தென்னிந்திய திரையுலகம் கண்ட அசாத்தியமான நடிகைகளில் ஒருவர் எஸ்.என்.லட்சுமி!

தமிழின் சிறந்த நடிகைகளின் பட்டியலைத் தயாரித்தால் முதல் பத்துக்குள் இடம் பிடிப்பார் எஸ். என். லட்சுமி. மூன்று தலைமுறை ரசிகர்களை தனது நடிப்பால் ஈர்த்த மகத்தான நடிகை இவர். வயதானவர்களுக்கு சர்வர் சுந்தரம், துலாபாரம் முதலியன இவர் நடித்தப் படங்களில் மறக்க முடியாதவை. அதே போல் மிடில் வயதினருக்கு மைக்கேல் மதன காமராஜன், மகாநதி, விருமாண்டி என கமலின் பல படங்கள். பின்னர் சின்னதிரை அடிமைகளாகி போன இல்லத்தரசி களுக்கு பல தொலைக்காட்சி தொடர்கள்.

நகைச்சுவை, குணச்சித்திரம், ஆக்ரோஷ சண்டைக் காட்சிகள் என அனைத்திலும் அனாயசமாக நடித்த இவர் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் என்.எஸ்.லட்சுமி. என்.எஸ்.கே. எம்ஜிஆர், சிவாஜி என தமிழின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ள இவர் நடிப்பு மீதிருந்த காதலால் திருமணம் செய்து கொள்ளவில்லை.

எக்கச்சக்கமான திரைப்படங்களில் அம்மா, பாட்டி வேடங்களில் நடித்துள்ள இவர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவாஸ்டேஜ், ஞானதேசிகர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நாடக கம்பெனிகள், கே.பாலசந்தரின் ராஹினி கிரியேஷன்ஸ் உள்ளிட்ட நாடக கம்பெனிகளிலும் நடித்துள்ளார்.

அவரிடம் ஒரு முறை ”சிவாஜி, எம்.ஜி.ஆர்.கூட நடிச்ச அனுபவம்?” பத்திச் சொல்லுங்களேன் என்று கேட்டப் போது சொன்னது இது:

”எம்.ஜி.ஆர்.கூட கிட்டத்தட்ட 20 படங்கள் நடிச்சிருப்பேன். அதுல எனக்கு ஞாபகம் வர்றது ‘தொழிலாளி’  படம். அதுல எம்.ஜி.ஆருக்கு அம்மா கேரக்டர். தனக்கு வேலை கிடைச்ச சந்தோஷத் துல ‘அம்மா எனக்கு வேலை கிடைச்சிருச்சு’னு கத்திக்கிட்டே ஓடிவந்து எம்.ஜி.ஆர். என் னோட கால்ல விழுவார். ஆனால், கால்ல விழுறது ஸ்க்ரிப்ட்டுல இல்லாதது. ‘ஐயையோ என்னங்க என் கால்ல விழுறீங்களே?’னு பதறினேன். எம்.ஜி.ஆர். ரொம்பச் சாதாரணமா, ‘இந்தப் படத்துல நீங்க எனக்கு அம்மா. மரியாதையைத் தூக்கி ஓரமா வெச்சுடுங்க’ன்னார், பிறகு அந்த ஸ்டில்லையும் எனக்கு பிரின்ட் போட்டு அனுப்பினார்.

சிவாஜியோடும் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். அவர்ட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். இவ்வளவு ஏன், அவருக்குப் பாட்டியாவே நடிச்சிருக் கேன். அவரோட பையன் பிரபுவுக்கும் பாட்டியா நடிச்சது பெருமையான விஷயம்.

கமல் எப்ப போன் பண்ணாலும், ‘என் மனசுலயே இருக்கீங்கம்மா. நீங்க பண்ற மாதிரி சரியான கேரக்டர் அமைஞ்சா கண்டிப்பா கூப்பிடுவேன்’ம்பார்.

ரஜினிகூட மூணு படங்கள்தான் பண்ணியிருக்கேன். ‘உங்களுக்கும் எனக்கும் சரியான படங்களே அமையலை’னு ஒருமுறை வருத்தப்பட்டார். ஹீரோயின்களும் எந்தக் கர்வமும் இல்லாம பழகுவாங்க. குறிப்பா ஜெயலலிதா. சாரதா ஸ்டுடியோவை இடிச்சுக் கட்டிகிட்டு இருந் தப்ப ஹீரோ, ஹீரோயின்களுக்கு மட்டும் ரூம் கொடுத்துட்டாங்க. நாங்க தங்க சரியான ரூம் இல்லை. அப்ப என்னைத் தன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போய் எல்லா உதவிகளையும் செஞ்சாங்க.

அதேபோல ‘பாசம்’ல சரோஜாதேவி யின் அம்மா கேரக்டர். கண் பார்வை இல்லாத வளா நடிச்சிருப்பேன். எம்.ஜி.ஆரைக் கல்யாணம் பண்ணிக்க எங்கிட்ட கேட்கிறப்ப, ‘உன் அம்மாவுக்கு கண் வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆனால், கருத்து தெரியாம இல்லை’னு பேசுவேன். அப்ப சரோஜா உண்மையிலேயே அழுதுடுச்சு. இப்ப உள்ள சினேகா, த்ரிஷா வரை எல்லாரும் ‘பாட்டி… பாட்டி..’னு பாசமா பழகுறாங்க. இதைவிட வேறென்ன சந்தோஷம் வேணும்?

 

நடிகை எஸ்.என்.லட்சுமி காலமான தினமின்று