சிறுவர்களுக்கான சினிமா – குரங்குப்பெடல் !!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மதுபானக் கடை பரப்புகள் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குரங்கு பெடல்.

எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இலக்கியம், சிறுகதை, நாவல் போன்றவற்றில் இருந்து படம் எடுப்பது, உலகம் முழுக்க நடைபெறும் வழக்கம் தான். இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் அந்தந்த வட்டாரத்து மக்களின் உண்மையான வாழ்க்கை அந்த கதையில் தானாகவே அமைந்துவிடும். நீங்கள் அதற்கு தனியாக உயிர் கொடுக்க முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு முழுமையான வாழ்க்கை அதிலேயே இருக்கும்.

தமிழில் நாவல் சிறுகதைகளில் இருந்து படம் எடுக்கும் பழக்கத்தை, வெற்றிமாறன் மட்டுமே வம்படியாக செய்து கொண்டிருக்கிறார். இப்போது அங்கங்கே சில முயற்சிகள் அதன் மூலம் மலர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த படம் திரைப்பட விழாக்களில் பார்க்கும் படங்களை ஞாபகப்படுத்துகிறது. படத்தின் கதையில் வெட்டு, குத்து, ரத்தம் என எதுவும் இல்லை அதிரடி திருப்பங்கள் இல்லை. ஆச்சரியப்பட வைக்கும் டிவிஸ்ட்கள் எதுவும் படத்தில் இல்லை. ஒரு அருமையான வாழ்க்கை ஒரு அறிவுரையுடன் இனிதாக நிறைவு பெறுகிறது.

நாம் வாழ்ந்த காலங்களின் நினைவுகளை நாம் எளிதாக மறந்து விடுகிறோம். ஆனால் அதை ஒரு கதையே சினிமாவோ எடுத்துக்காட்டும் போது அந்த ஞாபகங்கள் நமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தரும், அப்படி எண்பதுகளின் காலகட்ட பின்னணியில் வாழ்ந்த சிறுவர்களின் வாழ்க்கையை இந்த படம் சொல்கிறது, அதன் வழியே நாம் எத்தனை எல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் சொல்கிறது.

ஒரு படம், அதன் கதையைப் பற்றி பேச விடாமல், இந்த படம் எப்படி செய்யப்பட்டு இருக்க வேண்டும் சொல்ல விடாமல், பல ஞாபகங்களை கிளறி, உங்களை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றாலே, அந்த படம் ஜெயித்து விட்டது என்று அர்த்தம். இந்த படமும் அந்த வகையில் நம்மை, நம் சிறுவர்களாக இருந்த காலத்தை, அது எத்தனை சந்தோஷமாக இருந்தது என பழைய ஞாபகங்களை கிளறி விடுகிறது.

படத்தில் கதை இது மிக அழகுதான். 80 களின் இறுதியில் பள்ளி விடுமுறையில் சிறுவர்கள் சைக்கிள் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள், வீட்டில் சைக்கிளை புறக்கணித்து வாழும் அப்பாவிற்கு ஒரு பின் கதை இருக்கிறது. அப்படி இருக்கும் ஒரு வீட்டில் இருந்து, ஒரு சிறுவன் சைக்கிள் கற்றுக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறான், அவன் குடும்பத்தில் என்ன மாற்றம் நடைபெறுகிறது, அந்த சிறுவர்களுக்குள் சண்டையும் ஓற்றுமையும் எப்படி ஏற்படுகிறது, என்பதை ஒரு வாழ்க்கை கதையாக மிக அழகாக சினிமாவாக எடுத்திருக்கிறார்கள்.

உலக திரைப்படங்கள் இப்படி தான் எந்தவித பரபரப்பும் இல்லாமல், ஓடை நீரை போல் அமைதியாக ஓடி நம்முள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும். அந்த வகையில் ராசி அழகப்பனின் சிறுகதையை மிக அட்டகாசமான திரைக்கதையாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் கமலக்கண்ணன்.

நடித்திருக்கும் சிறுவர்களின் நடிப்பு அத்தனை பிரமாதமாக இருக்கிறது. எப்படி இப்படி அவர்களிடம் நடிப்பை வாங்கினார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது.

எல்லோரையும் மிஞ்சி நிற்கிறார் காளிவெங்கட் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக அட்டகாசம் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

யூட்யூபில் பிரபலமான பல முகங்கள் படத்தில் வந்து போகிறார்கள்.சைக்கிள் கடை மிலிட்டரி அவருடன் சண்டை போடும் ஆள் என ஒவ்வொரு பத்திரமும் அழகு.

ஜிப்ரானின் இசையு அற்புதம். இசையும் ஒளிப்பதிவும் பிரம்மாண்டத்தைக் காட்டாமல் ஒரு அழகான சினிமாவுக்கு, எளிமையான சினிமாவிற்கு, என்ன வேண்டுமோ அதை செய்து விடுகிறது.

மதுபானக்கடை படம் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் கமலக்கண்ணன் குரங்கு பெடல் மூலம் மனதிற்குள் அமர்ந்து விட்டார். தமிழ் சினிமா போற்ற வேண்டிய படைப்பு.