ஜோதிகா, செப்டம்பர் 20 அன்று தனது முகநூல் பக்கத்தின் வழியாகத் தன் ரசிகர்களுடன் நேரடி உரையாடலில் கலந்துகொண்டார். அப்போது மணிரத்னம் பட வாய்ப்பு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ஜோதிகா, “மணிரத்னம் அவர்களில் படத்தில் என்னை நடிக்க வைப்பதற்காக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதலில் கார்த்தியை தான் அணுகியது. மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், ‘காற்று வெளியிடை’ படத்தில் நடிகராகவும் அவர் பணியாற்றியுள்ளார். அவர் தான் முதலில் இப்படியொரு வாய்ப்பு உள்ளது என்று என்னிடம் கூறினார். அதன் பின்னர் கதையை கேட்டு என்னுடைய சம்மதத்தை தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த உரையாடலின்போது, “சூர்யாவைத் தவிர்த்து தமிழ்த் திரையுலகில் எனக்குப் பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. அவருடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறினார்.
சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்த கேள்விக்கு, “நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கத் தயாராக உள்ளோம், எங்கள் இருவருக்கும் பிடித்த திரைக்கதைக்காகக் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்