சிம்பு நடிச்ச ஈஸ்வரன் படம் ரெடி -அடுத்த படமான ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்கும் தயாராம்!

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில் ஒரு நல்ல பெயர் உண்டு. “ஏக் தம்மில் ஒரு படத்தை முடித்துவிடுவார்…” என்பார்கள் தமிழ்த் திரையுலகத்தினர். இந்த நிலையில், சிம்புவை வைத்து சுசீந்திரன் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானபோதே.. சிம்புவை வைத்தா…? ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விடுவாரா..? படம் முடிஞ்சிருமா..? சிம்பு வந்திருவாரா..? என்றெல்லாம் கேலிகளும், கிண்டல்களும் கோடம்பாக்கத்தில் பறந்து வந்தன. ஆனால், இது பற்றி எதையும் கண்டு கொள்ளாமல் சிம்புவைத் திண்டுக்கல்லுக்குத் தூக்கிக் கொண்டு போன சுசீந்திரன் சொன்னது போலவே… எண்ணி முப்பதே நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்து விட்டு சென்னைக்கு வந்து விட்டார். வந்த கையோடு அடுத்த நாளே சிம்புவை டப்பிங்கும் பேச வைத்து விட்டாராம்.

இப்படி சிம்பு, சுசீந்திரனிடம் சமர்த்துப் பிள்ளையாக மாறியதன் மர்மம் என்ன என்பது தெரியாமல் முழிக்கிறார்கள் கோடம்பாக்கத்து கிசு கிசு மன்னர்கள்.

இதற்கிடையில் நாளை நவம்பர் 9-ம் தேதி துவங்குவதாக இருந்த ‘மாநாடு’ ஷூட்டிங் ஒரு நாள் தள்ளிப் போய் 10-ம் தேதி துவங்குகிறதாம். இது கூட சுசீந்திரன் படத்திற்காக சிம்பு, டப்பிங் பேசி முடிக்கத்தானாம்.

பாண்டிச்சேரியில் வரும் 10-ம் தேதி துவங்கும் ‘மாநாடு’ ஷூட்டிங் தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் முதல் 15 நாட்கள் சிம்பு தொடர்ச்சியாக நடிப்பாராம். அடுத்து ஒரு 15 நாட்கள் இடைவெளிவிட்டு சிம்புவுக்கு விடுமுறை தரப்பட்டுள்ளதாம்.

இந்த விடுமுறைக்குக்கூட இன்னொரு காரணம் சொல்கிறார்கள். ’மாநாடு’ படத்தின் இயக்குநரான வெங்கட் பிரபு, நடிகர் அசோக் செல்வனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறாராம்.

அந்தப் படத்தின் பாதி நாட்கள் ஷூட்டிங் இப்போதே முடிந்துவிட்டதாம். இன்னும் ஒரு 15 நாட்கள் கிடைத்தால் இந்தப் படம் முடிந்துவிடுமாம். இதனால் ‘மாநாடு’ படத்தின் இடையில் கிடைக்கும் அந்த 15 நாள் இடைவெளியில் அசோக் செல்வனின் படத்தை இயக்கி முடிப்பார் வெங்கட் பிரபு என்கிறது ‘மாநாடு’ வட்டாரம்.