அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

பிரபல நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி சென்னை டிரான்ஸ் கார் நிறுவனத்தில் இருந்து ஏ கிளாஸ் வகை பென்ஸ் காரை ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த காரை புதுச்சேரி முகவரி ஒன்றை கொடுத்து அந்த மாநிலத்தில் இருந்து பதிவு எண் பெற்று நடிகை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முகவரி என்று நடிகை அமலா பால் கொடுத்தது போலி முகவரி என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்துள்ளது. கேரளாவின் கொச்சி நகரில் நிரந்தர முகவரி கொண்டுள்ள அமலா பால், புதுச்சேரியில் நிரந்தர முகவரி இருப்பதாக கூறி பென்ஸ் காரை பதிவு செய்து 20 லட்சம் ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

புதுச்சேரியை பொறுத்தவரை 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட கார்களுக்கு 55 ஆயிரம் ரூபாய் மட்டும் சாலை வரி செலுத்தினால் போதும். ஆனால் கேரளாவில் காரின் மதிப்பில் 20 விழுக்காட்டை சாலை வரியாக செலுத்த வேண்டும். அந்த வகையில் அமலா பால் தான் வாங்கிய பென்ஸ் ஏ கிளாஸ் வகை காருக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் வரை கேரளாவில் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இதனை தவிர்த்து புதுச்சேரியில் போலியாக முகவரி கொடுத்து வெறும் 55 ஆயிரம் ரூபாய் மட்டும் வரி செலுத்தி தனது பென்ஸ் காரை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தான் அமலா பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

சிறை தண்டனை வரி ஏய்ப்பு செய்தவர்களை அதிகபட்சம் 7 ஆண்டு சிறையில் தள்ள முடியும். அபராதமும் விதிக்கலாம். இதில் கேரள போலீசார், எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.