ரைட்டர் இமேஜினேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மகா விஷ்ணு இயக்கத்தில் கயல் சந்திரன் நடிக்கும் படம் ‘நான் செய்த குறும்பு ‘. இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் போடப் பட்டது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. அந்த விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி , சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப் பட்டனர் . இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண் மணிகள் காலில் விழுந்து வணங்கினார்கள் . அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விழாவில் ‘நான் செய்த குறும்பு ‘.இயக்குநர் மகாவிஷ்ணு பேசும் போது “நான் ஸ்டாண்ட் அப் காமடி , அசத்தப்போவது யாரு என்று டிவி மீடியாவில் சன் டிவியில் 9 ஆண்டுகள் இருந்தேன். சினிமா வந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் சினிமாவில் 1500 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நான் அவர்களில் 900 பேரிடமாவது பேசியிருப்பேன். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் பலரும் படம் எடுக்க வருவதில்லை . காரணம் தப்பான கதை , தப்பான படக் குழு , தப்பான மேனேஜர் என்று அமைந்ததால் தான். ஒரு நல்ல மேனேஜர் கொண்ட படக் குழு அமைந்து விட்டால் சினிமாவில் இழப்புக்கு இடமே இல்லை .எனக்கு அப்படி அமைந்துள்ளது. .. ‘நான் செய்த குறும்பு ‘. ஒரு ரொமாண்டிக் காமெடி சஸ்பென்ஸ் த்ரில்லர் குடும்பப் படம் என்று கூறலாம். இது பட்ஜெட் படம் தான், ஆனால் அதில் நம்ப முடியாத அளவுக்கு ரிச் குவாலிட்டி இருக்கும். தரம் இருக்கும். . ” என்றார்.
நாயகன் கயல் சந்திரன் பேசும் போது , ” இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்து ட்விட்டரில் பலவிதமான கருத்துகள் வந்தன. சிலர் ஒரு மாதிரியான படமாக இருக்குமோ என்று கூறியிருந்தார்கள். நான் சொல்கிறேன் இது சுரேஷ் கிருஷ்ணா வின் . ‘ ஆஹா . ‘ படம் மாதிரி குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும். பெண்கள் படும் கஷ்டம் ஆண்களும் பட்டால் தான் தெரியும் என்று சொல்கிற படம். படக் குழுவினர் நட்புடன் பழகிய விதம் எனக்குப் பிடித்தது, ” என்றார்.
விழாவில் படத்தின் நாயகி அஞ்சு குரியன் , நடிகர் மிர்ச்சி விஜய் ,இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி , ஒளிப்பதிவாளர் ரமணன் புருஷோத்தமா, கலை இயக்குநர் ஏ.ஆர். மோகன், எடிட்டர் மணிக்குமரன் சங்கரா ,நிர்வாகத் தயாரிப்பாளர் சுரேஷ் ராஜா , இணைத் தயாரிப்பாளர் எஸ்.பி. சுரேஷ் , தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் , தயாரிப்பாளர்கள் டெல்லி பாபு , பானு பிக்சர்ஸ் ராஜா , விநியோகஸ்தர் ஜேகே தொழிலதிபர்கள் ஆனந்த் ,விஜய் டோஹோ , ரகுநாதன், ரோஹன் பாபு , ,திருமதி ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
வந்திருந்த நலம் விரும்பிகள் படக் குழுவினரை வாழ்த்தினர். வருகை தந்தவர்களுக்கு ஜெயகிருஷ்ணன் எழுதிய ‘ பாரம்பரிய அறிவியல் ‘ ‘ சுகப்பிரசவம் ‘ ஆகிய நூல்கள் வழங்கப்பட்டன. விழாவை ‘ வீ.ஜே ‘ ஷா தொகுத்து வழங்கினார்.