பல்வேறு தரப்பினரையும் கவர்ந்த ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அவருடைய இயக்கத்தில் விரைவில் ரிலீசாக இருக்கும் பத்தாவது படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.தீபாவளி வெளியீடாக வர இருந்த இந்தப்படம் தமிழக அரசின் உள்ளூர் வரிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்த புதுப்படங்கள் ரிலீஸ் ஆகாது என்ற திடீர் போராட்ட அறிவிப்பாலும், ‘மெர்சல்’ படத்தின் பிரம்மாண்ட ரிலீசாலும் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வருகிற என்கிற தகவல் முன்னமே தெரிந்திருந்தும் ஏன் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை சுசீந்திரன் வெளியிட முடிவு செய்தார் என்றால் ஒவ்வொரு தீபாவளியுமே என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானதாகத்தான் அமைந்திருக்கிறது என்றார்.
தீபாவளியையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தவர் அந்த அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…
“தீபாவளின்னாலே எனக்கு ரஜினி சாரோட ‘தளபதி’ படம் தான் ஞாபகத்துல வரும். ஏன்னா 1991-ல் ரிலீசான அந்தப் படத்தை தீபாவளி தினத்தில் பார்க்க வேண்டும் என்று பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிளை மிதிச்சிப் போய் முதல் நாள், முதல் ஷோ பார்த்தேன். அதற்கு பின்பு பல தீபாவளிகள் வந்தாலும் இப்போதும் என் மனதில் சந்தோஷமான தீபாவளியாக இருப்பது ‘வெண்ணிலா கபடி குழு’ படம் வந்த பின்பு கொண்டாடிய தீபாவளி தான். நான் முதன் முதலில் உழைத்து சம்பாதித்த பணத்தில் என் அப்பா, அம்மா அண்ணன், அக்கான்னு என்னோட குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த தீபாவளிக்காக துணி எடுத்து கொடுத்தேன். அப்போது எனது குடும்பத்தினர் அனைவருமே மிகவும் சந்தோஷப்பட்டோம்.
பின்பு எனக்கு திருமணம் நடந்தது. அதன் பின்பான தலை தீபாவளியும் ஒரு ஸ்பெஷாலாகத்தான் இருந்தது. அடுத்து எனது சகோதரியின் திருமணம். பின்பு எனக்கான பட வேலைகள் என்று மும்முரமாகி விட்டதால் தீபாவளியை ஒரு பெரிய பண்டிகையாக கொண்டாட முடியாத நிலை. ஆனால் இந்தாண்டு அப்படியல்ல.
இந்த வருடம் எனது படமான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தை தீபாவளிக்கு கொண்டு வர நினைத்திருந்தேன். எங்களுக்கு சிலருடைய உதவி கிடைக்காததால் ரிலீஸ் செய்ய முடிய வில்லை. அடுத்து புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சல்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். என்றவரிடம் நல்ல கதைகளை படமாக்கும் நீங்கள் ஏன் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவதில்லை என்று கேள்வி கேட்டார் ஒரு நிருபர்.
அதற்கு பதிலளித்த சுசீந்திரன் ”எனக்கு ஆசை தான் ஆனால் அவர்கள் சம்மதிக்க வேண்டுமே?. சூர்யாவிடம் ஒரு கதை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார். விஜய்யிடம் ஒரு கதை சொல்ல அனுமதி கேட்டேன். இதுவரை அவர் என்னைக் கூப்பிடவில்லை. அஜித்துக்காக ஒரு கதையை தயார் செய்து அவரது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. முடிந்தால் பத்திரிகையாளர்கள் நீங்களாவது அஜித்திடம் பேசி வாங்கிக் கொடுங்களேன்…” என்றார்.