வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து இதே ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலை, மூணார் ஆகிய காடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறை களையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். அதாவது கானுயிர் புகைப்படக் கலைஞராக தோன்றுகிறார். இந்த கானுயிர் புகைப்படத் துறை என்பது காட்டு உயிரினங்களை ஆவணப் படுத்துகிறது. சூழலியல் சீர்கேட்டால் பல உயிரினங்களை இழந்து வருகிறோம்.

காட்டு உயிரினங்களை காட்சிப்படுத்துவதன் மூலம், அவை மீதான அக்கறையை அதிகப் படுத்தலாம். கானுயிரைப் படம் பிடிப்பதற்கு காத்திருக்கும் பொறுமையும், எச்சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவசியம். இத்துறையில் இயங்கும் பெண்கள் சிலரைச் சந்தித்தேன். சவாலான துறைதான் என்றாலும் ஆப்பிரிக்கக் காடுகளில் சஃபாரி என்று சொல்லக்கூடிய ஜீப் உலா சென்றும், ட்ரைபேடையும் கேமராவையும் சுமந்தபடி காடு களுக்குள் சுற்றித் திரிந்தும் வாழ்க்கையை ருசிகரமாக அனுபவிக்கிறார்கள்… அதே சமயம் காடு வளங்களையும், காட்டு உயிர்களையும் அழித்து பிழைப்பு நடத்துவோரால் மிக பெரிய பாதிப்பும் உண்டு. அப்படியான முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “ கா “

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கதை, திரைக் கதை, வசனம், இயக்கம் – நாஞ்சில் .படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

ஒளிப்பதிவு – அறிவழகன்

இசை – அம்ரிஷ்

எடிட்டிங் – கோபிகிருஷ்ணா

கலை – லால்குடி இளையராஜா

ஸ்டன்ட் – விக்கி

நிர்வாக தயாரிப்பு – சங்கர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

இணை தயாரிப்பு – ரவிகாந்த்