தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜனின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அஜித்குமார் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் வரும் ஜனவரி 10-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் தனது அடுத்த இரண்டு படங்கள் பற்றி செய்தியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிதாகத் தயாரிக்கப் பட இருக்கும் இந்த இரண்டு படங்களிலுமே தனுஷ் நாயகனாக நடிக்கிறார். சென்ற வருடம் தமிழ் சினிமாவை கலக்கிய இரண்டு இயக்குநர்கள் இந்தப் படங்களை இயக்கப் போகிறார்கள்.
இது பற்றி தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “எங்களது ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனத்துக்கு இந்த வருடம் மிக முக்கியமான படம். ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லருக்கான பெரும் வரவேற்பு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையை
தந்திருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ், 2019-ம் ஆண்டில் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை தயாரிப்பதற்கு தயாராக உள்ளது. மேலும், அதில் முதல் இரண்டு படங்களை இன்று அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
மிகவும் கொண்டாடப்படும் நடிகரான தனுஷ் அந்த இரண்டு படங்களிலும் நாயகனாக நடிக்க, இயக்குநர்கள் துரை செந்தில்குமார் மற்றும் ‘ராட்சசன்’ ராம்குமார் ஆகிய இரு திறமை வாய்ந்த இயக்குநர்கள் அந்தப் படங்களை இயக்கவுள்ளார்கள்.
துரை செந்தில்குமார் இயக்கும் படத்திற்கு, விவேக் மெர்வின் இரட்டையர்கள் இசையமைக்கிறார்கள்.
தனுஷ் எப்போதுமே தமிழ் சினிமாவில் ஒரு பெருமைக்குரிய நடிகர்தான். அவருக்கென்று ஒரு வலுவான இடத்தை தக்க வைத்திருப்பதுதான் அவருடைய தனித்துவமான அம்சமாகும். இதுவே அவர் கமெர்சியல், யதார்த்த படம் என எந்த வகை படங்களில் நடித்தாலும் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபமாகவே அமைகிறது.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் எப்போதுமே நல்ல திறமையான கலைஞர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியடைகிறது. குறிப்பாக, துரை செந்தில்குமார் மற்றும் ராம்குமார் ஆகியோர் புதுமையான கதைகளை, தனித்துவமான கதை சொல்லல் மூலம் சிறப்பான படங்களாக தருவது சிறப்பம்சம். இந்த மாதிரி திறமையான கலைஞர்களுடன் பணி புரிவது ஒரு தயாரிப்பாளராக, சத்யஜோதி பிலிம்ஸ்க்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன்.
இந்த இரண்டு படங்களின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.