ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா

இயக்கம்: சுரேஷ் மாரி
நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன்
இசை: டோனி பிரிட்டோ

பொதுவாக பா ரஞ்சித், நீலம் ப்ரொடக்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் படங்கள், சாதிய ஒடுக்கு முறைகளை ஏற்றத்தாழ்வுகளை பேசும் என்கிற கருத்து வலுவாக இருக்கிறது. இதுவரையிலும் அப்படி ஆன படங்கள் அந்நிறுவனத்திலிருந்து வந்துள்ளது என்பதே உண்மை. அதிலிருந்து மாறுபட்டு ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை, ஒரு அம்மாவின் கதையை, மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜே பேபி.

பேபி ஆக வரும் ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள். ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஊர்வசி முதிர்ந்த வயதில், ஒவ்வொரு பிள்ளைகளின் வீடுகளில் மாறி மாறி வசித்து வருகிறார். வயதான காரணத்தால் அவருக்கு மறதி பிரச்சினை வந்து வந்து போகிறது. ஒரு கட்டத்தில் அவர் வழிதவறி வெஸ்ட் பெங்கால் சென்று விடுகிறார். போலீஸ் மூலமே இந்த தகவல் அண்ணன் தம்பிகளுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே சண்டை போட்டு பிரிந்திருக்கும் அண்ணன் தம்பி ஆன அட்டக்கத்தி தினேஷும், மாறனும் இணைந்து, அம்மாவை கூட்டி வர வெஸ்ட் பெங்காலுக்கு பயணிக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அம்மாவை அழைத்து வந்தார்களா ? அவர்கள் குடும்பம் ஒன்று சேர்ந்ததா என்பது தான் திரைப்படம்.

தினசரி வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை வைத்து, அதை அழகாக திரைக்கதை ஆக்கி வரும் படங்கள் மிக குறைவு. பொதுவாக இம்மாதிரி படங்கள் மலையாளத்தில் மட்டுமே வருகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதோ இப்போது அந்த குற்றச்சாட்டை நீக்கும் வகையில் நம் தினசரி வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் வகையில் வந்திருக்கிறது இந்த ஜே பேபி படம்.

ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் எப்படி இருக்கும், ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பம் அவர்களின் வாழ்க்கை, சென்னையில் எப்படி இருக்கும், எல்லாவற்றையும் தத்ரூபமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். இயக்குநர் தான் நேரில் அனுபவித்த உண்மைச் சம்பவத்தை படமாக்கியிருக்கிறார் அதனால் படம் தத்ரூபமாக வந்திருக்கிறது.


மொத்தப்படத்தையும் ஊர்வசியை நம்பியே எடுக்க முயன்று இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதை எந்த குறையும் இல்லாமல் ஊர்வசியம் நிவர்த்தி செய்து இருக்கிறார். அவருக்கு இது ஒரு லைஃப் டைம் படமாக இருக்கும். ஜெபேபியாக அவர் செய்யும் கலாட்டாக்கள் சிரிப்பு வர வைக்கிறது. அதே நேரம் பிள்ளைகளுக்காக அவர் ஏங்குவதும் உருக வைக்கிறது.

அட்டகத்தி தினேஷ் கொஞ்சம் மெச்சூர்டான நடிப்பை தந்திருக்கிறார். குடும்பத்துடன் சேர ஏங்கும் இளைய பையன் வேடம் அவருக்கு, ஆனால் அண்ணன் தன் மீது காட்டும் கோபத்தால் தவிப்பது, அம்மா மீதான பாசம், மனைவி மீதான காதல் என ஒவ்வொரு உணர்வுகளையும் அவர் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

உணர்வுகளை சொல்லும் இந்தப்படம் முழுக்க ஒரு அழுகாட்சி காவியமாக ஆகாமல், நம்மை படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பது ஊர்வசி இல்லை மாறன் தான். இந்த படம் மாறனுக்கு ஒரு புதிய முகத்தை தந்திருக்கிறது. இதுவரை காமெடியில் சின்ன சின்ன வேடங்கள் மட்டுமே செய்திருக்கும் மாறன், இந்தப் படத்தில் முழு நீள பாத்திரத்தில் அட்டகாசப்படுத்தி இருக்கிறார் அவர் அடிக்கும் ஒவ்வொரு ஒன்லைனும் திரையரங்கில் சிரிப்பு வடியை கொளுத்திப் போடுகிறது. சிரிக்க மட்டும் அல்லாமல் உணர்வுகளையும் வெளி காட்டி இறுதியில் நம்மை கவர்ந்து விடுகிறார்.

சென்னை, வெஸ்ட் பெங்கால், ரயில் பயணம் என இந்தியா முழுக்க பயணிக்கும் காட்சிகள் படத்தில் நிறைய இருக்கிறது. அதை ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறது. இசையும் பாடல்களும் படத்திற்கு பலம் செய்திருக்கிறது

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு மிக முக்கியமான படமாக ஆகியிருக்கும். ஊர்வசி பற்றி வரும் அந்த ஹாஸ்பிடல் எபிசோட் படத்திற்கு மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

இயக்குனர் சுரேஷ் மாறி முதல் படத்தில் குடும்ப உறவுகளின் சிக்கல்களையும், மேன்மையையும் அழகாக சொல்லி தான் ஒரு நல்ல இயக்குநர் என்று பெயரை எடுத்து இருக்கிறார்.

ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா