பிக் பாஸ் பார்க்கலை! – ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்!

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து சமீபத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது…”ஒரு இசையமைப்பாளராக உருவாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்க்காகவே படித்து இசை துறையில் “உன்னை போல் ஒருவன்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானேன் ஆனால் காலச்சூழ்நிலை என்னை நடிகை ஆக்கிவிட்டது. அப்பா இதுவரை எனக்கு எந்த சிபாரிசும் யாரிடமும் செய்தது இல்லை. நான் சரியாகவோ தவறாகவோ எது செய்தாலும் அதற்கு நான் தான் பொறுப்பு.

விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்து அப்பா சாதித்து காட்டியுள்ளார். நான் இதுவரை அப்படி எதுவும் சாதிக்கவில்லை. ஆனால் நிச்சயம் அந்த இலக்கை அடையவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. படம் இயக்கம் எண்ணம் தற்போது இல்லை ஏனென்றால் இயக்குனர் என்பது பெரிய பொறுப்பு. அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் நிச்சயம் தவறவிடமாட்டேன்.

அதுமட்டுமல்லாமல் நான் இன்னும் என் நடிப்பில் திருப்தி அடையவில்லை. தெலுங்கு திரை உலகில் பலவிதமான விமர்சனங்கள் வந்தாலும் எனக்கு எல்லாம் கிடைத்து உள்ளது. அடுத்து என் தகுதியை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும்.என்னுடைய தங்கையும் முதல் தமிழ் படத்தில் நடிப்பது மிக்க மகிழ்ச்சி.

நமது நாட்டில் இன்று வரை ஆண்களுக்கு தான் அதிக மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கின்றது. மேலும் ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுகின்றனர், பெண் குழந்தை என்றால் கண்டுகொள்வதில்லை. இத்தகைய சூழலுக்கு நமது சமூகமே காரணம் ஆனால் என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, ஆண் பிள்ளை போன்றே வளர்த்துள்ளார்கள். எனக்கு ஆண் குழந்தை பிறந்தால் நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதுக்கிடையிலே நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி செய்துவிடுவேன். ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு எதிர்ப்பார்க்கிறேன். அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் கிடைக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது தந்தை நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை தான் இதுவரை பார்க்கவில்லை என்றும் விரைவில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பேன் என்றும் கூறினார்.