தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான படம் – துப்பறிவாளன்

தமிழக அரசியல் போலத் தான் தமிழ் சினிமாவும். எப்போது யார் யார் கூட்டு சேர்வார்கள் என்பதை கணிக்க முடியாது. அப்படி ஒரு கணிக்க முடியாத கூட்டணி தான் விஷாலும் மிஷ்கினும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம். விஷாலும் மிஷ்கினும் முகமூடி படத்திலேயே இணைந்திருக்க வேண்டியவர்களாம். முகமூடி கதை முதலில் விஷாலுக்கு தான் வந்திருக்கிறது. அப்போது விஷால் சில கமிட்மெண்ட்களில் இருந்ததால் இணைய முடியாமல் போயிருக்கிறது. ஆனால் இருவருக்குள்ளான நட்பு அப்படியே இருந்திருக்கிறது.

இது குறித்து விஷால் என்ன சொல்கிறார்? ‘இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம்’னு எட்டு வருஷங்களுக்கு முன்னாடிப் பேச ஆரம்பிச்சோம். இந்த எட்டு வருஷங்கள்ல நாங்க சேர்ந்து படம் பண்ண, மூணு முறை வாய்ப்பு வந்துச்சு. ஆனால், ஒவ்வொரு முறையும் அவரோட வாய்க் கொழுப்புனால அது மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. அவர் என் முக்கியமான நண்பர். அதனால என்கிட்ட எப்படிப் பேசினாலும் பிரச்னை இல்லை. ஆனால், தயாரிப்பாளர்னு வரும்போது, ‘நான் இப்படித்தான் இருப்பேன், இப்படித்தான் பேசுவேன்’னு தன் நிலையில் விடாப்பிடியா நின்னதால நாங்க சேர்ற வாய்ப்புத் தள்ளிப்போனது. அது இப்போ எட்டு வருஷம் கழிச்சு, ‘துப்பறிவாளன்’ மூலமா நிறைவேறியிருக்கு.

சேர்ந்து படம் பண்றோம்னு முடிவானதும், ‘எந்த மாதிரியான படம் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க’னு கேட்டவர், மூணு ஜானர்கள்ல வெவ்வேறு கதைகள் சொன்னார். ‘ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இல்லாம ஷெர்லக்ஹோம்ஸ் மாதிரியான ஒரு ஜானர் இருக்கு’னு சொல்லிட்டு அவர் சொன்ன லைன்தான் இந்தக் கதை. இது நிச்சயம் என் கரியர்ல ஒரு தரமான படமா இருக்கும். தொடர்ந்து டிடெக்டிவ் சீரிஸா இதைப் பண்ணலாம்னு இருக்கோம்’ என்றார்.

மிஷ்கினும் விஷாலும் இணைந்திருக்கும் துப்பறிவாளன் படம் இருவருக்குமே ஃப்ரெஷாக இருக்கும் என்பது டீசர் மற்றும் மேக்கிங்கிலேயே தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் டைப்பிலான விறுவிறுப்பான ஸ்டைலிஷான துப்பறியும் படங்களுக்கு விதை போட்டிருக்கிறார்கள் விஷாலும் மிஷ்கினும்.