என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மைதானம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடை, முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினி உட்பட படக்குழுவினர் ஒருசிலரைத் தவிர அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்ததால், மேடை முழுவதும் கருப்பு மயமாகக் காட்சி அளித்தது.

நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக நடன இயக்குநர் சாண்டி, ரஜினி டயலாக்குகள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கு நடனமாடினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுமார் 15 நிமிடம் தனது இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டார். தாரை தப்பட்டை உட்பட பல்வேறு விதமான ஸ்டைல் பாடல்களின் வித்தியாசமான தொகுப்பாக இது இருந்தது. காலா படக்குழுவினர் ஈஸ்வரிராவ், அருள்தாஸ் உள்ளிட்டோரின் கலந்துரையாடல் ரசிக்கும்படி இருந்தது. ரஜினியுடன் நடித்த தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

நடிகரும், காலா பட தயாரிப்பாளருமான தனுஷ் பேசும் போது, “தலைவரின் ‘பாட்ஷா’ படம் ரிலீஸானபோது நான் ரொம்ப சின்னப் பையன். 10 அல்லது 11 வயதிருக்கும். அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் காசெல்லாம் திருடி, விடியற்காலையில் இருந்து வரிசையில் நின்று, ஐந்தரை ரூபாய் டிக்கெட் எடுத்து முன் பெஞ்சில் அமர்ந்து கத்தி கத்திப் படம் பார்த்த ரசிகன் நான். அந்த ரசிகன், இன்று அவரை வைத்துப் படம் தயாரிக்கிற வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அதனால், இது தனுஷ் என்ற ஒரு நடிகர் தயாரித்த படமல்ல, வெங்கடேஷ் பிரபு என்ற ஒரு ரசிகன் தயாரித்த படமாக இதைப் பார்க்கிறேன். அதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

ரஜினி சாருக்கு புகழ்ச்சி பிடிக்காது. அதனால் ஒரு சில சம்பவங்களை மட்டும் நினைவுகூற விரும்புகிறேன். காலா படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின்போது, நான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தேன். 11 மணிக்கு முடிய வேண்டிய ஷூட்டிங் 2 மணி வரை நீடித்தது. நான் ரஜினி சாரி சென்று மெதுவாக நேரமாகிறதே பரவாயில்லையா எனக் கேட்டேன். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை. அதுக்கு தானே வந்திருக்கிறோம் என்றார். அந்த அற்பணிப்பு அவரை இந்தளவுக்கு கொண்டுவந்துள்ளது.

என்னிடமும் காலா கதையை கூறி சொல்லி பா.ரஞ்சித்திடன் கூறினார். இது ஒரு தயாரிப்பாளரை எப்படி மதிக்க வேண்டும் என்கிற பண்பை காட்டுகிறது. புகழ் அடைய இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று கஷ்டப்பட்டு, வேர்வை சிந்தி உழைத்த உச்சத்து வருவது. மற்றொன்று அப்படி உச்சத்தில் இருப்பவர்களை கடுமையாக விமர்சித்து புகழ்ச்சியடைது.

பட்ட மரம் தான் கல்லடிபடும். தன்மை விமர்சித்தவர்களுக்கும் அவர் அழைப்பிதழ் கொடுக்கச் சொன்னார். ரஜினி சாரின் வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் ஒரு வில்லன். பின்னர் குணச்சித்திர நடிகர், அப்புறம் ஸ்டைல் மன்னர், அடுத்து சூப்பர் ஸ்டார், இன்று தலைவர்…. (பலத்த கரகோஷம்) நாளை (மீண்டும் பயங்கர ஆரவாரம்)… அது இறைவன் கைகளில் இருக்கிறது.” என்றார் தனுஷ்.

விழாவில் பேசிய பா.ரஞ்சித், ” மகிழ்ச்சி. என் மீது நம்பிக்கை வைத்து, எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஜினி சாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கபாலி படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. அந்த படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கருத்துக்களை சொன்னேன். சினிமாத்தனமாக படம் செய்ய எனக்கு விருப்பமில்லை. காலா படம் மக்களின் சினிமா. இந்த படத்தில் பேசப்பட்டுள்ள அரசியல் மிகவும் முக்கியமானது. மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசியுள்ளோம். ரஜினியின் குரல் மிகவும் சக்தி வாய்ந்தது.

தாராவி செட் போட தினமும் சுமார் 800 பேர் வேலை செய்தார்கள். தொழிலாளர்கள் இல்லை என்றால் எதுவும் இல்லை. மனித மாண்புகளை மீட்டெடுப்பது தான் மிகவும் முக்கியமானது. அதற்கான போராட்டமாக இந்த படம் இருக்கும். நிலம் ரொம்ப முக்கியமானது. சுதந்திரம் அடைந்து இத்தனை காலம் ஆகியும், இன்னும் 60 சதவீத மக்களுக்கு ஏன் நிலம் இல்லை. இந்த கேள்வியை காலா எழுப்பும்.” என்று அவர் பேசினார்.

இதையடுத்து பேசிய ரஜினி, “இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நாம் கடைசியாக வெற்றி விழா கொண்டாடிய படம் சிவாஜி. அந்த விழாவுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வந்திருந்து வாழ்த்திப் பேசினார். அப்போது அவர் பேசிய விஷயம் மறக்க முடியாத ஒன்று. தமிழ்நாட்டின் மூலையெங்கும் 75 ஆண்டுகளாக ஒலித்த அந்தக் குரல் மீண்டும் கேட்காதா என தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். கூடிய விரைவில் அந்தக் குரல் ஒலிக்கும் என நம்புகிறேன். ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.


சிவாஜிக்குப் பின் எந்திரன் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஆனால், அந்தப் படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட முடியவில்லை. என் உடல்நலக் குறைவும் அதற்கு ஒரு காரணம். மருத்துவ சிகிச்சைக்குப் பின் மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், பிடித்ததை செய்யச் சொன்னார்கள். மனசு கெட்டுப் போய் விட்டால் உடம்பு கெட்டு விடும். எனக்கு சினிமாதான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்தேன். உடல்நலக் குறைவால் கைவிடப்பட்ட ராணா படத்தை, அனிமேஷன் தொழில்நுட்பத்தில் கோச்சடையான் என்ற பெயரில் எடுத்தோம். அந்த படமும் சரியாகப் போகவில்லை. அதனால் வெற்றி விழா கொண்டாட முடியவில்லை.

அதன் பிறகு நேரடியாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்தேன். அந்த படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. ஏனென்றால், அந்தப் படம் தண்ணீர் பிரச்னையைப் பற்றியது. தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு அணை கட்டுவதாக அந்தக் கதை இருக்கும். இமயமலைக்கு அடிக்கடி நான் செல்வதே கங்கை நதியைப் பார்க்கத்தான். அங்கே போய்ப் பார்த்தால், கங்கை நதி சில இடங்களில் ரௌத்ரமாகப் பாயும். சில இடங்களில் மௌன மாகப் பயணிக்கும். அதைப் பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்கும். என் வாழ்க்கையில் ஒரே கனவு, தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். அதற்கு அடுத்த நாளே என் கண்களை மூடி விட்டால் கூட கவலையில்லை. லிங்காவும் நினைத்த அளவுக்குப் போகவில்லை. அப்போது நான் உணர்ந்த விஷயம். நல்லவனாக இருக்க வேண்டும். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது.

அப்போதுதான் என் வயதுக்கு ஏற்ற படங்களைத் தேர்வு செய்யலாம் என்று தோன்றியது. தொடர்ந்து படங்கள் சரியாகப் போகாத காரணத்தால், ரஜினி அவ்வளவுதான் என்றார்கள். சிலர், இந்த குதிரை என ஓடிக் கொண்டே இருக்கிறது என யோசித்தார்கள். ஆண்டவன் ஓட வைக்கிறான், இந்த ரசிகர்கள் ஓட வைக்கிறார்கள். நான் என்ன செய்வது? யார் என்ன சொன்னாலும் என் பாதையில் நான் போய்க் கொண்டே இருக்கிறேன். அப்போதுதான் இயக்குநர் பா.ரஞ்சித் சொன்ன கபாலியில் நடித்தேன். நான் எதிர்பார்க்காத வெற்றியை அந்தப் படம் கொடுத்தது. அடுத்து என்ன படம் பண்ணலாம் என்று நினைத்தபோது வேடிக்கையாக ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். ஏம்மா, உங்க வுண்டர்பார்ல வந்து உங்க புருஷனை வச்சு மட்டும் தான் படம் எடுப்பீங்களா, மத்தவங்கள வச்சு எடுக்க மாட்டீங்களா என்று கேட்டேன். நம்மை எல்லாம் கண்ணுக்குத் தெரியாதா, அவர் தான் ஹீரோவான்னு கேட்டதற்கு அப்பா எனக்கு இது எல்லாம் தெரியாது, நீங்க அவரிடமே கேளுங்க என்றார் ஐஸ்வர்யா. தனுஷிடம் ஏதாவது ஐடியா இருக்கான்னு கேட்டதற்கு நீங்கள் கேட்காமல் நான் எப்படி கேட்பது அப்படின்னு சொன்னாங்க. நான் ஒரு படம் கொடுத்தால் பண்ணுவீங்களா என்று கேட்டதற்கு கண்டிப்பாக பண்ணுவேன் அப்பா என்றார்.

தனுஷ் என்னுடைய மாப்பிள்ளை என்பதற்காக சொல்லவில்லை அவர் ஒரு அருமையான பையன். அப்பா, அம்மாவை தெய்வமாக மதிக்கிறார். பொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார். நல்ல அப்பா, நல்ல மாப்பிள்ளை, நல்ல மனிதன், நல்ல திறமைசாலி. வெற்றிமாறன் ஒரு கதை சொன்னார். அருமையான கதை ஆனால் அரசியல். அப்போது எனக்கு அரசியலுக்கு வரும் ஐடியா இல்லை. ஜனங்களை நான் மறுபடியும் குழப்ப ஆசைப்படவில்லை. தயவு செய்து இந்த படம் வேண்டாம் என்றேன்.

இப்போது காலா. இது அரசியல் படம் கிடையாது. ஆனால் படத்தில் அரசியல் உண்டு. இது என் படமாகவும் இருக்கும். ரஞ்சித் படமாகவும் இருக்கும். நிறைய வித்தியாசங்கள் இருக்கும். என் திரைப்பட வரலாற்றில் பாட்ஷா ஆண்டனி, படையப்பா நீலாம்பரி இரண்டும் சவால் நிறைந்த வில்லன்கள். அந்த பாணியில் நானே படேகர் நடித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு தாய், தந்தைதான் முக்கியம். அடுத்து குடும்பம் முக்கியம். அதை பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் நம் கோட்டை. நீ என்ன யோசிக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய். ஒவ்வொரு சிந்தனைக்கும் ஒவ்வொரு கலர் உண்டு. அதை நாம் உணர வேண்டும். நல்ல விஷயங்களை யோசியுங்கள். அரசியல் அறிவிப்புக்கான நேரம் இன்னும் வரவில்லை. கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆண்டவனின் ஆசீர்வாதத்தால், மக்களின் அன்பினால் தமிழ்நாட்டுக்கு நல்ல நேரம் விரைவில் வரும் ”என்றார் ரஜினிகாந்த்.