திரையில் ஒரு பரிசோதனை முயற்சி பர்த்மார்க் !!

 

ஒரு தம்பதிகளுக்குள் ஏற்படும் மனபோராட்டமும் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் பயணம் தான் படம்.

குழந்தை பிறப்பு எளிய முறையில் நவீன அறுவை சிகிச்சை இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக இயற்கை எழில் கொஞ்சம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் தம்பதியினர்.அடுத்தடுத்து சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

முதல் காட்சியே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஒரு ஆணும் பெண்ணும் கண்ணை கட்டிக்கொண்டு பரந்த வெளியில் தட்டு தடுமாறி நடந்து ஒருவர் மற்றவரின் கைகளைப்பற்றிய பிறகு கட்டை அவிழ்த்து சினேகமுடன் சிரிப்பது பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொள்வது என திருமணமாகப்போகும் தம்பதியரின் புரிதலை பற்றி தெளிவாக சொல்வதற்கு இதைவிட சிறப்பான காட்சி இதுவரை எந்த மொழி திரைப்படத்திலும் வந்ததில்லை.

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்ல முயற்சிக்காத கதை கருவை எடுத்துக்கொண்டு கொஞ்சமும் தொய்வில்லாமல் படம் பார்ப்பவர்களை எல்லா உணர்ச்சிகளும் மேலோங்க செய்கிறது படம்.தாய்மை உணர்வையும் அதை பிரசவிக்கும் முறையையும் இயல்பாக எதார்த்தமான காட்சிகள் சிறப்பு. ஒவ்வொரு காட்சியும் செதுக்கி வைத்தார் போல் கவித்தனமாக நம் கண் முன்னே விரிவது அழகு. குழந்தை பிறப்பு எளிதான முறையில் அமைய உடல் ரீதியான சவால்களை எதிர்கொண்டு மனரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் சுகமான வலி.இந்த சமயத்தில் மனைவியுடன் கணவன் இருந்து பிரசவ வேதனையை உணர வேண்டும் கர்ப்ப காலத்தில் பெண்களை அன்போடும் அரவணைப்போடும் பார்த்துக் கொள்ள வேண்டும் கருவில் இருக்கும் மழலையுடன் மனதளவில் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என தாய்மையின் முக்கியத்துவத்தை படம் முழுவதும் பேசு பொருளாக்கியுள்ளார் இயக்குனர்.

ஐந்தே கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு திரில்லர் மூவி கொடுப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.அதை திறம்பட கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

 

டேனியல் என்ற கதாபாத்திரத்தில் ஷபீர் நடித்திருக்கிறார் அவர் மனைவி ஜெனிஃபராக மிர்னா மேனன். பேரன்பும் பெரும் கோபம் கொண்ட கணவன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார் ஷபீர். மிர்னா மேனனின் நடிப்பு
ஒவ்வொரு காட்சியிலும். நம் விழிகளை வியப்பில் ஆழ்த்துகிறது. படம் முழுவதும் நிறைமாத கர்ப்பிணி தோற்றம் உடல் மொழி முக பாவங்கள் என கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் மிர்னா.

இதுபோன்ற படத்தில் சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது படம் பார்க்கும் நமக்கு மலையாள மொழி மாற்று திரைப்படம் பார்க்கிறோமா என்ற உணர்வு ஏற்படுகிறது. குறைந்த பாத்திரப்படைப்பே இருப்பதால் கதையின் சூழல் ஒரே இடத்தில் இருப்பது போன்ற உணர்வையும் காட்சிகள் ரிப்பீட் முறையில் வருவது போன்ற சூழ்நிலையும் தவிர்த்து இருக்கலாம்.

இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை மிகையில்லாமல் கதையோட்டத்தோடு ஒளிப்பதிவு செய்த இனியவன் பாண்டியன் பாராட்டுக்குரியவர் காட்சியின் தன்மைக்கேற்றவாறு மென்மையாக இரைச்சல் இல்லாமல் இசை அமைத்திருக்கும் விஷால் சந்திரசேகர் Hat’s off.

இது போன்ற புதுமையான கதைகள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வித்தியாசமான கதையை கையாண்ட இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் பாராட்டுக்குரியவர். தாய்மையின் மேன்மையை போற்றும் இந்த படம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெறும்.