பிக் பீ’ & ‘ஷாஹேந்ஷா’ என்ற செல்லப் பெயர்களாலும் அழைக்கப்படும் அமிதாப்!

சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் ’பிக் பி’ எனவும், போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் .  இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் பிடித்து இருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் .

உத்தரப்பிரதேசத்தில் அலகாபாத்தில் ஓர் இந்துக்குடும்பத்தில் பிறந்தவர் அமிதாப் பச்சன். அவர் தந்தை டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு புகழ்பெற்ற இந்திக்கவிஞர் ஆவார். அவரது தாயார் தேஜி பச்சன் இன்றைய பாகிஸ்தான் , அன்றைய பைஸாலாபாத்தை சேர்ந்த ஒரு சீக்கியப்பெண்மணி ஆவார்.

ஆரம்ப காலத்தில் பச்சன் ‘இன்குலாப்’ என்றே அழைக்கப்பட்டார். அந்தப்பெயரானது இந்தியச் சுதந்திரப்போரட்ட காலத்தில் எழுப்பப்பட்ட தாரக மந்திரம் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் அவர் மறுநாமகரணமாக, அமிதாப் என்று அழைக்கப்பட்டார். அதன்பொருளாவது: ‘ அணையவே அணையாத சுடரொளி’ என்பதாகும்.

ஸ்ரீவத்ஸவா என்பது குடும்பப்பெயராக இருப்பினும், அவரது தந்தை பச்சன் எனும் பெயரைப் புனைப்பெயராக வைத்துக் கொண்டார். அந்தப் பெயரிலேயே, அவரது படைப்புகளை வெளியிட்டு வந்தார். திரைப்படங்களில் முதல்தோற்றத்தில் இருந்து அமிதாப் என்ற பெயரிலேயே நடிக்கத் தொடங்கினார். பச்சன் என்ற பெயரே நாளடைவில் எல்லா பொது நோக்கங்களுக்காகவும் அவரது தற்போதைய குடும்பத்தாரின் பெயராகவே மாறி விட்டது. அமிதாப், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் இரு மகன்களில் மூத்தவர் ஆவார். இரண்டாம் மைந்தன் அஜிதாப் ஆவார். அவரது தாயார் மேடைநாடகங்களில் நடித்துள்ளார்.

அவருக்கும் திரைப்பட வாய்ப்பு தேடிவந்தது. ஆனாலும் குடும்பப் பொறுப்புகளுக்கு முன்னுரிமை தந்து அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பச்சனின் பணி வாழ்க்கையில் விருப்பத்தேர்வுகள் செய்யும் போதெல்லாம் தாயாரின் செல்வாக்கு உரிய தாக்கத்தைச் செய்தது. அவரும் தன்மகன் மேடையில் நடுஇடம் பெறுவதையே வலியுறுத்தி வந்தார். ஆரம்பக்கல்வியை அலகாபாத் ஞான பிரபோதினி மற்றும் சிறுவர்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பிறகு நைனிடாலில் உள்ள ஷேர்வுட் கல்லூரியில் கலைத்துறையையே முக்கியப் பாடமாகப் பயின்றார்.

அதன்பின் டெல்லிப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கிரோரிமால் கல்லூரியில் அறிவியல் பாடம் கற்று அதில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தற்போதைய கொல்கத்தா அன்று கல்கத்தாவாக இருந்தபொழுது அங்கிருந்த ‘பேர்ட் அண்ட் கோ’ கப்பல் கம்பெனியில் இருபது வயதில் சரக்குத் தரகராக வேலை பார்த்து அதைக் கைவிட்டார். தணியாத தாகம் நடிப்பின்மேல் இருந்ததால் அதையே பின்தொடர்ந்தார். 1973 ஜூன் 3ஆம் நாள் நடிகை ஜெயபாதுரியை , வங்காளத் திருமணச் சடங்குகள்படிக் கைப்பிடித்தார். தம்பதியர்களுக்கு இருபிள்ளைகள் பிறந்தனர் . மகள் ஷ்வேதா மகன் அபிஷேக் ஆவார்கள்.

எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் பச்சன் 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். திரையுலகப் பின்னணியைத் தவிர, 1984 முதல் 1987 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் அமிதாப்=புக்கு ஹேப்பி பர்த் டே சொல்வதில் சினிமா பிரஸ் கிளப் டீம் மகிழ்ச்சிக் கொள்கிறது