பிகில் -ரிவியூ!

நீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா?

நீங்கள் ‘தளபதி’, பார்த்தாச்சா?

நீங்கள் ‘வேட்டையாடு விளையாடு’, கண்டிருக்கீங்களா?

அட.. ’பாட்ஷா’ -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா?

அப்புறம் இந்த ‘சக்தே இந்தியா’, ‘இறுதிச்சுற்று’, ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல் பண்ணி இருக்கீங்களா?- அப்படின்னா விஜய்- யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படம் உங்களுக்கு முழுமையாக பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் ஒரு சினிமா அதுவும் அட்லி & விஜய் காம்பினேஷன் படம் என்றால் சரவெடியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஆசைப்பட்டால் உங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது இந்த பிகில்.

இந்தக் கால யூத்களின் ஒருவரான சகல ஆன்லைன் மீடியாக்களையும் அப்டேட்-டாக வாட்ச் பண்ணும் டைரக்டர் அட்லீ இந்த பிகில் என்ற டைட்டிலில் சொல்லி இருக்கும் கதை என்னவென்றால் தாதா ராயப்பன் (விஜய்)நார்த் மெட்ராஸ் தாதா. இவன் அண்மையில் வந்த அசுரன் தனுஷ் விரும்பியது மாதிரி தனக்கு அடுத்து வரும் தலைமுறையாவது நன்கு படித்து விளையாட்டுக் கள் மூலம் முன்னேற வேண்டும் என்று ஆசை கொள்கிறார். இதன் பொருட்டு தனது மகன் மைக்கேலை (விஜய் பார்ட் 2) ஃபுட்பால் கேமில் ஈடுபடுத்து உற்சாகமூட்டுகிறார். ஆனால் இந்த கால் பந்தாண்ட போட்டியில் மகன் மைக்கேல் கலந்து கொள்ள செல்லும் முன்பாக அவரது கண்ணெதிரே ராயப்பன் எதிரிகளால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். அதனால் அப்செட் & ஆக்ரோசம் ஆன மைக்கேல் கால்பந்து ஆட்டத்தை விட்டு ஒதுங்கி விடுகிறான். ஆனாலும் தனது தம்பி கதிர் மூலமாக வசதி வாய்ப்பே இல்லாத படு ஏழை பெண்கள் கொண்ட ஒரு கால்பந்தாட்ட குழுவை ஆரம்பித்து அவர்களை தேசிய அளவில் தயார் செய்கிறார்.

இதனிடையே மைக்கேலின் மீது ஓல்ட் எதிரி தாக்குதல் நடத்துவது கதிரை தாக்குவதால் கதிருக்கு பதிலாக தானே கோச்சாக களமிறங்குகிறார் மைக்கேல் என்ற விஜய். ஆனால் மைக்கேலை ஒரு பக்கா ரவுடியாகவே பார்க்கும் பெண் வீராங்கனைகள் அவருக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இதனிடையே வழக்கச்ம் போல் டெல்லியில் தேர்வுக்குழுவில் இடம் பிடித்திருக்கும் வில்லன் ஜாக்கி ஷெராப் இவர்கள் அணியை போட்டியில் விளையாட விடக்கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார். இதையெல்லாம் தாண்டி தனது அணியை எப்படி வெற்றிபெற வைத்தார் மைக்கேல் என்பதுதான் கதை..!

அப்பா ராயப்பன், மகன் மைக்கேல் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய் மைக்கேல் கதாபாத்திரத்தை விட ராயப்பன் வேடத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக காதல், காமெடி என்று யங்க்ஸ்டரை கவர்பவர், ரவுடி ராயப்பனாக வரும் காட்சிகளில் நடிப்பில் முதிர்ச்சியை காட்டினாலும், மேக் அப்-பை சட்டை செய்யாதது மகா தப்பாக தெரிகிறச்து. விஜயை கல்லூரி மாணவர் என்றால் ஏற்றுக்கொள்ளும் நம் மனம், அவரை வயதான அப்பா வேடத்திற்கு மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. இது குறித்து பக்கத்து சீட் பெரியவர் ஒருவர், ’இதெல்லாம் ஜெய்சங்கர் படத்துலேயே ஒட்டலை’ என்றதுதான் ஹைலைட்.

ஹீரோயின் நயன்தாரா. ஆரம்பத்தில் உப்புக்குச் சப்பாணியாக வந்து பொய் கொண்டிருந்தவர் இடைவேளைக்குப்பிறகு பாஸ் மார்க் வாங்குகிறார். அப்புறம் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஆக வரும் இந்துஜா, வர்ஷா, ரோபோ சங்கர் மகள் உள்ளிட்ட அனைவரும் நம் மனதை கவர்கிறார்கள்..பரியேறும் பெருமாள் புகழ் கதிர் விஜய் படத்தில் நடித்திருக்கிறேன் என்று பீத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு என்று நினைத்து விட்டார் போலும். வில்லன்களான ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜியின் நடிப்பு நச். ஏ ஆர் ரஹ்மான் பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆகி விட்டாலும் காட்சிகளுடன் காணும் போது இன்னும் ஹிட் அடிக்கிறது ஜிகே விஷ்ணுவின் ஒளிப்பதிவு -சபாஷ் சொல்ல வைக்கிறது.

முன்னரே சொன்னது போல் ஸ்போர்ட்ஸ் படம் இது . அதனால் ஆரம்ப பேராவில் குறிப்பிடாத சில பல ஸ்போர்ட்ஸ் படங்களின் பல காட்சிகளும் அதன் சாயலும் இருக்கத்தான் செய்கிறது..அதுவாவது பரவாயில்லை.. டீம் ப்ளேயர்ஸை (நம்ம ரோபோ சங்கர் மவளை) குண்டம்மா என்றெல்லாம் உருவக் கேலி பேசி விட்டு அது ஊக்கப்படுத்தும் டெக்னிக் என்றெல்லாம் ஜால்ஜாப்பு சொல்லுவது அநாகரிகம். மேலும் திடீர் திடீரென ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி துப்பாக்கிசூடு, நீட் அனிதா, குறித்தெல்லாம் பேசுவது ஒட்டவே இல்லை.

மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. எல்லோருக்கும் பிடிக்கும் படம்தான் – பிகில்

நன்றி : ஆந்தை ரிப்போர்ட்டர்