வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழா வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர்.
ஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதில் ஆர்ஜே பாலாஜிக்காக நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு விலகி போன பிறகு, 9 ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடித்திருக்கிறேன், அந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததில் மகிழ்ச்சி என்றார் ஜேகே ரித்தீஷ்.
பாலாஜி ஏதாவது புதுமையாக செய்வார் என்ற நம்பிக்கையால் தான் படத்தை ஒப்புக் கொண்டேன். இந்த மாதிரி துணிச்சலாக படம் எடுக்கும் ஐசரி கணேஷ் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்கு தேவை. பாலாஜி கதையை எழுதியிருந்தாலும் இயக்குனர் அதை மிகச்சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவர் பெயர் பிரபு என்பதால் அவர் மீது எனக்கு கூடுதல் அன்பு உண்டு. முன்பெல்லாம் சென்னையை காட்டும் போது எல்ஐசியை காட்டுவார்கள். ஆனால் சென்னையை பாம்பே மாதிரி மிக பிரமாண்டமாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விது என்றார் நடிகர் ராம்குமார்.
இந்த காலத்தில் ஒரு படம் ரிலீஸ் ஆவதே கஷ்டம். ஆனால் மாதிரி எல்கேஜி ரிலீஸ் ஆகி வெற்றி விழா காண்பது என்பது அரிதான விஷயம். என்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்வில் ராம்குமார் அண்ணனுடன் முதல் முறையாக பக்கத்தில் உட்கார்கிறேன், நிறைய பேசுகிறேன். இது எனக்கு பெருமையான விஷயம். தலைக்கணம் இல்லாத ஒரு நடிகை பிரியா ஆனந்த். இந்த சமுதாயத்தில் நடக்கும் விஷயங்களை பார்த்தால் நாளுக்கு நாள் எனக்கு பிரஷர் ஏறிக் கொண்டே போகிறது. இந்த காலத்து சோ ராமசாமி படம் தான் இந்த எல்கேஜி என்றார் நடிகர் மயில்சாமி.
நான் சினிமாவுக்கு வந்து 22 ஆண்டுகள், 3000 பாடல்கள் கடந்திருக்கின்றன. அதில் காலத்துக்கும் அழியாது நிற்கும் பாடல்கள் மிகவும் குறைவு. வாலி சார் எழுத வேண்டிய ஒரு பாடலை என்னை நம்பி எனக்கு கொடுத்தார் பாலாஜி. நான் எழுதிய தமிழ் அந்தம் மிகச்சிறப்பாக மக்களை சென்று சேர்ந்திருக்கிறது, அதைப் போலவே படமும் மக்களை சென்று சேர்ந்துள்ளது என்றார் பாடலாசிரியர் பா விஜய்.
இப்படி ஒரு இடத்துக்கு வருவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. என் நிலைமையை தெரிந்து கொண்டு பாலாஜி என்னை தேடி வந்தது போல இருந்தது. 9 நாள் படப்பிடிப்பு புது அனுபவமாக இருந்தது. ரோகிணி திரையரங்கில் nமுடிந்து வெளியே வந்தபோது, என்னை சூழ்ந்த இளைஞர்களை கண்டபோது புதிதாக பிறந்தது போல உணர்ந்தேன். என் 32 ஆண்டு பொது வாழ்வில் எனக்கு கிடைத்த மிகச்சிறப்பான வரவேற்பு எல்கேஜி ரிலீஸுக்கு பிறகு நான் சொந்த ஊருக்கு சென்றபோது தான். பாலாஜி எனக்கு இன்னொரு பிள்ளை என்றார் நடிகர் நாஞ்சில் சம்பத்.
கடந்த சில ஆண்டுகளாக நான் தமிழ் படங்களில் நடிக்கவில்லையே என்ற குறை எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த ஐசரி கணேஷ், பாலாஜி ஆகியோருக்கு நன்றி. மயில்சாமி சார் சமைத்த உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறோம். பாலாஜி நீங்கள் இந்த படத்தின் ரியல் ஹீரோ என்றார் நடிகை பிரியா ஆனந்த்.
பாலாஜி எழுதிக் கொடுத்த கதையை நாங்கள் ஒரு குழுவாக இணைந்து திரையில் கொண்டு வந்திருக்கிறோம். துக்ளக் மாதிரி படம் இருக்கும் என படத்தை ரிலீஸ் செய்த சக்திவேலன் சொல்லியிருந்தார். இன்று மக்கள் துக்ளக் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை படத்துக்கு தந்திருக்கிறார்கள் என்றார் இயக்குனர் கேஆர் பிரபு.
ஒரு நல்ல படம், நாம் தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்யும் படம் மக்களால் கொண்டாடப்படுகிறது என்பது நமக்கு ஒரு ராஜபோதை. அதை நான் இன்று அனுபவித்து வருகிறேன். இதை சின்ன படம் என்று சொல்ல மாட்டேன். ஒரு பெரிய ஹீரோ படத்தை வாங்கி லாபம் சம்பாதிப்பதை விட, இந்த மாதிரி படங்கள் தான் நல்ல லாபத்தை தருகின்றன. படத்தை நியாயமான விலைக்கு தந்தார் ஐசரி கணேஷ் சார், ஒரு ஏரியாவை கூட விற்க மாட்டேன், ஒரு பெரிய ஓவர்ஃப்ளோ உங்களுக்கு தருவேன் என்று சொன்னேன். நான் வாங்கிய விலையை இரண்டே நாட்களில் திரும்ப பெற்றேன். வியாபாரத்தை தாண்டி இது எனக்கு மிக நெருக்கமான ஒரு படம் என்றார் விநியோகஸ்தர் சக்திவேலன். அதே மேடையில் ஒட்டுமொத்த குழுவுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் முதல் படம் எல்கேஜி பெரிய வெற்றியை பெறும் என நாங்கள் ரிலீஸுக்கு முன்பே எதிர்பார்த்தோம். இயக்குனர் விஜய் மூலமாக பாலாஜியை எனக்கு சில வருடங்களாகவே தெரியும். அவர் என்னை அணுகி கதை சொன்னபோதே நீங்களே நடிங்க என சொன்னேன். பல படங்கள் ஒரே நேரத்தில் தயாரிப்பில் இருந்தாலும், ஷூட்டிங் எங்கு நடக்கிறது என்பது கூட எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் பாலாஜி மட்டும் தினமும் ஃபோன் செய்து பேசுவார். காமெடியனாக இருந்து ஹீரோவான நடிகர்கள் எல்லாம் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, பாலாஜி நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். இருக்கும் விநியோகஸ்தர்களிலேயே மிகவும் நேர்மையானவர் என சக்திவேலனை சொன்னார்கள். அவர் கேட்ட விலை குறைவாக இருந்தாலும் அவருக்காக இந்த படத்தை கொடுத்தேன். ஜெயம்ரவி படம், ஜீவா படம், தேவி 2 (ஏப்ரல் 5), பப்பி உள்ளிட்ட 5 படங்களை தயாரித்து வருகிறேன். இவை அடுத்தடுத்து இதே பேனரில் வெளியாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிக முக்கியமான படம். என் தந்தை பெயரில் தயாரித்த முதல் படமே பெரிய வெற்றியை பெற்றிருப்பது மகிழ்ச்சி என்றார் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ்.
என் மேல் நான் வைத்த நம்பிக்கையை என்னுடன் இருந்தவர்கள் கூட வைக்கவில்லை, ஐசரி கணேஷ் சார் நம்பிக்கை வைத்தார். இதுவரை பட்ஜெட் விஷயத்தில், செலவு செய்த விஷயத்தில் அவர் தலையிட்டதே இல்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். சிவாஜி சார் குடும்பத்தில் இருந்து இந்த படத்தை பார்த்து விட்டு, சிவாஜி ஃபிலிம்ஸிக்கு படம் பண்ண சொன்னார் ராம்குமார் சார். அவர் கேட்டது என் பாக்கியம். நாஞ்சில் சம்பத் சார் மீது இருந்த கறை இந்த படத்தின் மூலம் துடைத்தெறியப்பட்டது எனக்கு மகிழ்ச்சி. அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து வருகிறார். 45 நாட்கள் திட்டமிட்ட படத்தை 37 நாட்களில் முடித்தோம். முதல் பட ஹீரோவுக்கு 310 ஸ்கிரீன்ஸ் கிடைத்திருப்பதும், அதில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதும் மகிழ்ச்சி. அதை சாத்தியப்படுத்திய சக்திவேலன் சாருக்கும் நன்றி. படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனாலும் ஐசரி கணேஷ் சார் விரும்பினால் அடுத்த படத்தை அவருக்கே செய்ய விரும்புகிறேன். இந்த படத்தின் வெற்றியின் மூலம் வரும் பணத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த இருக்கிறோம் என்றார் நடிகர் ஆர்ஜே பாலாஜி.
இந்த சந்திப்பில் கலை இயக்குனர் பாலா, திங்க் மியூசிக் சந்தோஷ், இயக்குனர் கே.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.