‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த ‘டூ லெட்’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன.இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார்.
தமிழில் ‘டூ லெட்’, ‘திரௌபதி’ என ஒரு பக்கம் வெற்றிகளை தட்டிக் கொண்டே… இன்னொரு பக்கம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷீலா ராஜ்குமார். சமீபத்தில் சிறந்த படத்திற்கான கேரள அரசு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சந்தோசத்தில் இருந்தவரிடம் நாம் பேசியபோது, தனது மனதில் இருந்தவற்றை தெளிந்த நீரோடையாக நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஷீலா ராஜ்குமார்.
“மலையாளத்தில் கடந்த வருடம் நான் நடித்திருந்த “கும்பளங்கி நைட்ஸ்” என்கிற படம் மிகச் சிறந்த படமாக கேரள அரசின் விருது பெற்றுள்ளது. ஒரு நல்ல படத்தில் நடித்த மகிழ்ச்சியை மீண்டும் உணர்கிறேன். ‘டூ லெட்’ படம்தான் ஒரு நடிகையாக எனக்கு ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தது. அந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டபோது, அதைப் பார்த்த மோகன்லாலின் மேனேஜர் மூலமாக எனக்கு இந்த ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
எனக்கு முன்பாகவே மலையாளத்தில் பிரபலமான சில நடிகைகளை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஆடிஷன் செய்துள்ளனர். ஆனாலும், திருப்தியாக அமையாத சமயத்தில்தான் என்னைத்தேடி அந்த கதாபாத்திரம் வந்தது.. ஆடிஷனில் கலந்து கொண்டபோது, முதல் நாளே நான் தேர்வாகி விட்டேன்..
நான் அந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு இரண்டு காட்சிகளில் மட்டுமே வசனம் கொடுத்திருந்தார்கள்.. மற்றபடி பல காட்சிகளில் முகபாவங்களிலேயே எனது நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் நடித்த சக நடிகர்களும் அற்புதமாக நடித்து இருந்தார்கள்.புதிய முயற்சி என்கிறபோது அதில் நாமும் ஒரு பாகமாக இருந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றுதான் அந்தப் படத்தில் நடித்தேன்.
அந்தப் படத்துக்குப் பிறகு பெண்களை மையப்படுத்திய கதைகளாக எனக்குத் தேடி வர ஆரம்பித்தன. தற்போது கிட்டத்தட்ட ஆறு படங்களில் நடித்து வருகிறேன். அதில் இரண்டு படங்கள் லாக் டவுன் சமயத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது.. இன்னும் நான்கு படங்களின் படப்பிடிப்புகள் இப்போதுதான் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ள ‘மண்டேலா’ என்கிற படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
இதுவரை அவர் கதையின் நாயகனாக நடித்த படங்களிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஜானர். இவருக்குள் இப்படி எல்லாம் ஒரு நடிப்புத் திறமை இருக்கிறதா என்பது இந்த படம் வெளியாகும்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும். சமீபத்தில் யோகிபாபு பேசும்போதுகூட, ‘நான் என்னைக்குமே காமெடியன்தான்’ என்று கூறியிருந்தார்.. ஆனால், என்னைப் பொருத்தவரை ‘காமெடி நடிகர்கள் எல்லோருமே ஹீரோக்கள்’ என்றுதான் சொல்வேன். அவர் சிரிக்க வைக்கவும் செய்வார். அழ வைக்கவும் செய்வார்.. ஒரு காமெடியனாக இருந்து, இந்த அளவிற்கு அவர் வந்து இருக்கிறார் என்றால் அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம்.
அதேசமயம் படத்தில் யோகிபாபுவின் காமெடி பிரதானமாக இருந்தாலும், எனது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் பதியும்விதமாக தனித்துவமாக உருவாகியிருக்கிறது.இதுமட்டுமல்ல, க்ரைம் த்ரில்லராக கதாநாயகியை மையப்படுத்தி உருவாகிவரும் ‘வாஞ்சை’ படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். ‘இந்தியன்-2’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றிவரும் சாய், தற்போது தயாரிக்கும் ஹாரர் படத்தில் நடிக்கிறேன். இது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. ஏற்கனவே பாதி படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.
என்னைப் பொருத்தவரை கதையின் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்ற பிடிவாதம் எல்லாம் என்னிடம் இல்லை.. அதேபோல ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.. எனக்கு நன்றாக நடனம் ஆடவும் தெரியும்.. கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறது…” என்றார் ஷீலா ராஜ்குமார்.