ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’99 சாங்க்ஸ்’ இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் தயாரிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தின் தற்போதைய நிலை குறித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அன்பார்ந்த இசை ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளே,
உங்களில் பலர் ’99 சாங்க்ஸ்’ படத்தின் நிலை என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள்.
சரியான நாயகன் மற்றும் நாயகியைக் அடையாளம் காண, கடந்த சில வருடங்களாக தேவையான நேரமெடுத்து கிட்டத்தட்ட 1000 பேரை நாங்கள் பரிசீலித்துள்ளோம். திரையில் புத்துணர்ச்சியையும், திறமையையும் பிரதிபலிக்கும் அந்தச் சரியான, விசேஷமான நடிகர்களை நாங்கள் தேடிப்பிடித்துவிட்டோம். முதன்மை நடிகர்கள், கடந்த ஒரு வருடமாக கே.எம்.மியூஸிக் கன்சர்வேடரியில்,அவர்கள் கதாபாத்திரத்துக்கு தேவையான இசை வாத்தியங்களை வாசிக்க பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் ஹாலிவுட்டில் நடிப்புக்கான பிரத்யேக பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த வருடம் இந்தியாவில் படப்பிடிப்பு ஆரம்பமானது. தற்போதுதான் உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிந்துள்ளது. இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டோம்.
விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும். (பாடல்கள் 4 வருடங்களாக உருவாக்கப்பட்டி ருக்கிறது). ஒய்.எம் மூவிஸ், ஐடியல் எண்டர்டெய்ன்மெண்ட், இயக்குநர் விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி என அனைவரும் இந்த அற்புதமான இசைப் அனுபவமான ’99 ஸாங்க்ஸ்’ என்ற படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.
படத்தில் 99 பாடல்கள் இருக்குமா என அடிக்கடி என்னிடம் கேட்கப்படுகிறது. படத்தின் இசை ஆல்பத்தில் 10 அல்லது 12 பாடல்கள் இருக்கும். அது உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.
தீப ஒளித் திருநாளைக் கொண்டாடுங்கள், வரும் புது வருடம் நம் அனைவருக்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் தரும் என நம்புகிறேன். எல்லாபுகழும் இறைவனுக்கே
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருக்கிறார்.