சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸின் “தயாரிப்பு எண் 2” அப்டேட் ரிப்போர்ட்!

முதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது “தயாரிப்பு எண் 2” படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது. ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.
படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் கூறும்போது, “இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்” என்றார்.
படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி அவர் கூறும்போது, “நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த “தயாரிப்பு எண் 2” ஒரு நகைச்சுவை படம் ஆகும். ஷபிர் (இசை), U.K. செந்தில்குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப்குமார் (சண்டைப்பயிற்சி), கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.