இயக்கம் – ஆனந்த்சங்கர்
நடிகர்கள் – விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன் தாஸ்
கதை : சிறு வயதில் போலீஸுக்கு பயிற்றுவிக்கப்படும் இரு சிறுவர்கள் வளர்ந்த பிறகு, எதிரெதிராக மோதுகிறார்கள். சிங்கப்பூரில் , மளிகை கடை வைத்திருக்கும் விஷால் அங்கு நடக்கும் ஒரு விபத்துக்கு காரணம் யார் என தேடுகிறார். சிறு வயதில் தன்னுடன் பயிற்சி எடுத்த நண்பன் என்பது தெரிய வருகிறது. பின் இருவருக்கும் நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை.
படத்தின் முதல் பத்து நிமிடம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது. இரண்டு அறிவுஜீவிகள் அவர்களுக்குள் நடக்கும் ஆடு புலி ஆட்டம் அதில் யார் ஜெயிப்பார்கள் எனும் ஒன்லைன் எல்லாம் அட்டகாசமாக தான் இருக்கிறது. ஆனால் திரைக்கதையும் அதை படமாக்கிய விதமும் கொடூரமாகவிட்டது.
விஷால் சிங்கப்பூரில் அறிமுகமாகும் காட்சிகள் அதன் பின்னணியான தமிழ் குடியிருப்பு, என எதுவுமே ஒட்டவில்லை சுவாரஸ்யமாகவும் இல்லை. படத்தின். ஆரம்ப காட்சிகளும், விபத்துக்கு பின் வரும் ஆர்யாவின் அறிமுகத்தில் ஆரம்பித்து இடைவேளை வரையிலான காட்சிகள் மட்டும் பரபரவென போகிறது.
இடைவேளை முடிந்து வெகு ஆர்வத்துடன் வந்தால் பட்டாசுக்கு பதில் புஸ்வானம் வெடிக்கிறார்கள். சொல்லும் கதைக்கும், காட்சிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, எந்தக் காட்சியிலும் லாஜிக் சுத்தமாக இல்லை. விஷால் மிருணாளினி காதல் காட்சிகள் அய்யோ போர். மிருணாளினி தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் அளவு வந்து போகிறார். விஷால் பிரமாண்ட உருவத்தில், ஆக்சனில் மிரட்டியிருக்கிறார். அத்தனை அறிவாளியான அவர், இப்போ போன் வரும் என சொன்னவுடன் வருகிறது என்ன லாஜிக் இது. படத்தின் சுவாரஸ்யமான விசாரணையும், துரத்தல்களும் இடைவேளைக்கு முன்பே முடிந்து விடுகிறது.
படத்தின் ப்ளஸ் ஆர்யா தான் அசால்ட்டான பார்வையில் அழகான வில்லனாக கலக்கியிருகிறார். இப்படி இரண்டு ஹீரோக்களை வைத்துக்கொண்டு, பெரிதாக எதையாவது விசாரிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், சிறு பிள்ளை விளையாட்டு விளையாடுகிறார்கள். ஆர்யாவிடம் உண்மையை சொன்னால் முடிந்து விட கூடிய பிரச்சனையை வைத்து, முக்கால் மணி நேர க்ளைமாக்ஸை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது படம் முடியும் என்று ஆகிவிடுகிறது. அவர் அப்பா கொலைக்கு பழிவாங்கும் விஷால் செய்வது மட்டும் எப்படி நியாயம் ஆகும். மொத்த படத்தின் நியாயமும் அங்கே பல்லிளித்து விடுகிறது.
படத்தின் மற்றொரு பலம் ஒளிப்பதிவு சிங்கப்பூரை மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள். இசையில் பாடல்கள் எதுவும் தேறவில்லை, பின்னணி இசையில சாம் சிஎஸ் கலக்கியிருக்கிறார் ஆனால் படத்தின் பிற்பாதியில் திரையரங்கு ஒரே தீமில் கதறிக்கொண்டிருக்கிறது. ஒரு நல்ல கதைக்கரு, நல்ல சினிமா ஆகியிருக்க வேண்டிய சினிமா.
எனிமி– பெரும் ஏமாற்றம்