மறைந்த எஸ்.பி.பி-க்கு திரைப் பிரபலங்கள் அஞ்சலி -முழு தொகுப்பு!

நேற்றைக்குக் காலமான பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு தமிழ்த் திரையுலகத்தை மட்டுமல்ல.. இந்தியத் திரையுலகத்தையே அதிர்ச்சுக்குள்ளாக்கியிருக்கிறது.

இந்தியத் திரையுலகத்தில் இருக்கும் பல்வேறு பிரபலங்களும் எஸ்.பி.பியின் மறைவுக்கு தங்களது இரங்கல் செய்தியை அளித்திருக்கிறார்கள்.

அவைகளின் தொகுப்பு இங்கே :

இசைஞானி இளையராஜா :

“பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னை பார்க்க காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கவில்லை. எங்கே போனாய். கந்தர்வர்களுக்காக பாடுவதற்காக போய் விட்டாயா…? இங்கு உலகம் சூனியமாக போய் விட்டது. உலகத்தில் ஒன்றுமே எனக்கு தெரியவில்லை. பேச பேச்சு வரவில்லை. சொல்ல வார்த்தை வரவில்லை. எல்லா துக்கத்துக்கும் அளவு இருக்கிறது. ஆனால், இதற்கு அளவே இல்லை…”

நடிகர் ரஜினிகாந்த் :

“என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள். உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் என்னுடன் வாழும். நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன். நம்முடன் இனி எஸ்.பி.பி இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

எஸ்.பி.பி. பாடலுக்கு ரசிகர்களாக இல்லாதவர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவரது கம்பீரமான குரல் நூற்றாண்டுக்கும் மேல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது மனிதநேயத்தை அனைவரும் நேசித்தார்கள். எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது”

நடிகர் கமல்ஹாசன் :

“வெகு சில பெரும் கலைஞர்களுக்கே தாம் வாழும் காலத்திலேயே அவர்தம் திறமைக்கு தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்.பி.பி. அவர்கள்.  நாடு தழுவிய புகழ் மழையில் நனைந்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அத்தனை ரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனாக எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அவர் நனைந்த மழையில் கொஞ்சம் நானும் நனைய அனுமதித்தமைக்கு மிக்க நன்றி. அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. பல மொழிகளில் நான்கு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்..”

பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ்  :

என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர்  போன்றவர். பாலு என்னை இவ்வளவு நேசித்தார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர் என்னை அண்ணா என்று கூப்பிடும்பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்கவில்லை. ஆனால் ஒருகூட பிறந்தவர் போல பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி. அவர்களும் சகோதர்களாக இருந்திருக்கலாம்.

பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டு பாடவும் செய்வார். உருவாக்கவும் செய்வார். ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார். அதை கேட்டவர்கள் யாரும்இவர் சங்கீதம் கற்றவரில்லை என்று சொல்லவே முடியாது.

எங்கள் இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ‘சிகரம்’ படத்தில் தான் பாடிய ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ என்ற பாடலை எனக்கு பரிசாக பாடியதாக பாலு கூறினார். அவர் பாடியவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.

யாரையும் புண்படுத்தமாட்டார். கூட இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக் கொள்வார். பாரிஸில் நாங்கள் தங்கியபோது சாப்பாடு கிடைக்கவில்லை, அப்பொழுது பாலு ‘ரூம் சர்வீஸ்’ என குரல் மாற்றி கிண்டல் செய்தார். பின்பு அனைவர்க்கும் அவரே சமைத்து பகிர்ந்தார். அவ்வளவு பசியில் அந்த சாப்பாடு ருசியாக இருந்தது. அன்றைக்கு நாங்கள் எல்லோரும் வயிறார சாப்பிட்டோம்.

நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில்தான். பாலு குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன். இந்த COVID நோய் பரவும் காலத்தில் நமக்கு ஒரு பெரிய இழப்பு நடந்துள்ளது. நான் இப்போது அமெரிக்காவில் இருப்பதால் அங்கேயிருந்து தமிழகம் வர அனுமதி இல்லை.

என்னால் கடைசியாக அவரைப் பார்க்க முடியவில்லை என ஒரு பக்கம்  வருத்தமாக இருந்தாலும், Stage-ல் பாலுவும் நானும் ஒரு ஓரமாக சிரித்துக் கொண்டிருப்போம். அப்படி பார்த்துவிட்டு, அசையாமல் இருக்கும் பாலுவை பார்க்க என் மனம் தாங்காது. நான் என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்…”

நடிகர் சிவகுமார் :

அரை நூற்றாண்டுக்கும் மேலாக எத்தனை ஆயிரம் பாடல்களை எத்தனை மொழிகளில் பாடிய உன்னதக் கலைஞன். மூச்சுக் காற்று முழுவதையும் பாடல் ஓசையாக மாற்றியவன். இமயத்தின் உச்சம் தொட்டும் பணிவின் வடிவமாக, பண்பின் சிகரமாக இறுதிவரையிலும் வெளிப்படுத்தியவன். ‘இதுவரை யிலும் மக்களுக்காக பாடியது போதும்; இனி என்னிடம் பாட வா’ என்று இறைவன் அழைத்துக்கொண்டான். போய் வா தம்பி…”

இயக்குநர் இமயம் பாரதிராஜா :

தன் இனிய குரலால் இத்தனையாண்டு காலம் ரசிகர்களைத் தாலாட்டிக் கொண்டிருந்தது எஸ்.பி.பி. இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஒரு இசை கலைஞராக.. கணக்கில் அடங்காத சாதனைகளைச் செய்துள்ளார். பல விருதுகளைக் காட்டிலும் அவரிடம் இருந்த மாபெரும் சொத்து.. அவருடைய மனித நேயம். எஸ்.பி.பி.யை எந்தவொரு இந்தியனும் ஒரு பாடகராக மட்டுமே பார்த்ததில்லை. இந்தியாவின் பெருமைக்குரிய விலை மதிப்பில்லாத சொத்தாகவே பார்த்தனர்.

எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட எஸ்.பி.பி. தென்னிந்தியாவின் நான்கு பெருமைக்குரிய முதல்வர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர்., என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய நால்வரோடும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றவர்.

பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியைப் பார்த்தால் எஸ்.பி.பி. இவர்களோடு எப்படிப்பட்ட உறவினை வைத்திருந்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் தெரிகிறது.

விலை மதிப்பில்லாத அந்த இசை கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்த ஒன்று மட்டுமே, அவருக்குத் தருகிற சரியான அங்கீகாரம். முதல்வருக்கு கலை உலகம் மற்றும் அவரது இசை ரசிகர்களின் சார்பில் கோடானு கோடி நன்றிகள்..!

பாடகி பி.சுசீலா :

எஸ்.பி.பி. இவ்வளவு சீக்கிரம் இறப்பார் என யாரும் நினைக்கவில்லை. நானும் அவரும் கடந்த 55 ஆண்டுகளாக ஆறு மொழிகளில் கிட்டத்தட்ட 3000 டூயட் பாடல்களை பாடியிருப்போம். அதுக்கு மேலேயும்கூட இருக்கலாம். ரெக்கார்டிங்கில் நானும், அவரும் மிகவும் உற்சாகமாகப் பாடியிருக்கிறோம்.

எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். இப்போது அவருடைய மறைவு எனது நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்ததுபோன்றே இருக்கிறது. பேச வார்த்தைகள் வரவில்லை. ரொம்பக் கஷ்டமாக உள்ளது. உலகம் முழுக்க அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு இப்படியொரு நிலைமை வருமென்று யாருமே நினைக்கவில்லை.

பாடகர்களுக்கு எல்லாம் கெட்ட காலம் வந்துவிட்டது என நினைக்கிறேன். இப்படி எதிர்பார்க்காதது எல்லாம் நடக்கிறது. ரசிகர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்.. முதன்முதலில் என்னுடன்தான் இசைக் கச்சேரிக்காக அமெரிக்காவுக்கு வந்தார். அங்கே 75 பாடல்களை பாடினோம் என்று அவர்தான் கணக்கு வைத்து சொன்னார். அதையெல்லாம் இப்போது நினைக்கும்போது மிகவும் கஷ்டமாக உள்ளது. அனைவரும் மனதை திடமாக்கிக் கொள்ளுங்கள். அவருடைய புகழ் என்றென்றும் நீடித்து நிலைத்து நிற்கட்டும்..!பாடகி எஸ்.ஜானகி :

“எஸ்.பி.பி.யை முதலில் ஆந்திராவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில்தான் சந்தித்தேன். அப்போது சிறுவனாக இருந்த அவர், திறமையாக பாடினார். அப்போதே பெரிய பாடகராக வருவாய் என்று வாழ்த்தினேன். நான் சொன்னது போலவே அவர் பின்னாளில் மிகச் சிறந்த பாடகரானார்.

கடந்த 1980-90-களில் நாங்கள் இருவரும் சந்திக்காத நாள்களே குறைவு. ஒரே நாளில் பல பாடல்களைப் பாடினோம். ரிக்கார்டிங்கின்போது கலகலப்பாக பேசுவார். அதெல்லாம் பசுமையான நினைவுகளாக எனக்குள் இருக்கிறது. 

என் மீது அதீத அன்பு கொண்டவர். நான் நடுவராகப் பங்கேற்ற இசை நிகழ்ச்சி குறித்து மறக்காமல் சொல்லுவார். அவரது மறைவு தகவலை அறிந்த தருணம் முதல், என் மனம் இயல்பாகவே இல்லை. விவரிக்க முடியாத துயரத்தில் தவிக்கிறேன்..”

பாடகி லதா மங்கேஷ்கர் :

“ஸ்ரீஎஸ்.பி.பாலசுப்ரமணியம் எனது அருமை தம்பி. நான் அவருடன் சேர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ். தெலுங்கு. கன்னடம். இந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறேன். அபூர்வமான கலைஞர். மிக நல்ல மனிதர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.”கவிஞர் வைரமுத்து :மறைந்தனையோ மகா கலைஞனே!சுரப்பதை நிறுத்திக் கொண்டதா,உன் தொண்டை அமுதம்?காற்றுவெளியை கட்டிப்போட்ட உன் நாவை,ஒட்டி போட்டதா மரண பசை?பாட்டுக் குயில் போனதென்றுகாட்டுக் குயில்கள் கதறுகின்றன.ஒலிப்பதிவு கூடங்கள் எல்லாம் ஓசைக் கொன்று,எழுந்து நின்று மவுனம் அனுஷ்டிக்கின்றன.மனித குலத்தின் அரைநூற்றாண்டின் மீதுஆதிக்கம் செலுத்தியவனே!மண் தூங்க பாடினாய், மலர் தூங்க பாடினாய்,கண் தூங்க பாடினாய், கடல் தூங்க பாடினாய்,நீ தூங்க ஒரு தாலாட்டை, எவர் பாடியது?மனிதன் பாடவியலாதென்று மரணம் பாடியதோ?பொன்மேடை கண்டாய், பூ மேடை கண்டாய்,இந்த உலக உருண்டையை, முப்பது முறை வலம் வந்து,கலை மேடை கண்டாய், என் கவி மேடை கண்டாய்,கடைசியில் நீ மண் மேடை காண்பது கண்டு,இடி விழுந்த கண்ணாடியாய்நெஞ்சு பொடி பொடியாய் போனதே பாலு…40 ஆண்டுகள் என் தமிழுக்குஇணையாகவும் துணையாகவும் வந்தவரே!இன்றுதான் என் பொன்மாலை பொழுதுஅஸ்தமன மலைகளில் விழுகிறது.என் சங்கீத ஜாதி முல்லை சருகாகி போனது.என் இளைய நிலா குழிக்குள் இறங்குகிறது.என் பனி விழும் மலர்வனம் பாலைவனமானது.காதல் ரோஜாவே கருகி போகிறது.என் வண்ணம் கொண்ட வெண்ணிலா,மரணக் கடலில் விழுந்துவிட்டது.மழைத் துளியை மறக்காத சாதக பறவை போல்உன்னை நினைத்தே நான் இருப்பேன்.ரோஜாக்களை நேசிக்கும் புல்புல் பறவை போல்உன் புகழையே நான் இசைப்பேன்.முகமது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ்,மண்ணா டே தியாகராஜ் பாகவதர், டிஎம் சவுந்திரராஜன்வரிசையில் காலம் தந்த கடைசி பெரும் பாடகர் நீ..!உன் உடலை குளிப்பாட்டுவதற்கு கங்கை வேண்டாம்.காவிரி, கிருஷ்ணா கோதாவரி வேண்டாம்.உலகம் பரவிய உன் அன்பர்களின்ஜோடிக் கண்கள் வடிக்கும் கோடித் துளிகளால்குளிப்பாட்டப்படுகிறாய் நீ..!இதோ என்னுடையதும் இரண்டு…..!!!பாடகி சித்ரா :

“ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. இசை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. அதேபோல் உலகமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு சிறந்த பாடகியாக என்னை வழி நடத்தியதற்கு அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது. எஸ்.பி.பி. ஸார்.. நீங்கள் இல்லாமல்.. உங்களது சிறப்பு இல்லாமல்.. எந்த ஒரு இசை நிகழ்ச்சியையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை…”

இயக்குநர் தங்கர்பச்சான் :

எஸ்.பி.பி.யின் மறைவு குறித்து பேசுவதா, அல்லது எழுதுவதா என்று எதுவுமே தோன்றாத மனநிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் இதுவரை எத்தனை மணி நேரங்களை இனி வரும் காலங்களில் எத்தனை மனி நேரங்களை செலவிடுவேன் என்பதை நான் மட்டுமே அறிவேன். 

காலம் கடந்து நிற்கும் மிக அரிதான அவரது பாடல்களை எடுக்க.. எடுக்க.. தோண்டத் தோண்ட.. கிடைக்கும் புதையல்கள் போலவே.. இனி வரும் தலைமுறையினரும் எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

நடிகர், இயக்குநர் ராஜ்கிரண் :

கடைசிவரையிலும் கள்ளங்கபடம் இல்லாத குழந்தையாகவே வாழ்ந்துவிட்டு இன்று இறைவனிடம் போய்ச் சேர்ந்துவிட்டார். ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஒரு காணொளியை வெளியிட்டார்.

அதில் தன் குடும்பத்தினருக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தான் மருத்துவமனைக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லை. இந்த இழப்பை தாங்க முடியவில்லை..”நடிகர் அர்ஜூன் :

“எஸ்.பி.பி. நமக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பொக்கிஷம். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவரது இசை சேவைக்காக அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும்..”நடிகர் மயில்சாமி :

“எஸ்.பி.பி.யின் உடல்தான் நம்மைவிட்டு விண்ணுலகம் சென்றிருக்கிறது. ஆனால் இப்போதும் நாட்டில் சாலைகளில் ஓடும் எந்தவொரு வாகனத்திலும் அவரது குரல்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அவர் இப்போதும் நம்முடன்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அவர் எவ்வளவோ விருதுகளை வாங்கியுள்ளார். அதைவிட கோடிக்கணக்கான ரசிகர்களின் நினைவில் அவர் வாழ்ந்தும் வருகிறார். அவருக்கு அந்த விருது வழங்கவில்லையெனில் அந்த விருதுக்குத்தான் கொடுப்பினை இல்லை என்பதாகும்…”

நடிகர் விஷால் :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு மிகவும் கவலை அளிக்கிறது. அவரது வாழ்க்கை பயணம் நிறைவடைந்தாலும், அவரது பாடல்கள் எப்போதும் நம்முடன் இருக்கும். இதன் மூலம் அவரது நினைவுகள் நம்முடைய இதயத்தை தொட்டு செல்லும்…”

நடிகர் சிவகார்த்திகேயன் :

இன்று காலைகூட ‘வெற்றி நிச்சயம்’ பாடலில்தான் எனது இன்றைய நாள் தொடங்கியது. உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். இவ்வுலகில் இசை இருக்கும்வரை உங்கள் புகழ் இருக்கும். கண்ணீருடன் விடை தருகிறோம். எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்…”

நடிகர் விவேக் :

சில பேருடைய வாழ்க்கைதான் சகாப்தம். அப்படிப்பட்ட சகாப்தம் இன்று மறைந்துவிட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு சங்கீத உலகுக்கும், சங்கீத ரசிகர்களின் வாழ்க்கையிலும் மிகப் பெரிய இழப்பு…”

நடிகர் ஆர்யா :

“நான் மனமுடைந்து போய் இருக்கிறேன். உங்களுடையை இழப்பை உணர்கிறோம். உங்கள் இசைக்கும் நினைவுகளுக்கும் நன்றி.”

ஜெயம் ரவி: “உங்கள் குரலால் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்.”

நடிகர் சிம்பு :

“சாதாரண பாடகர் இல்லை நம் எஸ்.பி.பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

எத்தனை ஆயிரம் பாடல்கள். ஒரு மனிதரால் பாடிக் கொண்டேயிருக்க முடியுமா.. சிட்டாய் பறந்து, பறந்து உலகை வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகள் நிகழ்த்திய குரல்களின் அரசன்.

என் குடும்பத்திற்கும், அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. ஒரு நாள் என் தந்தையின் இசையில் பாடுவதற்காக பாடும் நிலா வந்திருந்தார். அப்போது குட்டிப் பையனாக இருந்த நான் அந்தப் பாடலை ரிக்கார்ட் செய்வதற்காக அமர்ந்திருந்தேன். வேறு ஒருவராக இருந்திருந்தால்  பாட மறுத்திருப்பார்கள். ஆனால் என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்து பாடிக் கொடுத்தார் எஸ்.பி.பி. இன்றுவரையிலும் என்னால் மறக்க முடியாத நிகழ்வு இது.

இதைப் போல நான் கதாநாயகனாக நடித்த முதல் படமான காதல் அழிவதில்லை படத்தில் பாலு சார்தான் இவன்தான் நாயகன் என்ற பாடலை எனக்காகப் பாடிக் கொடுத்தார். முதன்முதலில் இவன்தான் நாயகன் என்று உச்சரித்த அந்தக் குரலால்தான் நான் இன்றைக்கும் நாயகனாகவே நடித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி மறவேன் பாலு ஸார்.

யாரையும் காயப்படுத்தாத அந்தகக் குணம். தவறிப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை.. ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து கடந்தவர்.

விடை கொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்கக் காத்திருக்கிறேன்.

பாடு நிலாவே.. லவ் யூ..”

நடிகை நயன்தாரா :

“தெய்வீகக் குரல் இனி இல்லை என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளைத் தாண்டி நம்மை மகிழ்வித்து திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஸாருடைய குரல், நம்முடைய எல்லாக் காலங்களுக்கும், காரணங்களுக்கும் பொருந்தியிருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும், உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில்கூட உங்களுடைய பாடல் மட்டுமே பொருந்துகிறது.

எங்கள் வாழ்வில் உங்களது ஆளுமை அப்படி நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறோம். இனி, பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும்.

உங்களை பிரிந்து வாடும் உங்களது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், உங்களது திரையுலக சகாக்களுக்கும் உலகமெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது..”

நடிகர் சல்மான்கான் :

“எஸ்.பி.பி. இறந்த செய்தியைக் கேட்டதும் என் இதயமே வெடித்துவிட்டது. சர்ச்சைக்கிடமில்லாத உங்களுடைய இசை மரபு என்றென்றும் தழைக்கும்..”

நடிகர் சரத்குமார் :

“பாடும் நிலா பாலுவின் இசையமுதம் அவர் மறைந்தாலும் நாம் சுவாசிக்கும் காற்றில் நிரந்தரமாக இருந்து அனைவரது செவிகளையும், இதயங்களையும் இன்னிசையால் நிரப்பிக் கொண்டிருக்கும்..”

நடிகர் பார்த்திபன் :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணம் அடைந்து வந்துவிடுவார் என்ற என்னுடைய நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் சொல்லியது போன்று நல்ல இதயம் படைத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்ற மனிதரை பார்ப்பது கடினம்…”

நடிகர் விக்ரம் பிரபு :

I am what I am because of the countless hit songs you have blessed your voice with, will miss talking to you anna. God bless your soul – Prabhu Ganesan

Remembering all the sweet memories I shared with you uncle. You always had the sweetest things to say Legend #Ripspb sir.

நடிகர் பிரசன்னா

SIR. YOU WILL BE DEEPLY MISSED SIR. WHAT A LEGEND! YOUR LEGACY WILL STAND STALL IN OUR HEARTS FOREVER.

நடிகர் அக்சய்குமார்

Deeply saddened to hear about the demise of Balasubrahmanyam ji.Just a few months back I’d interacted with him during a virtual concert in this lockdown..he seemed hale,hearty & his usual legendary self…life is truly unpredictable. My thoughts & prayers with his family.

நடிகர் தனுஷ் :

“எஸ்.பி.பி.யின் குரல் எல்லோரது இல்லங்களிலும் எதிரொலிக்கும். ஒவ்வொரு குடும்பத்திலும் அவர் ஒரு உறுப்பினர். உங்கள் குரல் இன்னும் பல தலைமுறை எங்களோடு இருக்கும்.”

நடிகர் சத்யராஜ் :

“உங்கள் குரலுக்கு வாயசைக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்துக்கு நான் உள்பட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை மறக்க முடியாது பாலு சார்…”

நடிகர் சிரஞ்சீவி :

“இன்றைய நாள் இசை உலகுக்கு இருண்ட நாள். இணையற்ற இசை மேதையின் மறைவால் ஒரு சகாப்தம் முடிந்துள்ளது. எனது வெற்றிக்கு எண்ணற்ற பாடல்களை பாலு பாடி உள்ளார். அவரது குரல் மொழி, கலாசார எல்லைகளை தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்களை இழுத்தது. அவரது இழப்பால் நொறுங்கி போய் இருக்கிறேன்.”

நடிகர் மோகன்  :

இன்று இசையுலகிற்கு ஒரு கருப்பு தினம். ஏனென்றால், ‘பாடும் நிலா’ நம்மை விட்டு மறைந்துவிட்டார். 45,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி நம்மை எல்லாம் மகிழ்த்தவர், இன்று நம்மிடம் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன்.

எஸ்.பி.பி. சார் செய்த சாதனைகளை இனிமேல் யாராவது செய்ய முடியுமா என்று தெரியவில்லை. அவருடைய இசைப் பயணத்தில் எனக்கும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் பாடலிலிருந்து கடைசியாக பாடிய பாடல்வரை அவருடைய குரல் ப்ரெஷ் ஆகவே இருக்கும்.

அதே போல் அனைவருக்குமே எதிரிகள் என்று யாராவது இருப்பார்கள். எனக்கு தெரிந்தவரை எதிரிகளே இல்லாத மனிதர் எஸ்.பி.பி. சார். அது மிகவும் அபூர்வம். அந்தளவுக்கு அனைவருடனும் மிகவும் நட்பாக பழகக் கூடியவர்.

எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுக்கும் எஸ்.பி.பி சார் பாடல்களே அமைந்திருக்கும். என்னுடைய படங்களிலும் அவர்தான் பாடியிருப்பார். அவர் குரலின் மேஜிக் என்னவென்றால், எஸ்.பி.பி. சார் யாருக்குப் பாடினாலும் அவர்களே பாடுவது போல் இருக்கும். அப்படித்தான் எனக்கும் அமைந்தது. அவர் பாடிய பல பாடல்களுக்கு நான் நடித்திருக்கிறேன் என்பது எனக்கு பெருமையான விஷயம்.

இன்னும் பல நூறு ஆண்டுகளானாலும் அந்தக் குரல் மூலம் நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திருக்கிறேன்.. அவர் குடும்பத்தாருக்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.”

நடிகர் விக்ரம் :

“மொழி பேதம் இன்றி இந்த உலகில் இசை பிடிக்கும் எனில், இவரையும் நிச்சயமாகப் பிடிக்கும்.  இவரது குரலின் வலம், கம்பிரம், அழகு, இவருடைய இசை ஞானம் அனைத்தையும் பல ஆண்டுகளாக ரசித்து போற்றிய கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். திரு.S.P.B. அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.   அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் :

“எஸ்.பி.பி.யின் மறைவு மிகப் பெரிய அதிர்ச்சியை தருகிறது. அவர் ஒரு இசை இமயம். எங்கள் தலைமுறையினர் அவரது குரலை கேட்டே வளர்ந்தோம். அவரது மரணம், தமிழ் திரைப்படத் துறைக்கும் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பு..”

பாடகர் ஸ்ரீநிவாஸ் :

“எல்லோருக்கும் முழுமையானவராக எஸ்.பி.பி. விளங்குகிறார். ‘ஆயிரம் நிலவே வா’ என்ற அவரது பாடலை கேட்ட பிறகு அனைவருமே அவரது நீங்கா ரசிகர்களானார்கள். இப்படி ஒரு நிலை வருமா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களுக்கு எல்லாம் அவர் ஒரு பீஷ்ம பிதாமகர் போல விளங்கினார்..”

பாடகர் கிருஷ் :

“அவரின் குரலை கேட்டுதான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இந்திய திரையுலகிற்கு இது ஒரு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும். என்னை மேடைகளில் நிற்க வைத்து அழகு பார்த்தவர் அவர்…”

பாடகர் வேல்முருகன் :

“எஸ்.பி.பி. ஒரு பாடல் பள்ளிக் கூடம். ஒரு பாடல் பாட வேண்டும் என்றால் அவரின் பாடலைதான் கேட்பார்கள். இந்த இழப்பு திரைத்துறையினருக்கு மட்டுமன்றி தமிழர்கள் அனைவருக்குமே மிகப் பெரிய வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது…”

நடிகை சரோஜா தேவி :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எப்போதும் எங்களோடுதான் இருப்பார். அவர் பாடல் பாடும்போது நம் எதிரில் அவர் இருப்பது போன்று தோன்றும்.”

நடிகை திரிஷா :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணத்தை எனது தனிப்பட்ட இழப்பாக கருதுகிறேன். நீங்கள் பாடிய படங்களில் நான் நடித்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.”

நடிகை ராதிகா :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அவர் மறைந்த இந்த நாளை இருண்ட நாள் என்றுதான் சொல்ல முடியும்…”

நடிகை குஷ்பு :

“கன்னட படம் ஒன்றில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியாக நான் நடித்தேன். அவர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நான் அவரை கடவுளுக்கு சமமாக நினைத்திருந்தேன். அவர் என்னை கட்டிப் பிடித்தால் எனது எல்லா கவலையும் போய்விடும்…”

நடிகை கவுதமி :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இல்லாத திரையுலகம், இசை உலகத்தை உணரவே கஷ்டமாக இருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.”

நடிகை சுகன்யா :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அற்புதமான மனிதர். நான் பாடகியாக இல்லாமல் நடிகையாக இருந்தாலும் என்னை 20 பாடல்கள் பாட வைத்தவர்…”

நடிகை ஹன்சிகா :

“எஸ்.பி.பி பாடகர் மட்டுமன்றி முழுமையான கலைஞர். இசை மூலமாக உலக்குக்கு பொழுதுபோக்கு தருவதற்காக பிறந்தார். அவரது இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு.”

நடிகை பிரியாமணி :

“நான் மனமுடைந்து இருக்கிறேன். நீங்கள் பாடிய அத்தனை இனிமையான பாடல்களுக்கும் நன்றி.”

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி :

“எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பு. நாங்கள் பல நேரங்களில் நிதி திரட்டுவதற்காக நிகழ்ச்சிகள் நடத்தும்போது எந்தவொரு முகச்சுழிப்பும் இல்லாமல் வந்து நிகழ்ச்சிகள் நடத்தியவர்.”

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் :

“இசை உலகத்துக்கு இன்று துக்க நாள். 24 மணி நேரத்தில் 22 பாடல்கள் பாடி சாதனை படைத்த மகா கலைஞன். நல்ல கலைஞன், மனிதனை இந்திய திரையுலகம் இழந்துவிட்டது.”

இயக்குநர் விக்ரமன் :

“என்னுடைய எல்லா படங்களிலும் பாடல்களை பாடியிருக்கிறார். அவர்தான் பாட வேண்டும் என்று பல நாட்கள் காத்து இருந்திருக்கிறேன். அவரது மறைவு அதிர்ச்சி கலந்த வேதனையை அளிக்கிறது…”

இயக்குநர் டி.ராஜேந்தர் :

“நான் இசையமைத்த எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உயிரிழந்து விட்டார் என்பதை தாங்க முடியவில்லை. அவரது உடல் வேண்டும் என்றால் மறையலாம், ஆனால் உலகம் இருக்கும் வரையில் அவரது காந்த குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.”

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் :

“உன் காந்த குரல் உன்னை விட்டு பிரிந்தாலும் நீ பாடிய பாடல்களை விட்டு பிரிவது இல்லை. உன் மூச்சுக் காற்று உடலை விட்டு பிரிந்தாலும் உன் குரல் கலந்த காற்றை விட்டு பிரிவது இல்லை.”

நடிகர் ஜி.வி.பிரகாஷ் :

“உங்கள் குரல் என்றும் நிலைத்து இருக்கும். அதற்கு முடிவே கிடையாது.”

இசையமைப்பாளர் இமான் :

“இசை ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். வலி ஏற்பட்டு இருக்கிறது. என்னுடைய இசையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வர இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ஆரம்ப பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம்தான் பாடி இருக்கிறார். அவருடைய கடைசி பாடல் என்னுடைய இசையில் நடந்திருப்பதை என்னால் வார்த்தையால் விவரிக்க முடியவில்லை.”

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் :

“பாடும் நிலா பாலு, நீ எங்கே சென்றாய்? உலகில் உள்ள ரசிகர்கள் எல்லோரும் உன்னை தேடுகிறார்கள்.

இசை உலகம் இனிமையான குரலை இழந்துவிட்டது. அருமையான, அற்புதமான குரல். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எத்தனை பாடல் பாடினாலும் திகட்டாது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காக உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் கண்ணீர் மல்க காணப்படுகிறார்கள். நாங்கள் சொல்லிக் கொடுக்கும் முன்பே பாடல்களை பாடி எல்லோருடைய அன்பைப் பெற்றவர் எஸ்.பி.பி.

எம்.எஸ்.வி, கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி. பிரகாஷ் என ஏராளமான இசை அமைப்பாளர்களிடம் வயது வித்தியாசமின்றி எல்லா தலைமுறைகளையும் சென்றடைந்த ஒரு பாடகர் உண்டு என்றால் அது எஸ்.பி.பி. ஒருவரால் மட்டுமே முடியும். அவரது இடத்தை அவர் ஒருவரால் மட்டும் நிரப்ப முடியும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும்..”

இசையமைப்பாளர் தேவா :

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் எனக்கு மிகவும் நல்ல நண்பர், மனிதர், சிறந்த குருநாதர். நான் நிறைய ராகங்களை அவரிடம்தான் கேட்டு தெரிந்துக் கொண்டேன். எந்த நடிகருக்கும் பாடல் பாடினாலும் அவர்கள் பாடுவது போன்றே குரலை மாற்றி பாடியவர்.”