சின்னத்திரை நாயகியை திருமணம் செய்யப் போகும் நடிகர் & தயாரிப்பாளர் சுரேஷ்!

விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’, விஜய் ஆன்டனி நடித்த ‘சலீம்’ படங்களை தயாரித்தவர் ஸ்டுடியோ-9ஆர்.கே.சுரேஷ். இவர் சாட்டை, தாரைதப்பட்டை, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களையும் வெளியிட்டுள்ளார். இவரின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் வில்லனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாலா. அதை தொடர்ந்து ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்த இவர் தற்போது விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், உதயநிதியுடன் ஒரு படம், ஹரஹரமஹாதேவகி, பள்ளிப்பருவத்திலே ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அத்துடன் பில்லாபாண்டி, வேட்டை நாய், தனிமுகன் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வரும் இவர் மேலும் பல படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். பில்லாபாண்டி படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடந்த போது தான் பெப்ஸி பிரச்சனை உருவானது குறிப்பிடத்தக்கது.

தற்போது படு பிசியாக இருக்கும் ஆர்.கே. சுரேஷ் தனக்கு கல்யாணம் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தன் திருமணம் குறித்து அறிவித்துள்ளார். சுமங்கலி சீரியலில் நடிக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த திவ்யாவை இவர் மணக்கிறார். இவர்களது திருமணம் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது. “இது காதல் திருமணம் அல்ல. திவ்யா என் உறவு பெண். இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும்” என்று ஆர்.கே.சுரேஷ் தெரிவித்தார்.

 

அவரைத் தொடர்ந்து பேசிய திவ்யா, “எங்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. இது புரட்டாசி மாதம் என்பதால் ஐப்பசியில் ஒரு நல்ல நாளில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இப்போது நான் அடங்காதே படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். அதே போல் சுமங்கலி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறேன். இதன் பிறகு சினிமா சீரியல் என எதிலும் ஒப்பந்தமாக மாட்டேன். முழு நேர இல்லத்தரசி ஆகிவிடுவேன். சுமங்கலி சீரியலில் ஏற்கெனவே போட்ட ஒப்பந்தத்தின்படி சீரியல் முடிகிறவரை நடித்துக் கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.