ரஜினி & கமல் தொடங்கி வைத்த எம் ஜி ஆர். சினிமா!

0
224

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற அனிமேஷன் திரைப்படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமலஹாசனும் தொடங்கி வைத்தனர்.

முன்னாள் முதலமைச்சரும், நடிகருமான எம்ஜிஆர் நடித்து, இயக்கி, தயாரித்து அபார வெற்றி பெற்ற உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்ற பெயரில் தொடரும் என்று அறிவித்து நிறைவுறும். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ், அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கிறார். எம்ஜிஆரின் பிறந்தநாளான புதனன்று, சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் இதன் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ திரைப்படம் குறித்த அறிமுக வீடியோவை நடிகர் கமலஹாசன், வெளியிட்டார். விழாவில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ நடிகைகள் லதா, சௌகார் ஜானகி, சச்சு, குட்டி பத்மினி, அம்பிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர். சாகசங்கள் புரிவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ அனிமேஷன் திரைப்படத்தை, அருள்மூர்த்தி என்பவர் இயக்குகிறார். இமான் இசையமைக்கும் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு, எம்ஜிஆர் பிறந்த நாளில் வெளியாகிறது.

முன்னதாக போயஸ்கார்டனில் செய்தியாளர்கள் ரஜினிகாந்திடம் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:

எம்ஜிஆர் கொள்கையை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா?

கண்டிப்பாக, ஓரளவு பின்பற்றுகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி உள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

கமல் அரசியல் அறிவிப்பை நீங்கள் முன் கூட்டியே எதிர்பார்த்தீர்களா?

இல்லை நான் கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நீங்களும் கமலும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா?

அதற்கு காலம் தான் பதில் சொல்லும், பார்க்கலாம்.

சட்டமன்றத் தேர்தலை சந்திப்பேன் என்று கூறியுள்ளீர்கள் 6 மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா?

கண்டிப்பாக சந்திப்பேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது