ஹீரோ – அவசியம் பார்க்க வேண்டியவன்தான்!

உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர் களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித் துறையில் பெரிய சவாலாக உள்ளது. கற்றுத்தரும் முறைகளில் பழங்கால முறை பொருந்தாத ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சி, கணினியின் வளர்ச்சியும் பயன்பாடெல்லாம் கல்விச் சாலைக்குள் நுழைவதே செய்தியாகும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கல்வி கற்றுக் கொடுக்கும் முறைகளில் மாற்றம் வேண்டும் என்று ஏகப்பட்ட பேர்கள் எழுதியும், பேசியும் ஓய்ந்து போன நிலையில் இந்த கல்வி பிரச்னையை வைத்து ஹீரோ என்றொரு சினிமாவே எடுத்து விட்டார்கள். இந்த படத்தை இரும்புத் திரை கொடுத்த மித்ரன் இயக்கி இருந்தாலும், சிவகார்த்திகேயன் நடித்து இருந்தாலும் படம் முடிந்து வெளியே வரும் போது முன்னொரு காலத்தில் ரஃப் நோட்டில் சிலாகித்து எழுதி வைத்த ஜென்டில்மேன் ஃபீலிங்-தான் வந்தது.

கதை என்னவென்றால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தூர்தர்சனில் வந்து ஹிட் அடித்த சக்திமான் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து வளரும் சக்திக்கு (சிவகார்த்திகேயன்), அப்பவே சூப்பர் ஹீரோ ஆக வேண்டுமென்று ஆசை. ஆனாலும் நன்றாகப் படித்து மாவட்ட அளவில் முதல் மாணவராக வந்த நிலையில், தன் அப்பா மெடிக்கல் செலவுக்காக தன் மார்க்‌ஷீட்-டை விற்று சிகிச்சை அளித்ததால் பாதை மாறுகிறார். ஆம்.. மார்க் ஷீட்டால் காப்பாற்றப்பட்ட அப்பாவால் புறக்கணிக்கப்பட்டு பிரிண்டிங் பிரஸ் என்ற பெயரில் படிக்காதவர்களுக்கு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுப்பது, பிரைவேட் மெடிக்கல் & இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்த்து, கமிஷன் பெறுவது, கூடவே வழியில் கண்ட பெண்ணான கல்யாணி பிரியதர்சனை  லவ்வுவது என்ற ட்ராக்கில் போய் கொண்டிருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க பள்ளி படிப்பின் போது பெயிலானதால் ஆசிரியர்களால் ஒதுக்கப் படும் மாணவர்களை சேர்த்து அவர்களுக்குப் பிடித்த, ஆர்வமுள்ள பாடத்தை, ஆசைப்படும் விஞ்ஞானத்தை, தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலம் புதிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்தச் செய்துக் கொண்டிருக்கிறார் மாஸ்டர் அர்ஜுன்.

இந்தச் சூழலில் மாஸ்டர் அர்ஜுனிடம் சிவகார்த்திகேயன்  சேர்ந்து சூப்பர் ஹீரோவாகிறார்.. ஏனிப்படி ஆகிறார்?, அதனால் நடப்பது என்ன ?என்பதுதான் ‘ஹீரோ’ படம்.

நாயகன் சிவகார்த்திகேயன் இன்னும் நிறைய பிளேபாய் ரோல் செய்து தமிழ் சினிமா ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டியவர். ஆனால் அடுத்தடுத்து தப்பான வழியைக் காட்டி தன் சினிமா வாழ்க்கைக்கு குழி பறிக்கிறார்களோ என்று அவருக்கே சந்தேகம் இருக்கிறது போலும். அதனால் தான் இந்த படத்தில் கூட ரொமான்ஸ் பாயாகவோ மட்டுமின்றி சூப்பர் ஹீரோவாக நடிக்க முயலும் போது முழுமையான ஈடுபாட்டுடன்  எதையும் செய்யாமல் பெயில் மார்க் வாங்குகிறார். நாயகி கல்யாணி பிரியதர்சன் அழகாக இருக்கிறார். ஆனால் அவருக்கான கேரக்டரும், காட்சிகளும் கம்மி என்பதால் உதட்டை பிதுக்க வைத்து விடுகிறார். .

இயக்குநர் மித்ரனின் முந்தைய படத்தை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்காற்றிய அர்ஜுன் இதில் ஸ்கோர் செய்கிறார். வில்லன் அபி தியோல் காஸ்ட்லியான அடியாட்களுடன் , ஹைடெக்கான செட்டப்-புடன் வருகிறார்.. போகிறார்.. அம்புட்டுத்தான். ஆனால் இவானா தொடங்கி இன்னொ வேட்டிவ் ஸ்டூடன் ஸாக வரும் அத்தனை பேரின் நடிப்பும் பிரமாதம். ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அபாரம், யுவன் பாடல்களும் பின்னணி இசையும் ஹீரோ-வுக்கு தனி அந்தஸ்தைக் கொடுக்கிறது..

மொத்தத்தில் முன்னாள் ஜென்டில்மேன் அர்ஜூனும், இந்நாள் ஹீரோ சிவகார்த்திகேயனும் சொல்லும் ‘சின்ன வயசுல ஒரு ஸ்டூடண்ட் கிட்ட, ‘நீ என்னவாகப் போற?’ன்னு கேட்டா ‘டாக்டர் ஆகி உயிரை காப்பாத்துவேன், போலீஸாகி ஊரைக் காப்பாத்துவேன், மிலிட்டரில போயி நாட்டை காப்பாத்துவேன்’னு சூப்பர் ஹீரோ மாதிரி பேசுவாங்க. ஆனா, படிச்சு முடிச்சதும் அதெல்லாம் மறந்துருவாங்க. அதுக்குக் காரணம் நம்ம கல்வி முறைதான்…’என்னும் மையக் கருத்தை ஜஸ்ட்  ஒரு ரஃப் நோட்டில் வழங்கி விட்டார் மித்ரன்.  

ஆனாலும் பொதி மூட்டையை சுமந்து செல்லும் பள்ளி மாணவர்களும் அவர்களை பெற்றவர்களும், ஆசிரியர்களும் அவசியம் பார்க்க வேண்டியவன்தான் இந்த ஹீரோ!

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்