இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு தொடரும் எதிர்ப்பால் அதிகரிக்குது ஆடியன்ஸ்!

சிலரால் ‘பிட்டு படம்’ என்ற ரேஞ்சில் விமரிசிக்கப்பட்ட ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட இயக்குநர், தயாரிப்பாளர் மீது காவல் ஆணையரிடம் மாணவர் அமைப்பினர் புகார் அளித்தனர். உங்கள் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைப் பார்ப்பீர்களா? என மாணவர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் இயக்குநர் பாரதிராஜா இப்படம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

‘ஹரஹர மஹா தேவகி’ படத்தை இயக்கிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதிகப்பட்ச ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரங்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியமும், இதிகாசமும், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள் இன்று, சதையை மட்டுமே கொண்டாடுகின்றன. சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய திரைப்படங்கள் இன்று, இரட்டை அர்த்த வசனங்களால், மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாடிய வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாகச் சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை..

தமிழ் மக்களே! ரசனை மாற்றமென்று தரம்கெட்டுப் படைக்கும் படைப்புகளைப் பார்ப்பதைப் புறக்கணியுங்கள். சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம்.. நம் தமிழ்நாட்டு இளைஞர்களைத் திசைதிருப்பி, நம்முடைய ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்சினைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே இது தெரிகிறது.

இவர்களுக்குத் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. காரணம், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு தெரியாதவர்கள் பதவியில் இருந்தால் இப்படித்தான் நடக்கும், ஏன் இதற்கு மேலேயும் நடக்கும்… இதற்கு ஒரு முடிவுகட்ட நாள் குறிக்க வேண்டும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட `சென்சார் போர்டு’ என்ன செய்து கொண்டிருக்கிறது?

சரியான விஷயங்களுக்குக் கூட கத்திரி போட்ட நீங்கள், சமீப காலமாக ஆபாசப் படங்களுக்கு அனுமதி அளிப்பது ஏன்? எவ்வளவோ காலங்களாய் அடங்கிக் கிடந்த தமிழ் இனம், தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டு வீறுகொண்டு நிமிர்ந்து நிற்க முயற்சி செய்யும்போது, எங்களை பலவீனப்படுத்த நீங்கள் செய்யும் சூழ்ச்சியோ என்றுகூட சந்தேகப்படுகிறேன். ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே… நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர்!! பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்.

`திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது எழுதப்பட்ட வாழ்க்கை’ என்பதை உணருங்கள்… மத்திய தணிக்கைக் குழு அதிகாரிகளே! இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள்… இல்லையென்றால், `சென்சாரையே சென்சார்’ செய்ய வேண்டிய நிலை ஏற்படும்” இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படத்தை தயாரித்த, இயக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளது தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு. தங்கள் புகாரில், “’இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்கிற தமிழ்ப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார், ஏற்கெனவே பெண்களை அவதூறாக சித்தரித்து எடுத்தவர் மீண்டும் பெண்களை ஆபாசமாகவும், கேவலமாகவும் சித்தரித்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை எடுத்துள்ளார்.

இவரின் இந்தச் செயலை மிக வன்மையாக கண்டிக்கிறோம், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இப்படி இழிவாக எடுக்கும் செயலை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏனென்றால், இது பெண்களை தெய்வமாக வணங்கும் நாடு. உடனடியாக இந்தப் படத்தை தயாரித்த, இயக்கிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் இந்தப் படத்தை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். தணிக்கைக்குழு ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளது. படத்தை பெருவாரியான சிறுவர்களை நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு தீய வழியில் கொண்டுசெல்வது வருத்தத்தை தருகிறது. கலைத்துறை என்பது மக்களின் புரட்சிக்கான அடுத்த ஆயுதம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு திரைத்துறையில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்தத்துறையை தவறான பாதைக்கு கொண்டுசெல்வதை தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

புகார் அளித்த மாணவர் அமைப்பினர் கூறியதாவது:

‘ஹரஹர மஹாதேவகி’ படம் எடுத்தபோதே அந்த இயக்குநரை எச்சரித்தோம். ஆனால் அவர் தொடர்ந்து இதே பாணியில் படம் எடுத்து வருகிறார். பெண்களை கேவலமாக சித்தரித்து எடுக்கும் இயக்குநர் வீட்டிலும் பெண்கள் தாயாக, மனைவியாக, சகோதரியாக இருக்கிறார்கள்.

நாங்கள் கேட்கிறோம். அவர்களோடு சென்று இந்தப்படத்தை இயக்குநர் பார்ப்பாரா?, சமூகத்தில் ஆயிரம் பிரச்சினை இருக்கும் போது இது ஒரு பிரச்சினையா என்று கேட்கலாம். இதுவும் பிரச்சினைதான். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கும் போது இப்படித்தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா?, படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக இப்படம் ரிலீசாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையைக் கிளப்பி இப்படத்ய்தை ரொம்ப நாள் ஒட வைத்து விடாதீர்கள் என்று அப்பட குழுவினர் கேட்டு கொண்ட நிலையில் தற்போதைய எதிர்ப்புகளால் இந்த படம் போட்ட தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது