‘கேக்காமலே கேட்கும்’ படத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா?

கன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’. சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளன்ர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன். கன்னடத்தில் 4 படங்களை இயக்கியிருக்கிறேன். ஐந்தாவது படமாக ‘கேக்காமலே கேட்கும்’ படத்தை தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் இயக்கியிருக்கிறேன். சமீபகாலத்தில் நிறைய பேய் படங்கள் வெளியாகியுள்ளது. அந்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படம் இருக்கும். இதில் இதுவரை யாரும் கையாளாத ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறேன்.

நிஜத்தில் பேய், பிசாசு எல்லாம் கிடையாது என்பது என் நம்பிக்கை! இன்று அனைவர் கையிலும் இருக்கும் ஒரு பொருள் மொபைல் ஃபோன். அந்த மொபைல் ஃபோனை மையமாக வைத்து இந்த படத்தின் கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன். அந்த கதை என்ன என்பது படம் வெளியாகும் வரை சஸ்பென்சாக இருக்கட்டும்’’ என்றார்.

அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள்.