ஜீனியஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்! – பிரியா லால்!

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஜீவா என்று வெற்றிப் படங்களை கொடுத்த சுசீந்தரன் அடுத்து புதுமுகங்களான ரோ‌ஷன், பிரியா லால் நடிப்பில் இயக்கி இருக்கும் படம் ஜீனியஸ். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீஸாகிறது. இப்பட்டம் குறித்து இயக்குநர் சுசீந்தரன், “ஒவ்வொருவரும் வாழ்க்கை முழுக்க இலக்குகளை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கூறி இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்த நிலையில் படத்தின் நாயகி பிரியா லால் இந்த ஜீனியஸ் அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

”மலையாளத்தில் எனக்கு முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருந்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக எடுக்கப்பட்ட படம். அதன் பிறகு ரொமாண்டிக், காமெடி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் ஜீனியஸ் தான் முதல் படம். இயக்குநர் சுசீந்திரனின் படத்தை முன்பே பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் வித்தியாசமானது. ‘ஜீனியஸ்’ படத்தின் கதை எனக்குத் தெரியாது. அது பற்றி ஒரு வரி தான் சுசீந்திரன் கூறினார். அப்போதே இந்த படத்தில் நடிக்க முடிவு செய்து விட்டேன்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, ஜீவா, பாண்டியநாடு போன்ற படங்களைப் பார்த்து இருக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஜாஸ்மின். ஒரு நர்ஸ் ஆக நடிக்கிறேன். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மாணவி போல சுசீந்திரன் என்ன சொல்கிறாரோ அதை நடித்துவிட்டு வருவேன். இப்படத்தில் நான் நடித்த முதல் காட்சி க்ளைமாக்ஸ் தான். நீளமான காட்சி என்பதால் எனக்கு அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிக்க கொஞ்சம் நேரம் எடுத்தது. அதுமட்டுமில்லாமல் ஒரு சிறிய பாவனை கூட அந்த கதா பாத்திரத்தைக் கெடுத்துவிட கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். அதேபோல் சுசீந்திரனும் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் வாங்கிக் கொள்வார். இப்படிதான் நடிக்க வேண்டும் என்று நடித்தும் காட்டுவார். அவர் சொல்வதை நான் அப்படியே பின்பற்றுவேன்.

மேலும், பல பேருக்கு இந்த படம் ஒரு நெருக்கத்தைக் கொடுக்கும். பள்ளி பருவத்தில் எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற நெருக்கடியும், நிர்பந்தமும் இருக்கும். முக்கியமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஜீனியஸாக ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு இப்படம் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதேபோல் எனக்கும் அதிக நெருக்கம் இருந்தது.

நீண்ட நாட்களாக ஒரு கனவு, தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று. பாட்டு, நடனம், நடிப்பு போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. ஆனால் என் குடும்பம் சினிமா பின்னணியில் இல்லாததால் அம்மாவிடம் சொல்ல தயங்கினேன். ஆனால் என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த படத்தில் இரண்டு ஜீனியஸ் இருக்கிறார்கள். ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா, இன்னொருவர் சுசீந்திரன். இந்த இரண்டு ஜீனியஸ் இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்.

யுவனின் மிகப் பெரிய விசிறி நான். எனக்கு மிகவும் பிடித்தது பாடல் ‘சிலுசிலு’ பாடல் தான். முக்கியத்துவம் கொடுக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். PK படம் மாதிரி உளவியல் ரீதியான முக்கியத்துவம் இப்படத்திலும் இருக்கும். ‘வெண்ணிலா கபடி குழு’வும், ‘நான் மகான் அல்ல’ படமும் எனக்கு மிகவும் பிடித்த படம். ரோஷனும் நானும் புது வரவு. இருப்பினும் அவர் எப்போதும் நேர்மறையான எண்ணம் கொண்டவர். அவரைச் சுற்றி நேர்மறையான அதிர்வு இருந்துகொண்டே இருக்கும். அவருக்கும் நடிப்பு என்பது மிகவும் பிடித்தமான விஷயம்” என்றார் பிரியா லால்.