நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சாபம் விட்ட இயக்குனர் மிஷ்கின்! மாவீரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் வர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதே தினத்தில் ‘மகாவீருடு’ என்ற பெயரில் படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்,

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது,

“மடோன் எடுத்த படம் அனைத்தும் கடுமையான கதைகள். ஆனால் அதை ஜனரஞ்சகமாக மக்களிடம் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என தெரிந்து கொண்டு பணியாற்றி உள்ளார். படப்பிடிப்பில் ஒரு நாள் கூட அவர் யாரையும் திட்டியது இல்லை. ஆனால், அனைவரையும் வேலை வாங்குவதில் நல்ல திறமையாளர். நான் இயல்பாக நடிப்பதை போல் இந்த படம் இருக்காது, வேறு பாதையில் நடித்து உள்ளேன். இந்த படம் ஒரு பேண்டசி படம். தயாரிப்பாளர் பணம் அளிப்பவர் மட்டுமில்லாமல் ஒரு இயக்குநரின் மனதில் இருக்கும் கதையை எப்படி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என யோசிப்பவரும்தான்” என்று தெரிவித்தார்.

இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது,

“சிவகார்த்திகேயன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஆள். சிவாவைப் பற்றி என்னிடம் சொல்லும் போது, இது சும்மா கதையாக இருக்கும் என நினைத்தேன். அப்படி இல்லை. மிக உண்மை. சிவகார்த்திகேயன் நேர்மையான மற்றும் உண்மையான ஒரு மனிதர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வார். ஒரு இரவு முழுவதும் நடந்த சண்டைக் காட்சி முடிந்த பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் சக உழைப்பாளியிடம் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்த ஒரு விஷயத்திற்காகவே 40 முதல் 50 ஆண்டுகள் அவர் சினிமாவில் இருக்க நான் சாபம் விடுகிறேன். சிவகார்த்திகேயனனின் நட்பு மிக இனிமையானது. நல்ல பையன்.   சினிமாவில் டைரக்ஷன் என்பது மிக கடினமான வேலை. ஒரு இயக்குநரை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் அனைத்து நொடிகளிலும் மடோன் அதை எப்படி சிறப்பாக செய்யலாம் என பார்த்துக் கொண்டிருந்தார். இந்த படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக நடித்துள்ளேன். நிறைய பேர் என்னை நிஜவாழ்க்கையிலேயே வில்லனாகத்தான் பார்க்கிறார்கள். இந்த படத்தில் நிஜமாக வாழ்ந்துள்ளேன்” என்றார்