அமலா பால் தடயவியல் நிபுணராக நடிக்கும் புதிய திரைப்படம்..!

0
243

நடிகை அமலா பால் நாயகியாக நடிக்கும் அடுத்தப் படத்தை ஏ.ஜே. ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் ஒயிட் ஸ்கிரீன் மீடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்க உள்ளார். நாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் தடயவியல் நிபுணராக நடிகை அமலா பால் நடிக்கிறார். இந்திய சினிமாவில் ஒரு நாயகி கதாபாத்திரம் தடயவியல் நிபுணராக இடம் பெறும் முதல் திரில்லர் படம் இதுதான்.

ஒரு மர்மமான வழக்கை தீர்க்க, அவர் கையாளும் தனித்துவமான வழிமுறைகளை சுற்றி நடக்கும் கதை. மேலும், இத்திரைப்படம் கேரள முன்னாள் காவல் துறை மருத்துவர் டாக்டர் பி. உமாதத்தன் விசாரித்த ஒரு உண்மையான வழக்கை அடிப்படையாகக் கொண்டது.

இயக்குநர் அனூப் பணிக்கர் மற்றும் கதாசிரியர் அபிலாஷ் பிள்ளை ஆகிய இருவரும் அவருடன் ஆறு மாதங்கள் கலந்துரையாடிய பின்பே கதையை எழுதியிருக்கின்றனர். தடய அறுவை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ள பல மருத்துவக் கல்லூரிகளையும்கூட இருவரும் பார்வையிட்டுள்ளனர்.

சுவாரஸ்யமாக, ‘ராட்சசன்’ படத்தின் படத் தொகுப்பாளர், கலை இயக்குநர், சண்டைப் பயிற்சியாளர் என ஏறக்குறைய அனைத்து திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களும் இந்த படத்தில் பணியாற்றவுள்ளனர்.

இந்தப் படத்தில் பணியாற்ற பிரபல நடிகர்கள் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது விரைவில் இறுதி செய்யப்படும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. சென்னை மற்றும் கோவையில் மொத்தப் படமும் படமாக்கப்படவுள்ளது.