21 நாட்கள் 50 இலட்சம் – “அமுதா” திரைப்படம் உருவான பின்னணி!

‘சதர்ன் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ‘சஃபீக்’ தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அமுதா’. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட ‘மியூக்கல்-திரில்லர்’ படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயாஸ்ரீ நடித்திருக்கிறார். இவருடன் அனீஸ்ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார். படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். ஜெயச்சந்திரன், சித்ரா மற்றும் வினித் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

இப்படம் குறித்து இயக்குநர் பி.எஸ்.அர்ஜூன் கூறுகையில், “சஸ்பென்ஸ். திரில்லர் நிறைந்த இத்திரைப்படம் 21 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று வித கதையோட்டத்தில் விறுவிறுப்பான இந்த திரில்லர் படத்தை குறைந்த பட்ஜெட்டில், அதுவும் 50 லட்சம் ரூபாய்க்குள் தயாரித்துள்ளோம். ஒரு கொலை… அதை சுற்றி நடக்கிற மர்மமான நிகழ்வுகள்.. யார் கொலையாளி… எதற்காக இந்த கொலை நடக்கிறது என்கிற புதிரான திரைக்கதையில் படம் உருவாக்கியுள்ளது.

நிச்சயமாக இது பேய்ப் படம் இல்லை. அதே நேரத்தில் ஒரு பேய்ப் படத்தில் எந்தளவிற்கு திகிலும், திருப்பங்களும் இருக்குமோ, அதைவிட அதிகமாகவே இந்தப் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கலாம்…” என்றார்.

விரைவில் இந்த ‘அமுதா’ திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.