கல்லூரிப் பின்னணியில் அசத்தும் போர் !!

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், டேவிட் படப் புகழ் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போர்.

மணிரத்தினம் ஸ்கூலில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குனர் பிஜோய் நம்பியார் திரையாக்கத்தில், சினிமாவிற்கு ஒரு தரமான படைப்பிற்குண்டான அத்தனை தெளிவுகளும் அட்டகாசமான மேக்கிங்கும் படம் முழுக்க தெரிகிறது.

இரு இளைஞர்களுக்குள் ஏற்படும் தவறான புரிதலில், அவர்கள் இருவரின் ஈகோ முட்டிக்கொள்ள, மொத்தமாக ஒரு கல்லூரியே போர்களமாகிறது. இது தான் படத்தின் மையக்கதை.

அர்ஜுன் தாஸ் கல்லூரி முடித்து தன்னுடைய பைனல் தீசிஸை சப்மிட் செய்யும் வேலைகளில் இருக்கிறார். அந்த கல்லூரிக்கு புதிதாக வரும் இளம் மாணவன் காளிதாஸ் ஜெயராம், இருவருக்கும் சின்ன வயதில் ஏற்பட்ட ஒரு பகை இப்போது போராக வெடிக்கிறது. இந்தப்போரில் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் மட்டுமல்லாது, மொத்தகல்லூரியும் சிக்கிக் கொள்கிறது.

இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில், ஒரு கல்லூரியின் பின்னணியில் அத்தனை கதாபாத்திரங்களை கட்டமைத்து, கல்லூரிக்குள் நடக்கும் அத்தனை விஷயங்களையும், திரைக்கதையாக படைத்திருக்கிறார்கள். அர்ஜுன்தாஸ், காளிதாஸ் ஜெயராம் மட்டுமில்லாமல் படத்தில் இன்னும் எக்கச்சக்க கதாபாத்திரங்கள் வருகிறார்கள். அத்தனை பேருக்கும் அழுத்தமான பின்னணியும், கதைக்களமும் படத்தில் இருப்பது சிறப்பு.

படத்தின் மிகச் சிறப்பான அம்சம் நடிப்பு. அர்ஜுன் தாஸ் மட்டும் இல்லாமல் படத்தின் வரும் ஒவ்வொரு சின்ன கதாபாத்திரமும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

ஒரு காட்சியின் பின்னணியில் இருக்கும் ஒவ்வொரு சின்ன கதாபாத்திரம் நல்ல நடிப்பை தரும் போது, நாமும் அந்த கதைக்குள் நுழைந்து விடுகிற உணர்வை படம் தந்து விடுகிறது.

அர்ஜுன் தாஸ் ஜோடியாக கல்லூரியில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக போராடும் பாத்திரத்தில் பானு அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

அண்ணனை இழந்து அர்ஜுன் தசை அண்ணனாக ஏற்றுக் கொண்டிருக்கும் சஞ்சனா, காளிதாஸை காதலிப்பதால் இருவரின் ஈகோவிற்குள் சிக்கிக்கொள்ளும் பாத்திரம். ஒரு கல்லூரி பெண்ணை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.

காளிதாஸ் உடனான அவரது ரொமான்ஸ் காட்சிகள் அத்தனையும் அட்டகாசமாக வந்திருக்கிறது

அர்ஜுன் தாஸுக்கு மிகக் கனமான பாத்திரம் அதை உணர்ந்து நடித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் காளிதாஸ் இடம் அடி, அடி என்று கதறும் போது, அவரும் முகத்தில் மாறும் பாவங்கள் அவருக்குள் ஒரு நல்ல நடிகன் ஒளிந்திருப்பதை காட்டுகிறது.

காளிதாஸ் ஜெயராம் இப்படம் அவருக்கு ஒரு லைஃப் டைம் பாத்திரம். ஆஜானுபாகுவான தோற்றத்தில் அறிமுகமாகும் முதல் காட்சியிலே நம்மை ஈர்த்து விடுகிறார். அர்ஜுன் தாஸ் மீதான கோபம், சஞ்சனா மீதான காதல், பார்க்கும் பெண்கள் இடத்தில் செய்யும் சேட்டை, சீனியர்களுடன் சண்டை என ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்.

எடுத்த உடனே விஷயத்துக்கு வருவது போல், படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைந்து, ஒரு கல்லூரிகளில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் திரைக்கதைக்குள் நுழைத்து, எங்கும் நிமிர விடாமல், இறுதிவரை நம்மை அழைத்துச் சென்று அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பிஜோய் நம்பியார்.

படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்தோடு இரண்டற கலந்து படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது. அதுவும் இறுதிக் காட்சிகளில் ஒரு மிகப்பெரிய ஆக்சன் சீக்குவன்ஸ் வருகிறது, அந்த ஆக்சன் சீக்வென்சை, இருட்டில் மிக குறைவான வெளிச்சத்தில் எப்படி எடுத்தார்கள் என்ற பிரமிப்பை தரும்படி அமைத்திருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் என்பது ஒளி, ஒலி, வசனம், பின்னணி காட்சிகள், என பல வகையான விஷயங்களும் ஒன்று சேர்ந்து நமக்குள் ஏற்படுத்தும் உணர்வைத் தர வேண்டும். ஆனால் இது அத்தனையும் தாண்டி, இதை கோர்க்கும் படத்தொகுப்பு மிக முக்கியம். அதை இந்தப் படத்தை பார்த்தால் அதை உணரலாம் அந்த அளவு படத்தொகுப்பு இந்த படத்தில் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது

படத்தின் ஒரே மைனஸ் அர்ஜுன் தாசுக்கும் காளிதாஸ் ஜெயராமுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை, சரியாக சொல்லாத விதம்தான் அதை மட்டும் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இருக்கலாம்.

சினிமாவின் அத்தனை நோக்கங்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்கள் பார்க்க வேண்டிய படமாக இப்படம் இருக்கும்

போர் இன்றைய தலைமுறையை பரவசப்படுத்தும் ஒரு சினிமா