‘வேலைக்காரன்; படத்துக்காக ஸ்லம் செட் போட்டதில் இம்புட்டு விஷயமா?

 

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசி, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். படத்தில் வரும் ஸ்லம் ஏரியா அதாவது குடிசைப் பகுதி உண்மையானது அல்ல. அது படத்திற்காக போடப்பட்ட செட். 7.5 ஏக்கர் வெற்று நிலத்தை தேர்வு செய்து குடிசைப் பகுதி போன்று செட் போட்டுள்ளனர். இந்த செட்டை போட 55 நாட்கள் ஆகியுள்ளது.

 பார்த்தால் செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா செலவை பார்க்காமல் இவ்வளவு பெரிய செட் போட அனுமதி அளித்தாராம். வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு நிச்சயம் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான்  ‘வேலைக்காரன்’ படத்தின் அரங்கு உருவாக்க வீடியோ டிசம்பர் 10 அன்று யூடியூப்பில் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விசாரித்த போது, “சினிமாவில் கலை இயக்கம் என்பது மிக முக்கியமான துறை. திரைக்கதையில் கதை நடைபெறும் இடம்கூட ஒரு கதாபாத்திரமாகவே கொள்ளப்படுகிறது. அசலான வாழ்வைப் பிரதிபலிக்கும் படங்களில் கதை நடைபெறும் இடங்கள் உயிர்ப்புடன் இருக்கும். காட்சிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரடியாக படமாக்கப்படும்போது கதை மேல் நம்பகத்தன்மை கூடுகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் வாழும் இடங்களில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பை மேற்கொள்ளும்போது படக்குழுவுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

மிகச் சிறிய வீட்டின் ஓர் அறையில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஒருவர் படிக்கிறார் என்றால் அந்தக் காட்சியைப் படமாக்கும்போது அந்த உணர்வை தரும்படி பெரிய விளக்குகளும் உபயோகிக்கப்படும். ஏனெனில் மெழுகுவத்தி வெளிச்சம் நமது கண்களுக்குப் போதுமானதாக இருக்கும். ஆனால், கேமராவின் கண்களுக்கு அது போதாது. எனவே, அதற்கென விளக்குகள் பயன்படுத்த வேண்டும். கேமரா எளிதில் உள்நுழைந்து வெளிவரக்கூடிய இடவசதி தேவைப்படும். இந்த இடத்தில்தான் கலை இயக்குநரின் பணி இன்றியமையாததாகிறது. அந்தச் சிறிய வீட்டைப் போல அரங்கு வடிவமைக்கப்பட்டு எளிதில் பிரித்து உபயோகித்துக் கொள்ளும்படி உருவாக்கப்படும். இதனால் அந்த இடத்தை கலை இயக்குநர் உருவாக்கும்போது படப்பிடிப்புக்கு எளிதாகவும் யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் படம் பிடிக்க முடியும். இதில் உள்ள பெரிய ஆபத்து என்னவெனில் குறிப்பிட்ட அந்த இடம் நம்பகத்தன்மையுடன் தத்ரூபமாக உருவாக வேண்டும். அது கலை இயக்குநரின் திறமையையும் அனுபவத்தையும் சார்ந்தது. சில நேரங்களில் அமெச்சூராக உருவாக்கப்படும் அரங்குகள் விமர்சனத்துக்கும் கேளிக்கும் உள்ளாகிறது. படத்தை அணுகுவதில் பார்வையாளர்களுக்கு அந்நியத்தன்மை ஏற்படுகிறது.

அந்த வகையில் கலை இயக்குநர் முத்துராஜ் வேலைக்காரன் படத்துக்காக குப்பத்து வாழ்வியலை கண்முன் நிறுத்தும்விதமாக அமைத்திருக்கக்கூடிய அரங்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. சென்னை மாநகரில் கூவம் ஆற்றங்கரையை ஒட்டி, சாலைகளில் பிரமாண்டமாக வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பேனர்களுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இடங்கள் பல உள்ளன. அப்படி ஒரு இடத்தை மையப்படுத்தியே படத்தின் பல காட்சிகள் இடம்பெறுகின்றன. 50 நாள்களுக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில் இயக்குநர் மோகன் ராஜா சில இடங்களைத் தேர்ந்தெடுத்து படப்பிடிப்பை நடத்த தீர்மானிக்கிறார். ஆனால் அதில் உள்ள பிரச்னைகளைத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா எடுத்துக்கூறி தத்ரூபமாக அரங்கு அமைத்து படமாக்கலாம் என நம்பிக்கை தர, கலை இயக்குநர் முத்துராஜ் கைவண்ணத்தில், சென்னை – பிரசாத் லேப் பின்புறம் 7.5 ஏக்கர் பரப்பளவில் அசல் குப்பம் தயாராகியுள்ளது.

குறுகலான தெருக்கள், ஆஸ்படாஸ் போட்ட வீடுகள், பக்கத்திலே கால்வாய், பிளாஸ்டிக் குப்பைகள், கட்சிக்கொடிகள், சுவர் விளம்பரங்கள், ஓடாத லாரிகள், சிறிய கோயில்கள், மசூதி, சர்ச், பின்புறத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் என வீடியோவில் பார்க்கக்கூடிய காட்சிகள் ஒரு படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கு என்றால் நம்ப முடியவில்லை.

அரங்கு அமைக்கப்பட்ட அனுபவத்தை கலை இயக்குநர் முத்துராஜ் விவரிக்கிறார். “ஒவ்வொரு வீட்டில் இருப்பவர்களும் ஒவ்வொரு தொழில் செய்யக்கூடியவர்கள். செய்யும் தொழிலுக்கு ஏற்றபடி அவர்கள் வீட்டின் அமைப்பும், பயன்படுத்தக்கூடிய பொருள்களும் இருக்கும். அதை கவனமாக பதிவு செய்துள்ளோம். ஏனெனில் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு கதாபாத்திரம் தான். அரங்கு அமைப்பதற்காக பல இடங்களை நேரில் சென்று பார்த்து தகவல் சேகரித்தோம். நாங்கள் பார்த்த பெரும்பாலான இடங்களில் முருங்கை மரங்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. அதை கவனித்து இங்கும் முருங்கை மரத்தை பயன்படுத்தியுள்ளோம். 55 நாள்களில் இந்த இடத்தை உருவாக்கினோம். ஆர்.டி.ராஜா போன்ற ஒரு தயாரிப்பாளர் இல்லையென்றால் இது சாத்தியமாகியிருக்காது” என்று முத்துராஜ் கூறும்போது இதிலுள்ள உழைப்பையும் செய்நேர்த்தியையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இயக்குநர் மோகன் ராஜா பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்ததை உணரமுடிந்தது. “கலை இயக்குநர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா என அருமையான டீம் உருவானதால் தான் இப்படியொரு படைப்பு உருவாகியுள்ளது. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துக்காகப் போடப்பட்டிருந்த வீட்டை பிரிக்கும்போது என் கண் கலங்கியது. இந்த அரங்கை பிரியும்போது என்ன உணர்வு ஏற்படும் என்பதை நினைக்க முடியவில்லை. சாலையில் போகும்போது நாம் பிரமாண்ட பேனர்களை பார்ப்போம். குப்பத்து மக்கள் அதிகம் பார்ப்பது அந்த பேனர்களின் பின்புறத்தைத்தான். அதையும் இங்கு அமைத்துள்ளோம்” என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.

“ஒரு சினிமாவுக்கான செட்டாக இல்லாமல் அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரம் எப்படி உள்ளது என்பதை காட்டியுள்ளோம். 7.5 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. ரெமோ படத்துக்கு அடுத்து சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக வேலைக்காரன் இருக்கும்” என்று ஒளிப்பதிவாளர் ராம்ஜி கூறியுள்ளார்.

கலை இயக்கம் என்பது பாடல் காட்சிகளுக்காகப் பிரமாண்ட கண்ணாடி அரங்குகள் அமைப்பதும், ரயில்களிலிருந்து சாலை வரை பெயின்ட் அடிப்பதும் மட்டுமே என்று நம்பப்பட்டு வந்ததை வேலைக்காரன் படக்குழு மாற்றிக் காட்டியுள்ளது.

வேலைக்காரன் ஸ்லம் செட் உருவாக்க வீடியோ