மகா கலைஞன் நடிகர் சீயான் விக்ரமன்- பிறந்த நாள் ஸ்பெஷல்!

மிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, இம்றைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக உடலை உருக்கி உழைக்கும் மகாக் கலைஞன் நடிகர் சீயான் விக்ரமனின் 58ஆவது பிறந்தநாள் இன்று..! சீயான் என்று மூன்றெழுத்தில் மூச்சை வைத்திருக்கும் ,நண்பர்கள், பள்ளி, கல்லூரி தோழர்கள் என எல்லா இடங்களிலும் ‘கென்னி’ (இயற்பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ்.0 என்ற நாமகரணம் கொண்ட. விக்ரமின் போராட்ட வாழ்வும், சினிமா மீது அவருக்கு இருக்கும் வெறித்தனமான காதலும் குறித்த சிறு பதிவு…!

வெள்ளித்திரை வெற்றிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காத்திருந்த விக்ரம் இந்த இடை வெளியில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் என்பது வெகு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்.இதேபோல வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விக்ரம் டப்பிங் பேசியது இப்பொழுது திரைப்படம் பார்க்கும்போது ஒரு சில ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்..அஜித்தின் முதல் திரைப்படமான அமராவதி, பாசமலர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் குரலாக ஒலித்தது நடிகர் விக்ரம் என்பது இன்னும் பல அஜித் ரசிகர்கள் கூட அதிகம் அறியாத ஆச்சரிய தகவல்.இவை எல்லாவற்றையும் விட ஆஸ்கர் விருதுகளை வாரிக் குவித்த ரிச்சர்ட் அட்டபரோவின் ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்ற வடிவத்தில் காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லிக்குக் குரல் கொடுத்தவரும் விக்ரம்தான். இதிலும் என்ன ஒரு வெரைட்டியைக் காட்டியிருக்கிறார்!!! டப்பிங் கலைஞர்களுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு வேளை அதிலும் விருதுகளைக் குவித்திருப்பார் விக்ரம். (கட்டிங் கண்ணையா)

1966 ஏப்ரல் 17 அன்று பிறந்தவரான விக்ரம் ரஜினி கமலுக்குப் பிறகு இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் வயதில் சீனியர். ஆனால் இளமைப் பொலிவு மிக்க தோற்றம், வலுவான உடல் கட்டு, அசாத்திய உழைப்பு ஆகியவற்றில் 1990-களில் பிறந்தவர்களாக இருக்கக்கூடிய இளம் நடிகர்களுக்கு இணையாகப் போட்டி போடுவதில் இன்னமும் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

விடா முயற்சியின் முன்னுதாரணமாகத் திகழும் விக்ரமுக்கு தொடக்கத்திலிருந்தே நம்பிக்கை என்னும் பெருவிரல் பெரிதும் கைக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல.. தமிழில் நாயகனாக நடித்தவர் மலையாளம், தெலுங்கு படங்களில் துணை நாயகனாகவும் சில படங்களில் எதிர்மறை வேடத்திலும்கூட நடிச்சார். ’புதிய மன்னர்கள்’, ‘ஹவுஸ்ஃபுல்’, ‘உல்லாசம்’ எனத் தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் நடிச்சுக்கொண்டிருந்தாலும் அந்தப் படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டதே தவிர ஒரு நாயக நடிகராக அவருக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தரலை..

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்துவிட்டு, ‘மீண்டும் வாய்ப்பு தாருங்கள்..!’ என தயாரிப்பு கம்பெனிகளின் கதவுகளை அவ்வளவு எளிதில் தட்டிவிட முடியாது. ஏளனம், கிண்டல், சக கலைஞர்களின் துரோகம், குடும்பத்தின் நெருக்கடி என்று பல்வேறு விஷயங்களை தாண்டித்தான் ஒரு ஹீரோ, வெற்றியைப் பறிக்க முடியும். அப்படித்தான் சேது படத்தின் வெற்றி மூலம், பல்லாண்டு தோல்வி மூலம் பெற்ற ரணத்தை ஆற்றிக்கொண்டார் விக்ரம். இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து படங்களில் புக்காகி கோடிகளை குவித்திருக்க முடியும். ஆனால், அந்த பாதையைத் தேர்ந்தெடுக்காமல், தனக்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்லதொரு பெயரை வாங்கிக் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கி இன்று வரை அதே வழியில் பயணிக்கிறார் விக்ரம்..

கமர்ஷியல் மாஸ் படங்களில் நடித்துக்கொண்டே பாலாவுடன் மீண்டும் கைகோத்து ‘பிதாமகன்’ படத்தில் சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் சித்தனாக நடித்திருந்தார். ‘சேது’, ‘காசி’ படங்களை விட மிகத் தீவிரமாக தன் உடலின் நிறம் உட்பட அனைத்தையும் மாற்றி நடித்தார். வசனமே பேசாமல் நடித்த அந்தப் படத்துக்கு 2003-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். கமல்ஹாசனுக்குப் பிறகு நடிப்புக்கான தேசிய விருதைப் பெற்ற தமிழ்க் கலைஞன் ஆனார்.

விக்ரமுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தப் படமும் வணிக வெற்றியும் அடையவில்லை விமர்சகர்களின் பாராட்டையும் பெறவில்லை. அவரது படங்களுக்கிடையிலான கால இடைவெளியும் அதிகரித்துவிட்டது. அதில் அவரது தவறு எதுவும் இல்லை. ஆனால் இதன் மூலமாக அவர் முன்னணி அந்தஸ்தில் இல்லை என்பது போன்ற மாயை உருவாகியிருக்கிறது.

ஆனால் இது மாயை மட்டும்தான். விக்ரம் என்றுமே முன்னணி நாயகனாகவே இருக்கிறார். அதேபோல் நடிப்பில் அவர் அடுத்தடுத்த படங்களில் என்னென்ன புதுமைகளைச் செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். விக்ரமை ஒரு கேரக்டரில் எப்போதுமே அடக்கி விட முடியவே முடியாது. மொட்டை அடிக்க சொன்னால் அடிப்பார், கிலோ கணக்கில் எடை குறைக்க சொன்னாலும் செய்வார். கண் தெரியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், மூளை வளர்ச்சி குன்றியவராகவும், வெளியுலகமே தெரியாத நபராகவும் நடிக்க விக்ரமால் மட்டும் தான் முடியும்.

நம் நாட்டின் உயரிய தேசிய விருது தொடங்கி பிலிம்பேர் அவார்டு, எடிசன் விருது, மாநில அரசு விருதுகள் என அவர் தன் நடிப்புக்கு பெறாத அங்கீகாரமே இல்லை. கடைசியாக ஆதித்ய கரிகாலனாக நம்மை வசீகரித்த சீயான் விக்ரம், தங்கலான் கேரக்டரில் நம்மை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா உலகையே மீண்டும் கவர வரவுள்ளார்.

என்றும் ஸ்மைலி சீயான் விக்ரமுக்கு  சினிமா பிரஸ் கிளப் சார்பில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!