ஆக்சன் படங்களில் இருந்து தப்பிக்க சார்லி பார்க்கலாம் – சார்லி 777 விமர்சனம்

கன்னட சினிமாவின் திறமை வாய்ந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சார்லி777

 

வாழ்கையின் மேல் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பவனுக்கு ஒரு நாய் துணையாய் வருகிறது. ஒரு நாள் அந்த நாயும் அவனைவிட்டு போக போகிறது என தெரிந்தபின் அவன் என்ன செய்கிறான் என்பதே கதை.

படத்தின் முக்கிய அம்சமே நாயை மனிதன் உணர்வுகளுக்குள் பயணிக்க வைத்தது. படம் ஒரு காதல் கதையை பார்ப்பது போல தான் உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் கதையை எவ்வளவு ஆழமாக சென்று பார்போமோ அப்படி தான் இருக்கிறது இந்த கதை. நாயாக சார்லி நடித்துள்ளது. அது தான் படத்தின் தலைப்பும், அது சரியும் கூட.

பொதுவாக விலங்குகளை வைத்து வரும் படங்களில் மனிதர்களின் கதையில் விலங்கு பயணிக்கும். ஆனால் இந்த படத்தில் சார்லியின் தேவையை நோக்கியே ஹீரோ ஓடுகிறான்.


படம் ஸ்லோவாக போவது போன்ற உணர்வு இருக்கிறது. ஆனால் அது படத்தின் பல காட்சிகளை பொறுமையாக அனுபவிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது.
அவசரப்படாமல் நிதானமாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள் படக்குழு.

ஒரு முழுமையான பீல்குட் படமாக இருக்க ஒளிப்பதிவும், இசையும் மிக முக்கியம். படத்தின் ஒளிப்பதிவு நாம் நிலப்பரப்பை தாண்டி கதையுடன் ஒட்டிபோக உதவுகிறது.

படத்தின் இசைதான் படத்தில் பெரிய பணி ஒன்றை செய்துள்ளது. படத்தின் கதை பயணல்கதை என்பதால் தென்னிந்தியாவில் இருந்து வட இந்தியாவை நோக்கி செல்லும் போது வெவ்வேறு ஊர்களை கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு நிலப்பரப்பை கடக்கும் போது வரும் பாடல்கள் அந்த நிலப்பரப்பை சேர்ந்த பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் பாடல்கள் எந்த இடத்தில் வருகிறதோ அந்த நிலப்பரப்புக்கு உண்டான இசையை கொடுத்திருக்கின்றனர். இது கதையும் ஒன்றி நாமும் பயணிக்க உதவுகிறது.

படத்தின் தொய்வாக தெரிந்தது, நாய் வந்த பிறகு தர்மா என்ற கதாபாத்திரம் முன்பு இருந்தது போல் இல்லாமல் மாறிவிட்டான் என்பது நமக்கு முழுமையாக உள்ளே செல்லவில்லை. படத்திற்குள் இருக்கும் மற்றவர்கள் தான் தர்மா மாறிவிட்டான், மாறிவிட்டான் என கூறுகின்றனர். அது படத்தின் முக்கியமான பகுதி அது இன்னும் ஆழமாய் இருந்திருக்க வேண்டும்.

சார்லியாக நடித்த நாய் மனிதர்கள் வெளிக்காட்டும் உணர்வுகளை காட்டுகிறது. அழுகிறது, கட்டிபிடிக்கிறது, காதலிக்கிறது என மனிதர்கள் நடித்தால் என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்திருக்கிறது. ரக்‌ஷித் செட்டி கதைக்கு எது தேவையோ அதை கொடுத்துள்ளார். அவருடைய நடிப்பு பல இடங்களில் பார்வையாளர்களை திரையில் கனெக்ட் பண்ண வைக்கிறது.

இந்த படம் எல்லோருக்கும் தேவையான ஒன்று. பல நாட்களாக நாம் பார்த்து வந்த ஆக்‌ஷன் படங்களில் இருந்து வெளியேறி ஒரு மூச்சு விடுவதை போல் இந்த படத்தை பார்க்கலாம்.