அறிமுகம் பாவம், அதே போல் தான் டேனியல் பாலாஜி பாத்திரமும் தமிழ் சினிமாவின் மசாலா வில்லனை அப்படியே பிரதிபலித்து எரிச்சல் பட வைக்கிறார்.

பட திரைக்கதை, வசனம் என எதிலுமே ஈர்ப்பே இல்லை. ஒரு காட்சியில் கூட, நமக்கு கடத்த வேண்டிய உணர்வு நமக்கு கடத்தப்படுவதே இல்லை. பல வருடங்களுக்கு முன் அருமையான குடும்ப படங்கள் தந்தவர் சேரன் அவர் நடித்திருக்கும் காட்சிகளில் கூட ஒரு ஒழுங்கில்லை. ஒவ்வொருவரும் தொலைக்காட்சி நாடகத்தில் நடிப்பது போல் சோக கீதம் பாடுகிறார்கள்.

ஒளிப்பதிவு மொத்த கூட்டத்தையும் அழகாக காட்டியிருக்கிறது. இசை தான் படத்தை ஓரளவேனும் தாங்குகிறது.

படம் முழுக்க சண்டை போடுகிறார்கள் ஆனால் அந்த சண்டைகள் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எதற்காக இந்த அநாவசிய சண்டை என்றும் புரியவில்லை, சேரன் ஒரு அரதப்பழசான ப்ளாஷ்பேக்கை சொன்னவுடன் படத்தில் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள். அந்த ப்ளாஷ்பேக்கை படத்தில் முதல் சண்டை போடும்போதே சொல்லியிருந்தால் நாம் தப்பித்திருக்கலாம்

ஆனந்தம் விளையாடும் வீட்டில் ஆனந்தம் இல்லை