அப்பாவுடன் நடிக்க ஆசை!- நெருப்புடா நாயகன் விக்ரம் பிரபு பேட்டி!

எஸ்.ஆர்.பிரபாகரனின் ‘சத்ரியன்’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்துள்ள அசோக் குமாரின் ‘நெருப்புடா’ வருகிற செப்டெம்பர் 8-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரம் பிரபு கைவசம் சூர்யாவின் ‘பக்கா’ என்ற படம் உள்ளது. தற்போது, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் விக்ரம் பிரபு. இதனை ‘கத்திக்கப்பல், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய தினேஷ் செல்வராஜ் என்பவர் இயக்கவுள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி. எஸ்.தாணு தயாரிக்கவுள்ளார்.

ஏற்கெனவே, விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’ படத்தையும் எஸ்.தாணு தயாரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். படத்தின் ஷூட்டிங்கை இம்மாத இறுதியில் ராமேஸ்வரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளனர். இதன் டைட்டில், ஹீரோயின், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே  நெருப்புடா’. அசோக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராக நடித்துள்ளார். இதில் நடித்த அனுபவம் குறித்து கேட்டபோது விக்ரம் பிரபு, “தீயணைப்புப் பணி சம்பந்தமான படம் என்பதால் முதலில் ‘தீ’, ‘நெற்றிக்கண்’, ‘நெருப்பு’ போன்ற தலைப்புகளை பரிசீலித்தோம். அந்த நேரத்தில், ‘கபாலி’ படத்தின் ‘நெருப்புடா’ பாடல் மிகவும் பிரபலமாகவே, அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம்.

தீயணைப்புத் துறையின் பின்னணியில் மனித உணர்வுகளைப் பேசுகிற படமாக இது இருக்கும். படத்தின் பெரும்பாலான காட்சிகளை சென்னை கண்ணகி நகரில் படமாக்கினோம். தீயணைப்புத் துறை பற்றிய படம் என்பதால் இயக்குநர் அசோக்குமார் அதுதொடர்பாக நிறைய ஆராய்ச்சி செய்து, பலரிடம் விசாரித்த பிறகே காட்சிகளை உருவாக்கினார். சுமார் 150 குடிசைகள் கொண்ட அரங்கு அமைத்து, பல துணை நடிகர்களை வைத்து தீ விபத்துக் காட்சிகளைப் படமாக்கினோம்.

நெருப்பு என்பது மிகவும் வலிமையான சக்தி. அவ்வளவு எளிதில் யாரும் கட்டுப்படுத்திவிட முடியாது. காற்றில் அது எப்படி திசை மாறும் என யாருமே கணிக்க முடியாது. எனவே, எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும், தீயின் அருகே என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது, எப்படி பாதுகாப்பாக நடிக்க வேண்டும் என பல முன்னேற்பாடு களுடன்தான் படப்பிடிப்பை நடத்தினோம். சில காட்சிகளில் அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன் என்றுதான் சொல்ல வேண்டும். தீயணைப்பு வீரர்களின் தியாகம், சேவை மிகவும் பெரியது. இந்தப் படம் வெளியான பிறகு, தீயணைப்பு வீரர்களைப் பார்த்தால் மக்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

இயக்குநர் ஆக வேண்டும் என்று தான் சினிமாவுக்கு வந்தேன். உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளேன். நடிகராகிவிட்டேன். இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறேன். நல்ல கதை அமைந்தால் மற்ற நாயகர்களை வைத்து படம் தயாரிக்கும் எண்ணமும் உள்ளது.

அடுத்ததாக ‘பக்கா’ உட்பட 2 படங்களில் நடித்து வருகிறேன். ‘கும்கி 2’ பற்றி தெரியவில்லை. நல்ல கதை அமைந்தால் அப்பாவுடன் நடிக்க ஆசை. வரும் காலத்தில் கண்டிப்பாக படம் இயக்குவேன்.

இவ்வாறு விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்கள்.