காசேதான் கடவுள் படத்தை ரீ மேக் செய்யப் போறாய்ங்களா? மூத்த தயாரிப்பாளர் அப்செட்!

‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் ரீமேக் ஆகிறது என்றொரு செய்தி பரவுதே ..பார்த்தீர்களா?.. சில ஆண்டுகளுக்கு முன்னால் காசேதான் கடவுளடா 2, என்பது வெளியாகப் போகுது என்றும். இதனை பி.டி.செல்வகுமார் இயக்குகிறார் என்பதுடன் அதில் சிவகார்த்திகேயன், வடிவேல், சந்தானம், ஹன்ஷிகா, விஜய் சேதுபதி ஆகியோரெல்லாம் நடிக்க போறத ஒரு நியூஸ் வந்து பலராலும் மறந்தும் போயாச்சு. இப்ப புதுசா அதை ரீ மேக் செய்யப் போறதா ஒரு கிளம்பி இருக்காய்ங்க

70 -களின் தொடக்கத்தில் யூனிடி கிளப் ‘காசேதான் கடவுளடா’ என்ற நாடகத்தை சித்ராலாயா கோபுவின் கதை, வசனம், இயக்கத்தில் அரங்கேற்றி பெரும் வெற்றி கண்டது. திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் போதே நடிகர்கள் முத்துராமன், மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் யூனிடி கிளப்பின் நாடகங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நாடகத்தின் வெற்றிக்கு இவர்களின் பங்களிப்பு பெரிது. பின்னர் ஏவி.எம் நிறுவனம் இதனைத் திரைப்படமாகத் தயாரித்தபோது மேலே கூறப்பட்டுள்ள நடிகர்களுடன் தேங்காய் சீனிவாசன், லக்ஷ்மி ஆகியோரையும் இணைந்து நடிக்க வைத்து பெரும் வெற்றி கண்டது. ’சித்ராலயா’ கோபுவை திரைப்பட இயக்குநராக்கியதும் இப்படமே.

இந்த படம் குறித்து கோபுவிடம் நம் கட்டிங் கண்ணையா பேச்ச்சுக் கொடுத்த போது, “ இதை நாடகமாக போட்ட போதே, நல்ல வரவேற்பு. நாடகத்தை, 20 நாட்களுக்கு சபாவில், ‘புக்’ செஞ்சாங்க. நாடகத்தை பார்த்த, ஏவி.எம்., நிறுவனத்தார், ‘நாங்கள், இந்த நாடகத்தை படமாக்குகிறோம். ஒரு நிபந்தனை, இந்த படத்தை, நீங்கள் தான் இயக்க வேண்டும்…’ அப்ப்டீனாங்க. ஆனால், எனக்கு டைரக்‌ஷனில் அப்போ ஆர்வம் கிடையாது.’என் எழுத்தை சிதைக்காமல், சி.வி.ராஜேந்திரன், படமாக்குவார். அவரையே இயக்குனராக போட்டு விடுங்களேன்…’ என்றேன். இருப்பினும், ‘நீங்கள் தான் இயக்க வேண்டும்…’ என்று சொல்லி விட்டார், ஏவி.எம்., செட்டியார். படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.

‘ஜம்புலிங்கமே ஜடாதரா…’ என்ற பாட்டு, பயங்கர, ‘ஹிட்!’ முத்துராமன் – லட்சுமி பாடும், ‘மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது…’ என்ற பாடலுக்காக போடப்பட்ட, ‘மெகா சைஸ்’ டெலிபோன், ஆபிஸ் மேஜை, ஸ்பீக்கர் போன்ற அரங்க அமைப்பு, பலரால் பாராட்டு பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற, ‘இன்று வந்த இந்த மயக்கம்…’ என்ற பாடல், பாடகி சுசீலாவிற்கு, தேசிய விருதை பெற்றுத் தந்தது.

ஆங்கில படம் மட்டுமே ஓடும், பைலட் தியேட்டரில், இந்த படத்தை துணிந்து, வெளியீடு செய்தார், ஏவி.எம்.செட்டியார். படத்தில், போலி சாமியாராக வரும், தேங்காய் சீனிவாசனின் வசனத்தை கேட்டு, தியேட்டரில் பயங்கர கரகோஷம்.
இதை மக்களோடு மக்களாக உட்கார்ந்து ரசித்த, ஏவி.எம்., நிறுவனத்தார், தியேட்டர் வாசலில், அன்று இரவே, தேங்காய் சீனிவாசனுக்கு, 16 அடிக்கு, ‘கட் – அவுட்’ வைத்து விட்டனர். மறுநாள் காலையில், இதை கண்ணுற்ற, தேங்காய் சீனிவாசன், வேட்டி, சட்டை, பழத்துடன் என்னைப் பார்க்க வந்து விட்டார். ‘தெய்வமே… என்னை ஆசீர்வதியுங்கள். எல்லா புகழும் உங்கள் வசனம் பேசியதால் தான்…’ என்று கூறி, ஆசீர்வாதம் பெற்றுச் சென்றார்.

அவர் போன கொஞ்ச நேரத்தில், முத்துராமன் வந்தார். சற்றே சோகமாக, ‘என்ன சார்… நான் தான் படத்தோட, கதாநாயகன். ஆனால், தேங்காய் சீனிவாசனுக்கு, ‘கட் – அவுட்’ வைத்திருக்காங்க…’ என்றார். ‘அதெல்லாம் தயாரிப்பாளர் விருப்பம்…’ என்று சொல்லி, அவரை சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தேன்.இந்த படத்தின் மூலம் நட்பு வளையத்திற்குள் வந்த இன்னொரு நடிகர், எம்.ஆர்.ஆர்.வாசு. ‘நான் ரசித்து எழுதிய நாடகம், காசேதான் கடவுளடா” அப்ப்டீன்னு சொல்லி இருந்தார்

பின்னாளில் மீண்டும் இதே ஸ்கிர்ப்டை நாடக மேடைக்கு அழைத்து வந்தார் ஒய்.ஜி. மகேந்திரன். கோபுவின் மகன் ராம் இதில் இணை வசனகர்த்தா. காலத்துக் கேற்ற மாற்றங்களைச் செவ்வனே செய்துள்ளார். காசினை சேமிக்க வேண்டி யதுதான், ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால் விஷமாகிவிடும் என்பதையும், காசு செலவழிப்பதில் வீட்டின் தலைவர் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு வரம்புக்கு மீறிய கட்டுப்பாடு விதித்தால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் நகைச்சுவையோடு கூடிய ஒரு பாடமாக அமைந்துள்ளது இந்நாடகம்.

இப்படி பெருமை வாய்ந்த படத்தை இயக்குநர். கண்ணன் என்பவர் ரீமேக் செய்ய வுள்ளாராம். அதுவும் தமிழின் க்ளாசிக் திரைப்படமான , ‘காசேதான் கடவுளடா’ படத்தில் தமிழின் புகழ்மிக்க மூத்த நடிகர்களான, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஆச்சி மனோரமா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். தற்போது மீண்டும் உருவாகும், இப்படத்தின் ரீமேக் வடிவத்தில், முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்கவுள்ளார்களாம். நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15 அன்று துவங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனராம்.

இதை எல்லாம் கேள்விப்பட்டு நம்மிடம் பேசிய சீனியர் தயாரிப்பாளர், ‘ ஹூம்.. இந்த கொரோனா மனசையும் ஊனமாக்கி விடும் போல.. சில படங்கள் மாஸ்டர் பீஸ் என்று முத்திரைக் குத்தப்படும்.. அப்படி குத்து வாங்கிய படத்தை குதறி எடுக்கப் போறாய்ங்க.. இப்படி பண்ணினா தமிழ் சினிமா எப்படி வளரும்.. அட போப்பா.. அது சரி.. யாரு இந்த டைரக்டர் கண்ணன் என்பவர்? ‘ என்றும் அக்கறையாக விசாரிச்சார் என்பதுதான் ஹைலைட்!